Friday, January 27, 2012

செயல்பாட்டாளர்கள் விஸா பிரச்சினைக்கு இன்னும் தீர்வு பெறப்படவில்லை



M. ஷாமில் முஹம்மட்
இஸ்லாமிய போதனைகளை மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இஸ்லாமிய போதகர்கள், இஸ்லாமிய ஆர்வலர்கள் வருவது என்பது பல நூற்றாண்டு பாரமம்பரியம். இந்த நிலையில் கடந்த கிழமை சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்திருந்த 161 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு தனது குடிவரவு குடியகல்வு திணைக்களம் மூலம் உத்தரவிட்டது. 
அது தொடர்பாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் செயல்குழு கடந்த வியாழன் கூடி ஆராய்ந்துள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் சிரேஷ்ட அமைச்சர் பௌஸி,பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர்  இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவதாக தெரிவித்தார்கள் , நீதியமைச்ர் ரவூப் ஹக்கீம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜனாதிபதியைச் சந்தித்து இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது .
அத்துடன் கடந்த ஞாயிறு மாலை கிராண்ட் பாஸிலுள்ள தப்லீக் தலைமையகத்திற்கு விஜயம் செய்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் தப்லீக் இயக்க பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் பல அரசியல் பிரமுகர்களின் முயற்சியால் இந்த விடயம் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்தது .
அதை தொடர்ந்து திங்கட்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேராவுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன்போது இஸ்லாம் குறித்து முஸ்லிம்களுக்கு போதனைகளை நடத்துவதற்கு இலங்கை வரும் தப்லீக் ஜமாஅத் இயக்கத்தவர்கள், கிராண்ட்பாஸிலுள்ள அதன் தலைமையகமான மர்கசின் சிபாரிசுடன் வந்தால் விஸா வழங்குவது என இணக்கம் காணப்பட்டதாக முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி தெரிவித்தார் .
அதேவேளை மார்க்க விடயத்துடன் தொடர்பான விஸாவுக்கான விண்ணப்பங்கள் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் ஊடாக விஸாவுக்கு விண்ணபிக்கப்படும் நடைமுறை இருந்து வருகின்றது . ஆக தப்லீக் ஜமாஅத் இயக்க வெளிநாட்டு உறுப்பினர்கள் கிராண்ட் தப்லீக் தலைமையகத்தின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் ஊடாக விஸாவுக்கு விண்ணபிக்க முடியும் என்று தெரிகிறது .
இங்கு அவதானிக்கப்படவேண்டிய விடயம் தப்லீக் ஜமாஅத் இயக்கம் தான் எதிர்கொண்ட பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை தனக்கு மட்டும் கண்டுள்ளதாக தெரிகிறது. அதில் நியாயமும் உண்டு அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு ஒன்றை கண்டுள்ளார்கள் ஆனால் தப்லீக் ஜமாஅத் இயக்கம் எதிர்கொண்ட பிரச்சினை அந்த இயக்கத்தின் பிரச்சினை மட்டுமல்ல அது முழு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்,
இலங்கையில் பல இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கிறது அதன் வெளிநாட்டு உறுப்பினர்கள் , வெளிநாட்டு பிரமுகர்கள் எப்போதும் வந்துபோகும் நிலை காணப்படுகிறது அவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய மற்றும் சமூக போதனைகளில் ஈடுபடுவதும் வழக்கம் மற்ற அமைப்புகள் தப்லீக் மார்கசின் ஊடாக தமது வெளிநாட்டு உறுப்பினர்கள் பிரமுகர்களுக்காக அனுமதி கோருவது சட்ட ரீதியிலும் நடைமுறை ரீதிலும் அசாத்தியமானது.  தப்லீக் தவிர்ந்த மற்ற அமைப்புகள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. தப்லீக் ஜமாஅத் இயக்கம் எதிர்கொண்ட பிரச்சினைக்கு தப்லீக் ஜமாஅத் தீர்வை கண்டுகொண்டுள்ளது ஆனால் பொதுவில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும்  பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
எழுந்துள்ள முஸ்லிம் சமுகத்தின் பொது பிரச்சினைக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவம் என்று வர்ணிக்கப்படும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தீர்வை பெற்றுகொடுக்கவேண்டும் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் கிராண்ட் தப்லீக் தலைமையகத்தின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் ஊடாக விஸாவுக்கு விண்ணபிக்க முடியும் தப்லீக் ஜமாஅத் இயக்கம் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட இயக்கமாகும் இலங்கைக்கு வருகை தரும் அதன் வெளிநாட்டு உறுப்பினர்கள் தொடர்பில் மாதாந்தம் இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்து வந்துள்ளது அப்படிப்பட்ட அமைப்புக்கு இந்த நிலையென்றால் ஏனைய அமைப்புகள் பற்றி சிந்தித்து பார்க்கவேண்டும்  அந்த அமைப்பின் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் நிலை என்ன ?
சரி அவர்கள் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் ஊடாக விஸாவுக்கு விண்ணபிக்க முடியும் என்று கொள்ளமுடியுமா ? முடியாது காரணம் இலங்கையில் ஏற்கனவே முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் ஊடாக விஸாவுக்கு விண்ணபிக்கும் நடைமுறை இருந்த போதும் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு தப்லீக் தலைமையகத்தின் உறுதிப்படுத்தல் கடிதமும் கோரப்பட்டுள்ளது, ஆகவே வேறு இயக்க உறுப்பினர்கள் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் ஊடாக மட்டும் விஸாவுக்கு விண்ணபிக்கும் போது அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் கூடிய வாய்ப்பு உண்டு என்பது தெளிவாகிறது.
இந்த நிலையில் கடந்த வருடம் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு நினைவு படுத்துவது நிலமையை புரிந்து கொள்ள உதவும். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 14 ஆம் இந்தியாவை சேர்ந்த மௌலான மௌலவி சைத்து முஹமத் சாலிஹு பாபுல் ஹுதா என்ற ஹன்தஸ்ச மின்ஹாஜியா அரபிக் கல்லூரி அதிபருக்கு வதிவிட விசா நீடிப்பு தொடர்பாக முஸ்லிம் மத கலாச்சார திணைகளத்தின் ஊடாக கோரப்பட்டபோது புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சு வதிவிட விசாவை நீடிப்பதற்கு அந்த பிரதேச கிராம அதிகாரி மற்றும் பிரதேச செயலாளரின் பரிந்துரை கடிதங்களை கோரியிருந்தது தவறினால் விஸா நீடிப்பு பெறமுடியாது என்று அறிவிக்கபட்டது.
முஸ்லிம் மத கலாச்சார திணைக்களம் இலங்கையில் உள்ள மஸ்ஜிதுகள், தக்கியாக்கள் மதரஸாக்கள் என்பனவற்றை அந்த திணைக்களம் உருவாக்கபட்ட 1980 ஆம் ஆண்டில் இருந்து கண்காணித்து வரும் நிலையில் பிரதேச செயலாளரின் பரிந்துரை கடிதம் கோரப்பட்டது அனைத்து மஸ்ஜிதுகளும் , நிறுவனங்களும் இந்த முஸ்லிம் மத கலாச்சார திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் போது அந்த திணைக்களத்தின் பரிந்துரை கடிதத்தின் பிரகாரமே அரசின் ஏனைய திணைக்களங்கள் செயல்பட்டு வந்துள்ளது இந்த நிலையில் பிரதேச செயலாளரின் பரிந்துரை கடிதம் கோரப்பட்டது    புறம்பான அணுகுமுறையாக இருந்தது .
இது முஸ்லிம் விவகாரங்களையும் முஸ்லிம் மார்க்கத்துடன் தொடர்பான விடயங்களையும் அரசின் முஸ்லிம் மத கலாச்சார திணைக்களம் கையால்வதற்கு மேலதிகமாக முஸ்லிம் மார்க்க விடயங்களை புரிந்துகொள்ளாத திணைக் களங்களின் கையில் கொடுத்திருந்தது .
அதேபோன்று கடந்த வருடம் தொப்பி, ஹிஜாப் அணிந்த நிலையில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தடைகளை விதித்தது ஆனால் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் அனுமதி வழங்கியது முஸ்லிம் பெண்கள் ‘பர்தா’ அணிந்த நிலையில் அடையாள அட்டைக்காக படம்பிடிக்க முடியும் எனவும் முஸ்லிம் உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய முஸ்லிம்களும் தலையை மூடிய நிலையில், நெற்றியோ, காதோ மறையாதவாறு புகைப்படம் பிடிக்க அனுமதி வழங்குவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தார்.
ஆனால் தற்போது நடைமுறையில் அடையாள அட்டைக்கான புகைப்பட விடயத்தில் பல கெடுபிடிகள் நிலவுவதாக அறிவிக்கபடுகிறது. இது தொடர்பான முறைபாடுகள் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக ஜம்இயதுல் உலமா பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகர எதிர்கட்சி தலைவர் மிலிந்த மொரகொடஅடங்களாக ஏனைய அரசியல் வாதிகளுக்கு அறிவித்துள்ளது. ஏன் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் முகாமையாளர் அண்மையில் தனது சாரதி அனுமதி பத்திரத்தை புதிப்பிக்க சென்றபோது கூட தொப்பியை நீக்கியும் , தாடியை கத்தரித்து குறைத்து பின்னர்தான் புகைப்படம் எடுப்பதற்கு தான் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் .
இவ்வாறு நாட்டின் நிலை இருக்கும்போது தற்போது விஸா தொடர்பான விடத்தை கையாள்வதில் சிக்கல் தோன்றியுள்ளது. மேற்சொன்ன சம்பவங்கள் தற்போது எழுந்துள்ள பிரச்சினையின் வடிவத்தை ஊகிக்க சிறந்த உதாரணங்களாகும் . தற்போது எழுந்துள்ள விஸா பிரச்சினை கண்டிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பொதுப் பிரச்சினையாக கையாண்டு தீர்வு காணப்படவேண்டும் . அகில இலங்கை ஜம்இயதுல் உலமா  இந்த பிரச்சினையை ஒரு இயக்கத்துடன் தொடர்பான பிரச்சினையாக கையாளாது முஸ்லிம் சமூகத்தின் பொதுப் பிரச்சினையாக எடுத்து கையாளவேண்டும். இதுதான் தீர்வை பெற்றுக்கொள்ள சரியான சந்தர்பம் தவறவிட்டால் தினமும் பல பிரச்சினைகளை தீர்வு காணவேண்டி ஏற்படலாம்
இந்த சந்தர்பத்தில் ஒன்றை நினைவு படுத்தவேண்டும் இலங்கையில் சுற்றுல்லா விஸாபெற்று இலங்கைக்குள் பிரவேசித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து கடந்த காலங்களில் நூற்று கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக நாடுகடத்தப்பட்டுள்ளனர். அதனுடன் ஒப்பிட்டு நோக்கும்போது அதிகாரிகளும் , பொலிசாரும் இஸ்லாமிய போதனையில் ஈடுபட்ட நபர்களை கையான்ட விதம் பாராட்டத்தக்கது.

No comments:

Post a Comment