Special 2012 -
1996 என்று நினைக்கின்றேன். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன் ஊர் கவிஞர் ஒருவர் “சரிநிகரில்” எழுதியுள்ளார் வாசித்தாயா? என்றார். நட்சத்திரன் செவ்விந்தியனும் அதே கேள்வியையே கேட்டார்.
சரிநிகர் எனும் மாற்றுப்பத்திரிகையை விரித்த போது அவர் கவிதை இருந்தது. முஸ்லிம்களிற்கு செய்யப்பட்ட அநியாயத்தை அழகாக இன்திபாதா பாணியில் வர்ணிக்கப்பட்டிருந்தது. கூடவே அது ஒட்டுமொத்த யாழ் முஸ்லிம் ஆன்மாவின் வலியின் குரலாக ஒலித்தது.
புலிப்பயங்கரவாதத்தின் கால்கள் தெற்கிலங்கை வரை நீண்டிருந்த காலமது. ஆனாலும் துணிவுடன் புலிகளின் பாசிஸத்தையும், அராஜகத்தையும் வெளிகொணர்ந்திருந்தது அந்த கவிதை. கவிதைக்கு சொந்தக்காரர் யார் என ஆவலுடன் பார்த்த போது அது எங்கள் அஸீம் மாஸ்டர். உள்ளத்தில் மத்தாப்புக்கள் பல சீறின. அப்படியொரு சந்தோஷம். இருக்காதா பின்னே? நம்மவர் கவிதையல்லவா. இப்போது.....
அதே நம்மவர் சம்மேளனத்தின் சமஸ்தானம் ஏறி கவிதை பாடியுள்ளார். பாடியவர் நல்லவர் தான். கவிதையும் நல்லது தான். பாடிய சந்தர்ப்பம் மட்டும் சரியானதாகபடவில்லை.
புலிப்பயங்கரவாதம் ஓழிக்கப்பட்ட மாற்று சூழலில் புலிகளை எதிர்ப்பதென்பது அதுவும் மேடைகளில் பேசுவதென்பது தேவையற்ற ஒரு சூழலை உருவாக்கவல்லது. புலிகள் அழிந்தாலும் அவர்கள் தமிழர்களின் உள்ளத்தில் உயிர்வாழ்கிறார்கள். எப்படி கிழக்கு மாகாணத்தில் அஷ்ரம் மறைந்த போதும் கிலக்கிலங்கை முஸ்லிம்களின் உள்ளத்தில் அவர் வீற்றிருக்கிறாறோ அதையும் பார்க்க பன்மடங்கு தமிழர்கள் உள்ளங்களில் பிரபாகரன் உயிர்வாழ்கிறார். புலித்தளபதிகள் உயிர் வாழ்கிறார்கள். இயக்கம் உயிர்வாழ்கிறது. ஈழம் உயிர்வாழ்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்கள் யூதர்கள் போன்று போலியாக போராட்டத்தையும் இயக்கத்தையும் ஏசுகிறார்கள். வெறுப்பது போல் காண்பிக்கிறார்கள். ஒரு சமஷ்டி மட்டும் போதும் அவர்களின் “மறத்தமிழ்” தன்மை வெளிப்பட.
இராணுவவியலில் ஒரு விதி இருக்கிறது. “ஒரு நாட்டின் எல்லை புகுந்த ஆயுதம் இன்னொரு நாட்டின் எல்லையை ஒரு போதும் கடக்காது”. புரியும் படியாக சொன்னால் இலங்கையின் வடக்கு கிழக்கினுள் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் (Small Arms) மீண்டும் இலங்கையை விட்டு ஏன் வடக்குகிழக்கை விட்டு வெளியேராது. ஒரு தொகுதி ஆயுதங்கள் ஒப்படைக்கப்படலாம். ஒரு தொகுதி ஆயுதங்கள் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்படலாம். ஆனால் பெரும்பகுதி ஆயுதங்கள் கிறீஸ் பூசி, பொலிதீன் சுற்றி, ரப்பர் கொள்கலன்களில் பக்குவமாக இறுக மூடி டம் பண்ணப்பட்ட நிலையில் எப்போதும் இருக்கும். இந்த விதி உலகின் எல்லா பாகங்களிற்கும் பொருந்தும்.
நமது மாபெரும் ஒன்று கூடல்களையும், விழாக்களையும், வருகை தந்த முஸ்லிம்களையும், அவர்கள் தம் வாகனங்களையும், மேடைகளின் உரைகளையும் சில கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சில விரல்கள் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கின்றன. சில சமூக பதிவுகள் கவனமாக பதியப்படுகின்றன. இவற்றை நாம் உணர்வதில்லை. இந்த மறைவான சக்திகள் ஆபத்து மிக்கவை.
அஸீம் மாஸ்டர் பாடிய இந்த கவிதை நம் நரம்புகளை சூடேற்றலாம். காதுகளை குளிர வைக்கலாம். உள்ளத்தை உவகை கொள்ள வைக்கலாம். ஆனால் பாடியவரும் கேட்டவர்களும் நாளை புதன்கிழமை சென்று விடுவார்கள். யாழ்ப்பாணத்தில் தரித்திருப்பதும் தங்கியிருப்பதும் கவிஞர்கள் அல்ல. இராணுவ வீரர்கள் அல்ல. முஸ்லிம் போராளிகளுமல்ல. ஏழை முஸ்லிம்கள். அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். நாளைய தமிழ் இனவாத தாக்கத்தை முகம் கொடுக்கவிருப்பவர்களும் இவர்களே.
நாம் எதை செய்தாலும் அவதானமாக செய்ய வேண்டும். உணற்சியினை விடவும் அறிவிற்கு முக்கியத்துவமளிக்கும் தருணங்கள் இவை. யாழ்ப்பாண முஸ்லிம்களை வழி நடாத்துவதற்கான எந்தவொரு அரசியில் தலைமையும் யாழ் சோனக தெருவில் இல்லை. மார்கத்தலைமையும் இல்லை. எதுவுமே இல்லாமல் எதற்காக இந்த வேண்டாத வில்லங்கங்கள் எல்லாம்?.
அஸீம் மாஸ்டரின் சமூகபற்றும், புலி எதிரப்பும் பாராட்டத்தக்கவையே ஆனாலும் அவர் சிறுது காலம் அவரது மைத்துனர் சோனக சிங்கம் ஜலீல் மாஸ்டரிடம் பாடங்கள் கற்று விட்டு பாடியிருக்கலாம் போல் தோன்றுகிறது.
No comments:
Post a Comment