Tuesday, February 28, 2012

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்கிறது இராணுவ நீதிமன்றம்!




யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை நீதிமன்றமானது அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பான தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அக்கறையுடையவர்கள் இவ்விசாரணை நீதிமன்றுக்கு வந்து சாட்சியமளிக்கும்படி , இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேசமயம் இம்மன்றின் அங்கத்தவர்கள், மக்களிடம் சென்று வாக்குமூலங்களை பதிவுசெய்து வருவதாகத்  தெரிவிக்கப்படுகிறது.
இவ்விசாரணை நீதிமன்றம் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தலைமயகத்தின், தற்போதைய தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின் தலைமையில் இயங்குகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் பாதிக்கப்பட்டவர்களிடன் வாக்குமூலங்கள் பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை நீதிமன்றம் தகவல்களை திரட்டி, இதன் மூலம் பாதுகாப்பு படையினர் மீது குற்றச்சாட்டுக்கள் உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அது தொடர்பான வழக்கை விசாரிக்க இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்படும் என இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி அறிவித்துள்ளார்.
பொது இராணுவ நீதிமன்றமானது மேல் நீதிமன்றத்தின் ட்ரையல் அட் பாரை ஒத்த நியாயாதிக்கத்தை கொண்டிருக்கும். இந்நீதிமன்றுக்கு மரண தண்டனை உட்பட எந்த தண்டனையையும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment