Monday, January 30, 2012

யாழ்ப்பாண சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கை!!



“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி, எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்களும், உங்களைப் போன்ற அடிமைகளே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்லுபவர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.” (அல்குர்ஆன் 7:194)

யாழ்ப்பாணம் சோனக தெருவில் மீலாதுன் நபி கொண்டாட்டம் வருகிற 5ம் திகதி நடக்க இருக்கிறது. பரிசளிப்பு, பேச்சு, விளையாட்டு போட்டி, அலங்கார தோரணங்கள் என களைகட்டப் போகிறது சோனகதெரு. அப்படி ஒரு சோனக தெருவை பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது நம் சமூகத்திற்கு. 
 ஏற்பாட்டாளர்கள் நாங்கள் மீலாதுன் நபி கொண்டடாடவில்லை. “யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்று கூடல்” என்று உடான்ஸ் விடுகிறார்கள். அதை மீலாதுன் நபி தினத்தில் ஏன் வைக்கிறார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.

சாராயக்கடையில் வைத்து ஸம்ஸம் தண்ணி குடிக்க வாருங்கள் என கூப்பிட்டால் எது சரி? எது பிழை? சாராயக்கடை என்பதும் உண்மை. அஙகே இவர்கள் வழங்குவது ஸம்ஸம் தண்ணீர் என்பதும் உண்மை.  எதை எந்த இடத்தில் வழங்க வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.  அது போன்றே எதை எந்த தருணத்தில் செய்வது என்பதிலும் சம்மேளனத்திற்கும் அதனுடன் இணைந்து செயற்படுபவர்களிற்கும் தெளிவு இருக்க வேண்டும்.

“யாழ் முஸ்லிம் வலைத்தளம்” எனும் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட சமூகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் இணையத்தில் “மீலாது நபியும் கிறிஸ்மஸும்” எனும் சிற்பான ஒரு கட்டுரை வெளியானமையை இங்கு குறிப்பிடுவது சிறப்பானது.  இஸ்லாத்தில் இல்லாத கொண்டாட்டங்களை விழாவாகவோ, ஒன்று கூடலாகவோ, கொண்டாட்டமாகவோ எடுப்பது பித்ஆ. அவ்வாறு செய்வது இறைவனின் கோபத்தையும் சாபத்தையும் பெற்றுக்கொள்ளும். 

புலிகளால் சீரழிக்கப்பட்ட சமுதாயம். 20 வருட அகதி வாழ்வின் மீட்சியில் தாயக மண்ணில் மீண்டும் வாழ முற்படுகையில் இவ்வாறான அநாச்சாரங்களை எமது சொந்த அரசியல் அபிசாஷைகளையும், உணர்வு ரீதியான சந்தோஷங்களையும் அடைவதற்காக சமூகத்தினுள் அனுமதிப்பது மார்க்க துரோகமும் சமூக துரோகமுமாகும். இன்று இதை நாம் செய்தால் நாளை தர்ஹாவழிபாடு, தங்கள் பாவா வழிபாடு, சாம்பிராணி வழிபாடு என மார்க்கத்திற்கு முரணான கொள்கைகளை செய்ய விரும்புவோரை நாம் தடுக்க முடியாமல் போகும்.

புலிகள் எம்மை வெளியேற்றி, மீண்டும் குடியேறும் இந்த வேளையில் சோனக தெரு எந்ந கொள்கைகளாலும் குழப்பப்படாமல் இருக்கிறது. இஸ்லாமிய அகீதாவி்ற்று முரணான எந்த சக்திகளிற்கும் இடமளிக்காத ஒரு பிரதேசமாக நாம் யாழ்ப்பாண முஸ்லிம் பகுதியை உருவாக்க வேண்டும்.  20 இலட்ச ரூா செலவில் விழா எடுப்பது நிச்சயமாக இறை கோபத்தையை எமக்கு பெற்று தரும். 

இன்று எத்தனையோ மாணவர்கள் கல்வி கற்ற வசதியின்றி இருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் மல சல கூட வசதிகள் இன்றி, குடி நீர் வசதிகள் இன்றி, கூறை ஓடு போன்ற தளபாட வசதிகள் இன்றி தவிக்கிறார்கள். இந்த வேளையில் இவ்வளவு இலட்சங்களை செலவழித்து கந்துரி போட்டு, கூத்தாடி, கும்மாளம் போட்டு, ஆண் பெண் கலப்பு நிலைகளை உருவாக்குதல் தவறான செயற்பாடு.

இப்போது இதை கைவிடுவோம். இறை திருப்தி பெற்ற சமூகமாகமாற முற்படுவோம். ஆமீன்.

No comments:

Post a Comment