Saturday, January 28, 2012

எஸ்.எம்.கிருஸ்ணா மீது தமிழ் கூட்டமைப்பினருக்கு நம்பிக்கையில்லை!



Krishna-in srilanka
கடந்த வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நான்கு நாள் விஜயமாக இலங்கை வந்திருந்தார். அவரது வருகையின் சிறப்பான நோக்கம் குறித்து இலங்கை - இந்திய அரசுகள் விசேட அறிக்கைகள் எதையும் விடுத்திருக்கவில்லை. ஆனாலும் வழமைபோல தமிழ் ஊடகங்கள் தமது ‘மூக்கு சாத்திரங்கள்’ மூலம் பல்வேறு சரவெடிகளை ஊடக அரங்கில் வெடிக்க வைத்திருந்தன. ‘இலங்கை அரசு தமிழர்களுக்கு உரிமை வழங்குவதைத் தொடர்ந்து மறுத்து வருவதால், அதைக் காட்டமாகத் தட்டிக் கேட்கவே கிருஸ்ணா வருகிறார்’
என சில தமிழ் ஊடகங்கள் கூறின. இன்னும் சில, ‘தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்துப் பேசவே கிருஸ்ணா வருகிறார்’ எனத் தெரிவித்தன. இன்னும் சில ‘இலங்கை அரச தலைவர்களுடன் பேசுவதற்கு முன்னா தமிழ் கூட்டமைப்பினரைச் சந்தித்து, அவர்கள் அரசு மீது தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளைக் கேட்ட பின்னர்தான் இலங்கை அரச தலைவர்களைச் சந்தித்து அது பற்றி எடுத்துரைப்பார்’ என ‘தூரதிருஸ்டியுடன்’ பேசின.


ஆனால் கிருஸ்ணா வந்தார். தமிழ் ஊடகங்கள் கற்பனையில் வகுத்த திட்டங்களின்படி அவரது நிகழ்ச்சிகள் எதுவும் அமையவில்லை. ஏற்கெனவே பல மாதங்களுக்கு முன்னர் இந்திய - இலங்கை அதிகாரிகளால் வகுத்ததிற்கொப்ப அவரது நிகழ்ச்சிகள் நடந்தேறின. வழமைபோல ‘13வது திருத்தத்திற்கும் அப்பால் சென்று இனப்பிரச்சி


னைக்குத் தீர்வு காண்பது’ என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறுதி மொழியைப் பெற்றுக்கொண்டு இந்தியா திரும்பிவிட்டார்.



வந்த மனிசன் அத்துடன் போயிருந்தால் போதாதா? இலங்கை ஜனாதிபதி தந்த உறுதிமொழியில் நம்பிக்கை தெரிவித்ததுடன் நின்றுவிடாது, இலங்கை  அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஒரு பாராட்டும், நம்பிக்கையும் தெரிவித்து, அதில் பங்குபற்ற மறுத்து வரும் தமிழ் கூட்டமைப்பினருக்கு பிடரியில் ஒரு அடியும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதனால் தான் அது பற்றி பி.பி.சி. தமிழோசையின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வார்த்தைகள் வெளிவராது மிண்டி விழுங்கினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது கிடைக்கும் ஏதாவது 
துரும்மைப் பாவித்து, தமது அரசியல் கட்டை வண்டியைத் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஓட்டுவதற்கு ஏதாவது வாய்ப்புக் கிடைக்காதா என ஏங்கிய தமிழ் கூட்டமைப்பினர், கிருஸ்ணா கொடுத்த ‘அல்வா’ காரணமாக இப்பொழுது கிருஸ்ணா மீது மிகவும் காட்டமாக இருப்பதாகத் தெரிகிறது. அதன் எதிரொலியாக, கிருஸ்ணா என்ற நந்தியைத் தாண்டி டில்லி மூலஸ்தானத்துக்கு நேரடியாகவே சென்று மகாவிஸ்ணுவைத் தரிசிக்க முடிவெடுத்துள்ளனர் கூட்டமைப்பினர்!

Krishna sampanthanதமிழ் கூட்டமைப்பினரின் இந்த டில்லிக்குக் காவடி எடுக்கும் படலம் ஒன்றும் புதுமையான ஒன்றல்ல. ஏற்கெனவே காலாதிகாலமாக தமிழ் தலைமைகள் எல்லாமே ‘இந்தியா மூலம் இந்தா பிடுங்கிக் காட்டுகிறோம்’ எனச் சவால் விடுவதும், பின்னர் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போனதும், ‘வயிற்றுக் குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பேலாது’ என மறைவாகப் ‘புறணி’ சொல்வதும் நடந்து வருபவைதான்.

சரி, தமிழ் கூட்டமைப்பினர் டில்லி சென்று புதிதாக என்னதான் செய்யப் போகிறார்கள்? அங்கு இந்திய அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தியையோ பிரதமர் மன்மோகன் சிங்கையோ அல்லது வேறு முக்கியமான தலைவர்களையோ சந்திக்கப் போவதில்லை. அங்கும் இதே வெளிநாட்டமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவையோ அல்லது அவருக்குக் கீழுள்ள அவரது செயலாளரையோ தான் சந்தித்துவிட்டுத் திரும்புவர். ஆனால் ஊடகங்களுக்கு, ‘பேச்சுவார்த்தைகள் குறித்து இப்பொழுது எதையும் வெளியிட முடியாது’ என, பெரும் இராணுவ இரகசியத்தைக் காப்பாற்றுவது போல இரா.சம்பந்தன் அறிக்கை விடுவார்.

இப்படி இப்படியாக நாடகத்தின் ஒவ்வொரு காட்சி போல, தமிழ் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் முன்னால் சீன் மாற்றி சீனாக காட்சிகளை மாற்றி மாற்றிக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். அதன் மூலம் புள்ளிகள் கூடி தேர்தல்களில் வெல்லலாம் என்பதில் இந்த ‘சோணகிரி’ தமிழன் இருக்கும்வரை அவர்களுக்கு அசையாத நம்பிக்கை உண்டு. அதுவும் இப்பொழுது எல்லோரும் வட மாகாணசபைத் தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதால், தமிழ் கூட்டமைப்பினரிடம் இருந்து இப்படியான மேலும் பல நாடக அரங்கேற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இந்திய வெளிநாட்டமைச்சர் வந்த கையோடு தமிழ் கூட்டமைப்பினர் டில்லிக்கு காவடி எடுப்பது, அவர்கள் எதிர்பார்க்கும் நன்மைகளைவிட தீமைகளையே வழங்கப்போவது நிச்சயம். ஒன்று, கிருஸ்ணா மீது நம்பிக்கை இல்லாததால்தான் டில்லிக்கு நேரடியாகச் செல்கிறார்கள் என்ற கருத்து தனிப்பட்ட முறையில் கிருஸ்ணாவின் வெறுப்பைச் சம்பாதிப்பதுடன், அவரது அரசாங்கத்தின் அதிருப்தியையும் சம்பாதிக்கும். இரண்டாவது, இலங்கையில் இந்திய வெளிநாட்டமைச்சருடன் பேச முடியாத ஏதோவொரு விடயத்தை இந்தியா சென்று கூட்டமைப்பினர் பேச முனைவது, அவர்கள் இலங்கைக்கு எதிராகச் சதி சூழ்ச்சிகளில் ஈடுபட முயல்கிறார்கள் என்ற கருத்தை இலங்கை மக்கள் மத்தியில் உருவாக்கும்.

தமிழ் கூட்டமைப்பினர் தமக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய விரும்பினால், முதலில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொறுப்பில் இருக்கும் இலங்கை அரசுடன் இதயசுத்தியுடன் பேச வேண்டும். தென்னிலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஆதரவாக எப்பொழுதும் குரல் கொடுத்து வரும் இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுடன் பேச வேண்டும். தமிழ் கூட்டமைப்பினர், அவர்களது சகபாடியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேசி, அக்கடசியை ஒரு வழிக்குக் (தீர்வுகளைக் குழப்பாமல் இருக்க) கொண்டு வர வேண்டும்.

அதைவிடுத்து தமிழ் கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் திரும்பத் திரும்ப மரதன் ஓடுவதால் எந்தவொரு பலனும் ஏற்படப் போவதில்லை. அது ‘உறியிலை நெய்யை வைத்துக்கொண்டு ஊர் எல்லாம் அலைந்த கதை’ யாகவே இருக்கும்.

தமிழ் கூட்டமைப்பினரின் இந்த புத்திசாதுரியமற்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கு மேலும் துன்பங்களதான்; பெருகும். தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது இழுபட்டுச் செல்வதையே தமிழ் கூட்டமைப்பினர் எப்பொழுதும் திட்டமிட்டுச் செயல்படுத்தி வந்துள்ளனர் என்பதை, இந்தக் கட்டத்திலாவது தமிழ் மக்கள் புரிந்து கொண்டால் அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

No comments:

Post a Comment