யாழ்ப்பாணம் ஹதீஜா பெண்கள் பாடசாலையின் முன்னாள் அதிபர் லைலா மொஹைதீன். அவருடைய தங்கை ஹஸீனா. இவர் ஒரு ஆசிரியை. இவரின் கணவர் பெயர் அஷ்ரப். காலமாகிவிட்டார். இவர்களின் மகளின் பெயர் ஷக்கியா. இவர் ஒரு முஸ்லிம் அல்லாத மதத்தவரை மணந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார்.
2010 ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சறுக்கலில் இங்கிலாந்து திக்கித் திணறியது. ஸ்டேர்லிங் பவுனின் தளம்பல் நிலை, யூரோவின் அதீத வளற்ச்சி, செங்கன் விசாவின் பின்னரான உள்ளூர்வாசிகளின் வேலைவாய்ப்பின்மை, ஐரோப்பிய நாடுகள் பிரித்தானிய உற்பத்தி பொருட்களிற்கு மாற்றீடாக சீனாவின் உற்பத்திப் பொருட்கள் பக்கம் சரிந்தமை என ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் இல்லாத பொருளாதார பிரச்சனை என விழிபிதுங்கி நின்றது அரசு.
அப்போது ஸ்தம்பித்த பிரித்தானிய பொருளாதாரத்தை எவ்வாறு சீர் செய்யலாம் என ஷக்கியா அஷ்ரப் எழுதிய ஒரு பொருளாதார ஆய்வுக் கட்டுரை இங்கிலாந்தின் முக்கியமான ஒரு தினசரி பத்திரிகையில் வெளியாயிற்று. அதை வாசித்த பிரித்தானியாவின் பொருளாதார நிபுணர்கள் அசந்து போனார்கள். அதிசயித்தார்கள். விடயம் பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகம் வரை சென்றது. அரசின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர்களும் அந்த கட்டுரையை ஆதாரமாக கொண்டு சரிவை நிவர்த்தி செய்யலாம் என அடித்து கூறினர். மீண்டும் நிமிர்ந்தது இங்கிலாந்தின் பொருளாதாரம்.
இவரின் புலமையை கண்டு வியந்த அரசு எலிஸபெத் மகாராணி உயர் விருதிற்கு பரிந்துரை செய்தது. அவ்வாறே மகாராணி எலிஸபெத்தின் கையால் அந்த நாட்டின் அந்த ஆண்டிற்கான உயர் விருதை பெற்றுக்கொண்டார் ஷக்கியா அஸ்ரப்.
இந்த பெண்ணும் யாழ்ப்பாண மண்ணில் பிறந்து வளர்ந்தவரே. இன்று எம் பிள்ளைகள் தில்லையடியிலும், பொம்மைவெளியிலும் படிக்கவும் வழியில்லாமல் இருக்கின்றன. இவர்களின் எதிர்கால காத்திரமான, தரமான கல்விக்கான வேலைத்திட்டம் ஒன்று நமக்கு சமூக கடமையாக காத்திருக்கிறது. யாழ்ப்பாண சிறுவர் சிறுமியரிற்கான தரமான, எதிர்கால சவால்களை முகம் கொடுக்கவல்ல கல்விக்கொள்கையை வகுத்து அவர்களிற்கான சுபீட்சமான எதிர்காலத்தை அமைக்க நாம் எப்போது தயாராக போகிறோம்?
நம் சமுதாயத்திற்கு மேற்கு நாடுகள் உதவப்போவதில்லை. மத்தியகிழக்கு நாடுகள் கைகொடுக்கப்போவதில்லை. எதை செய்தாலும் நாம் தான் செய்ய வேண்டும். நமக்கு செய்ய வேண்டும். நமக்காக செய்ய வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் படித்தவர்கள். அதிலும் என்ஜினியரிங் என்பது அவர்களிற்கு கைவந்த கலை. இலங்கையிலும், உலகின் பல பாகங்களிலும் பிரசித்தம் பெற்ற எத்தனையோ தமிழ் என்ஜினியர்களை இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் இவர்களின் இனத்தவர்களால் ஒரு சட்டையை, ஒரு பிளவ்ஸை அச்சுப்போல் தைக்க முடியாது. அப்ஹோல்ஸ்டரி செய்ய முடியாது. குசனிங் செய்ய முடியாது. கொம்பியூட்டர் டிசைனிங் செய்யும் இவர்களிற்கு பீலி அடிக்க முடியாது. தகரவேலை செய்ய முடியாது.
தையலையும், தகர வேலையையும், கூட்மேக்கிங்கையும், பீலி வேலையையும் நம் யாழ்ப்பாண சகோதரர்கள் எங்கே படித்தார்கள்?, எந்த தொழில் நுட்ப கல்லுரி இவர்களை உருவாக்கியது?, எந்த பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறியவர்கள் இவர்கள்?.
வாப்பா மகனிற்கும், மாமா மருமகனிற்கும், காக்கா தம்பிக்கும் கற்றுக்கொடுத்த கலைகள் இவை. அப்படியென்றால் கல்வியறிவில் வெற்றி பெற்ற தமிழ் சமூகத்தை விடவும் தரமான உற்பத்திகளை, உருவாக்கங்களை எம்மாலும் தர முடியும் என்பதற்கான உதாரணங்கள் இதை. எம் இளைய தலைமுறைக்கு முறையான “தொழில்சார் கல்வியையும், தொழில் நுட்ப கல்வியையும்” கிடைக்கும் படி செய்வது நம் கடமை.
இவர்களிற்கான தொழில்நுட்ப கல்வியின் அவசியத்தை புரிந்து அதனை உருவாக்கிக் கொடுத்தல் நம் கடமை. அவ்வாறான வளற்ச்சிப்பாதையில் நம் சமூகத்தை திட்டமிட்டு முன்னேற்றினால் ஒரு சில தசாப்தங்களுள் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தின் முதன்மை சமூகமாக மாற வாய்ப்புக்கள் உண்டு. நாளைய தமிழ் தலைமுறையினர் முஸ்லிம் தலைமுறையினரிடம் தங்கி வாழும் ஒரு நிலை உருவானாலும் வியப்பில்லை.
பெரும்பான்மை சிறுபான்மை என்பது வெறுமனே சனத்தொகையால் மட்டும் தீர்மானிக்கப்படும் ஒரு விடயமல்ல. மாறாக எந்த ஒரு சமூகத்திடம் கல்வி இருக்கிறதோ, கலாச்சாரம் இருக்கிறதோ, ஒழுக்க மாண்புகள் இருக்கிறதோ, கலையும் விஞ்ஞானமும் இருக்கிறதோ அவைதான் உண்மையில் பெரும்பான்மை சமூகம். மீலாத்திற்காக செலவழிக்கும் எமக்கு இதற்காக செலவழிக்க என்ன கசக்கவா போகிறது !?.
No comments:
Post a Comment