“மீள் குடியமர்தல்” என்பது ஒரு சமூகமோ அல்லது குடும்பமோ தன் சுய விருப்பினடிப்படையில் தனது சுய முயற்சியினடிப்படையில் முனைந்து தனது வாழ்வாதரங்களை குடியேறிய மண்ணில் நிர்மாணிப்பதாகும்.
“மீள் குடியமர்த்தப்படல்” என்பது ஒரு சமூகமோ அல்லது குடும்பமோ தன் சுயவிருப்பின் பேரில் அல்லது இன்னொரு சக்தியின் மூலம் வேண்டுகோளின் பேரில் அந்த சக்திகளாலோ அல்லது அந்த சக்திகளின் துணை, இணை சக்திகளாலோ வாழ்வாதாரங்களை அமைத்துக்கொடுப்பதன் மூலமும் அல்லது அமைத்து கொடுக்காத நிலையிலும் அவர்களை அங்கு சென்று குடியமர்த்தல் என்பதாகும்.
இந்த இரண்டுமே நடந்துள்ளது யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில். அதே போன்று இந்த இரண்டுமே ஒரு சில கட்டங்களின் பின்பு ஸ்தம்பித்த நிலையில் காணப்படுவதே விதியாகி விட்ட நிலையில் ஒரு இயல்பு வாழ்க்கை பறிக்கப்பட்ட அல்லது முடக்கப்பட்ட சமூகமாக யாழ்ப்பாண முஸ்லிம்களின் நிலை காணப்படுவது மிகவும் கவலைக்குரியது.
இவர்களது இந்த விவகாரங்களை கையாள்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட எந்த ஒரு குழுவும் இல்லை. அரசியல் அணிகளால் இதை ஒரு போதும் செய்து முடிக்க முடியாது. வர்த்தக சங்கங்களாலும் இதை கையாள முடியாது. முற்று முழுதான Full Time Task சமூக நல இயக்கங்கள் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் இல்லை.
சுமார் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு அநாதரவான நிலையில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட முடியாத நிலையிலும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தோல் கொடுக்காத ஒரு மயக்க நிலையிலேயே சமூகம் காணப்படுகிறது.
அரசியல் தலைவர்கள் சமூகத்தையும், சமூகத்தலைவர்கள் அரசியல் தலைவர்களையும், இவர்கள் இருவரும் சேர்ந்து மார்க்கத்தலைவர்களையும், மார்க்கத்தலைவர்கள் இவர்கள் எல்லோரையும் குறை சொல்லி, விமர்சனத்திற்கு உள்ளாக்கும் நிலையே சோனக தெருவின் சாபக்கேடாக மாறிவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் மேற்குலகில் வாழும் எம்மவர்கள் மத்தியிலும் குழு சார் வாழ்வியல் ஒழுங்குகள் உருவாதல் இன்றியமையாதது.
இவர்களின் பிரச்சனைகள் துல்லியமாக இனங்காணப்பட்டு, அதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் அவசியம்.
சில தினங்களிற்கு முன்பாக யாழ்ப்பாணம் வருகை தந்த பாரூக் எம்.பி. (வன்னி மாவட்டம் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ்) அவர்களுடன், யாழ்ப்பாணத்தின் மிக முக்கிய அரசியல்வாதியும் சமூக சேவகரும் யாழ் முஸ்லிம் சம்மேளன தலைவருமான ஜனாப் எம்.ஏ.சீ.ஏ.முபீன் அவர்களும் யாழ்மாவட்ட அமைப்பாளர் ரொஷான் தமீம் சகிதம் பொம்மைவெளி பிரதேசங்களிற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது எடுத்த காட்சிகள் இவை.

No comments:
Post a Comment