நஜீப் கைலானி
வியாழக்கிழமை:
இங்கே ‘அல்புரைஜ்” முகாமிலுள்ள எல்லா அகதிகளும் என் மீது பொறாமைப்படுகின்றனர். ஆவலும் பசியும் மேலிட அவர்கள் என்னைப் பார்க்கின்றனர். இரண்டு அம்சங்களுக்காக அவர்கள் என்மீது பொறாமைப் படுகின்றனர். அதிலொன்று இருபது ஜுனைஹுக்குச் சற்றுக் குறைவான மாதச் சம்பளத்தை நான் பெறுவது, மற்றது குறிப்பிட்டு சொல்லத் தக்களவு நான் அழகாயிருப்பது. இதோ! இன்று நான் முகாமை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறேன். இது மாதக் கடைசி என்பதும் இந்த சௌந்தர்ய ஹிந்தாவின் பையில் இருபது ஜுனைஹ் இருக்குமென்பதும் எல்லோருக்கும் தெரியும். அத்துடன் ஒரு தாய், ஒரு தந்தை ஏழு சகோதர, சகோதரிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தை நான் பராமரிக்கின்றேன் என்பதையோ காஸாவில் நான் வேலை பார்க்கும் பாடசாலைக்கு அன்மையில் சில ஜுனைகள் செலவில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுக்கப் போகிறேன் என்பதையோ என் குடும்பத்திற்கு தேவையான பணத்தில் பெரும்பகுதி நகரத்தில் எனது தனிப்பட்ட செலவே கரைத்து விடுகிறது பற்றியோ உறுதிப்படுத்த அவர்கள் மத்தியில் எந்த மனிதனும் இருக்கவில்லை. இத்தோடு இந்த அகதிகளுக்காகவும் செலவளிக்கின்றேன். இவர்கள் ஏழைகள்…, நோயாளிகள்…, நாடு செல்வாக்கியம், சந்தோசம் என் எல்லாவற்றையும் இழந்தவர்கள். அல்லாஹ் இவர்களின் பாவத்தை மன்னிக்க வேண்டும். உதவியையும் சுபீட்சத்தையும் அவன் அவர்களுக்கு விதியாக்க வேண்டும். நானும் அவர்களில் ஒருத்தி. அவர்கள் படும் வேதனை என்னுள்ளத்தையும் உசுப்புகிறது. அவர்களின் உடன் பிறப்பான கவலைகளை நானும் உணர்கிறேன். அவை ஈவிரக்கமின்றி என்னுள்ளத்தையும் கிழிக்கின்றன. இரட்சகா ! நீயே துணை !
சனிக்கிழமை:
இன்று என் காதலன் என்னை சந்திக்கின்றான். அவனது பெயர் ஜெமீல். காஸாவின் வசீகரமான இளைஞர்களில் ஒருவன். வலீத் என்றால் எல்லொருக்கும் தெரியும். படைகளினதும் பெருங்கட்டிடங்களினதும் சொந்தக்காரர்களின் புதல்வன். வலீத் நீண்ட காலமாக என்னை பின் தொடர்ந்து வருகின்றான். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். நான் அவனிடமிருந்து விரண்டோடுகின்றேன். சிலபோது அவனது செல்லமாக இருக்கின்றேன். என் உள்ளம் அவன் பக்கம் சாய்வதை அல்லாஹ்வே நன்கறிவான். நான் என் கண்களிரண்டையும் மூடித்திறக்கும்போது மனவீட்டில் அவனது கரங்களுக்கிடையில் நான் இருப்பதாக ஆவலுருகின்றேன். ஆனாலும் அவனது தந்தையை நினைத்தால் என்னால் ஆறுதலாய் இருக்க முடிவதில்லை. அவன் வரண்ட இயல்புடையவன் பயமுறுத்துபவன். ஆயினும் வலீத்தின் விடயமே என்னைப் பெரிதும் வாட்டுகின்றது. அவனில் எவ்வித குறையுமில்லை. சொல்லப்படுவதை விடவும் அவன் அதிகம் சிறப்புடையவன். அவனது கல்வி குறைவாயினும் அது ஒரு குறையல்ல. கல்விச் சான்றிதழ்களை வைத்து மதிப்பிடுவதல்ல அவன் நல்ல கதைக்காரன். பொது விசயங்கள் நிறையத் தெரிந்த நிபுணன் என்று கூட சொல்லலாம். அவன் திருமணத்தை அவசரப்படுத்தக் கூடாதா ?! எனக்கு பதினெட்டு வயதாகப் போகின்றது. ஏறத்தாள அவனது வயதிலேயே நானும் இருக்கின்றேன். அழுப்புகள், வேதனைகள், இழப்புகள் நிறைந்தே என் வாழ்வு. நாம் வாழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவுதான் மோசமான சூழலாயிருப்பினும் திருமணம் செய்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. திருமணப் பிரச்சினை வலீத்திற்கும் விளங்குகிறது. அவனது கண்ளில் ஓர் அலாதியான விருப்பத்தையும், அன்பையும் நான் கண்டிருக்கிறேன். அவனது உள்ளத்தில் தீயை மூளச் செய்யாது நான் பாதுகாப்பாக இருக்க முயற்சித்துள்ளேன். சில வேளை விசயத்தை வாபஸ் வாங்கப் போவதாக பொய்யாகக் கூட அவனிடம் நடித்திருக்கின்றேன். அவனை திருமணம் முடிப்பதிலுள்ள எனது கட்டுக்கடங்காத ஆவலை அல்லாஹ்வே அறிவான். வசீகரமான இளைஞன் பெருஞ் செல்வம், கணிந்த காதல் இதற்கு பின் வேறென்ன வேண்டும். எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது.
புதன் கிழமை:
பல சோலிகளுக்கு மத்தியில் பல பிரச்சினைகளுக்கிடையில் என்னை நானே மறக்கப் பார்க்கிறேன். பெரிய சோதனையைக் கூட மறக்கப் பார்க்கின்றேன். இன்றே மே பதினைந்து பலஸ்தீன் துண்டாடப்பட்ட நாள். என்னருமைத் தாய் நாடு ஆக்கிரமிக்கப்பட்ட நாள். காஸா, ரபாஹ், கான் யூனுஸ் மற்றும் எல்லா முகாம்களிலும் எல்லா இடங்களிலும் இன்று திரும்பச் செல்வதற்கான அழைப்புக்கள், ஆரவாரங்கள் கேட்ட வண்ணமிருக்கின்றன. பாடசாலைச் சிறார்கள் கோசம் போடுகின்றனர், கீதமிசைக்கின்றனர். நிரபராதிகளான அவர்களின் குரல்கள் அடிவானை முட்டுகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட எமது கிராமங்கள், நகரங்கள் காத்திருந்து சலிப்படைந்த மௌன பெண்ணைப் போல தூரத்தில் தெரிகின்றன. கோதுமை மாவு, சவர்க்காரம், பட்டர் போன்றவைகள் விநியோக நிலையத்திலிருந்து பெறுவதற்கான இற்றுப் போன ஆடைகளுடன் அகதிகள் செல்கின்றனர். வாழ்கையை வெறுக்கும் கோபக் குறியே அவர்களின் முகங்களில் தெரிகின்றது. என் உள்ளமும் அழுகின்றது. என் கண்களிரண்டிலிருந்தும் மளமளவென்று கண்ணீர் கொட்டுகின்றது. வலீதைச் சந்திக்கப் போவதில் எனக்கு விருப்பமில்லை. முகாமுக்கு திரும்பி வந்து விட்டேன். அரை நூற்றாண்டுத் துயரின் நினைவுகளை மீட்டியவர்களாக இருக்கும் யுவதிகள், பெண்கள், வயோதிபர்கள் மத்தியில் நானும் அமர்ந்தேன். கொழுந்து விட்டெரியும் என் இதயத்தில் எதிர்பார்க்கையின் துளைகளைக் கொட்டியவர்களாய்… அது சற்று ஆறுதலைத் தரும் அல்லவா?
வியாழக்கிழமை:
இன்று வலீத் இப்படிச் சொன்னார்.
“வியாபாரியின் மகன் வியாபாரிதான் என்றாலும் நான் பேரம் பேசுவதை விரும்ப மாட்டேன்.”
“உனக்குத் தெரியும், நமது திருமணத்தோடு தொடர்பானதைத்தான் சொல்கிறேன். எனது தந்தையிடம் விசயத்தை எடுத்துச் சொல்ல, தெளிவான உடன்பாடாக அது இருக்க வேண்டும். பின் ஓரிரு மாதங்களில் திருமணத்தை முடித்து விடலாம்.”
நான் வெட்கத்தோடு இப்படிச் சொன்னேன்,
“முதலில் உன் தந்தையிடம் ஏன் விசயத்தைச் சொல்கிறாய். அவருக்குரிய இடம் இரண்டாவது வரும். முடிவெடுக்க வேண்டியது நீயல்லவா?”
“நான் என்ன சொல்கிறேன் என்பது உனக்கு விளங்கவில்லையா?
“உனக்கு விருப்பம் அப்படித்தானே ?”
நான் சொன்னேன்,
“தொடர்ந்து வெட்கிக்காதே விவேகியாய் நடந்து கொள்.”
அவன் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். முகம் அதைக் காட்டியது. நாம் காஸா கடற்கரையில் அமர்ந்தோம்.
“நீயே என் உயரிய இலக்கு” என்று அவன் முயற்சி பொங்கக் கூறினான்.
“வலீத் நீயும் எனக்கு அப்படித்தான்”
இரு குவளை குளிரான தோடம்பழச் சாற்றை இருவரும் பருகினோம். எமது எதிர்காலத்தைப் பற்றி நிறைப் பேசினோம். திருமணத்தின் பின் நான் வேலையை விட்டு விலக வேண்டும் என்பதே வலீத்தின் கருத்தாக இருந்தது. இக்கருத்து எனக்கு சரியாகப்படவில்லை. எனது சம்பளம்தான் என் குடும்பத்தைத் தாங்கும் தூண். தொழிலை விட்டால் அவர்களுக்கு எப்படி உதவுவது? கணவன் அல்லது அவரது தந்தையின் பணத்துக்கு நான் கைநீட்ட முடியுமா? அது சங்கடமான விஷயம். முரண்பாட்டின் வெளிப்படையான புள்ளியே அதுதான். எமது நிகழ்கால சந்தோசம் பாழ்படாமலிருக்க வேறொரு சமயத்தில் இவ்விடயத்தைப் பேசி அவரை ஏற்றுக் கொள்ளச் செய்ய என்னால் முடியும். அன்பும் ஆவலும் பொங்க அவன் சிரித்தான். பின்னர் வேறு விடயங்களை பற்றிப் பேசினோம். அது எவ்வளவு சுவாரஷ்யமாய் இருந்தது.
வெள்ளிக் கிழமை:
இன்று எனது தாய் எனது தந்தை ஏனைய குடும்ப அங்கத்தினர் எல்லோரும் எனது திருமண விடயத்தை அறிந்த போது ஆனந்தத்தால் சிறகடித்துப் பறக்கப் பார்த்தனர். ஆனால் பேராசையின் நிழலையோ எதிர்கால மோகத்தையோ, தேவையான அச்சத்தையோ யார் கண்ணிலும் நான் காணவில்லை. எனக்கு முன்னால் அவர்கள் அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டிய நல்ல அமரர்கள் போன்றே தோன்றினார்கள். எனது மகிழ்ச்சி அவர்களது மகிழ்ச்சியின் உண்மையான ஓர் அங்கம் என்பால் எனது சம்பளத்தின் பால் உள்ள அவர்களின் தேவையை அது ஒரு போதும் குறைத்து விடாது. ஆயினும் நான் சுயநலக்காரியாக இருக்க விரும்பவில்லை. இது விடயமாக நான் இன்னும் ஆராய்ந்து வருகிறேன் என்பதையும் அவர்களின் எதிர்காலத்தில் நிம்மதி ஏற்படாமல் எந்த முடிவையும் அமுல்படுத்த மாட்டேன் என்பதையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தினேன். அவர்களின் கண்களில் கண்ணீர் பொங்குவதைப் பார்த்தால் எனக்கு எவ்வளவு கவலையாக இருக்கும்.
ஞாயிற்றுக் கிழமை:
இன்று ஸ்பானிய கஷினோ கடைக்கு வலீத் ஆழ்ந்த கவலையுடன் வந்தான். என் இதயம் அச்சத்தால் அடித்துக் கொண்டது. என் முகத்திலே வரையப்பட்டிருந்த கவலை மேகங்களை அவன் அவதானித்திருக்கலாமல்லவா?
அவன் விரைந்து சொன்னான் :
“என்னை தொந்தரவு படுத்தாதே!”
“’ஏன் அப்படிச் சொல்கிறாய்?”
“பெய்ரூத்துக்கருகில் சரக்குக் கப்பல்களில் ஒன்று மூழ்கிவிட்டது! மூவாயிரம் ஜுனைஹ் பெறுமதியான எமது வியாபாரப் பொருட்கள் அதிலிருக்கின்றன.”
“உண்மையில் கவலையான விஷயம்தான். பெரிய சோதனைதான்.”
“நீயும் கவலைப்படாதே! நாம் எப்படியாவது சமாளித்து விடுவோம். வியாபாரம் என்பது எப்போதும் இப்படித்தான். நஷ்டம், லாபம், லாபம், நஷ்டம்.
இன்று நான் அவனுடன் நிறையப் பேச எண்ணியிருந்தேன். எதிர்காலத்திற்கான வெற்றிகரமான திட்டங்களை மாலை வரை அவனுடன் பேசி விவாதிக்க எண்ணியிருந்தேன். நான் ஒரு வார்த்தைக்கேனும் வாய் திறக்கவில்லை. வேறொரு நாளில் சந்திப்பதாக இருவரும் பிரிந்தோம். வலீத்துக்கேற்பட்ட துன்பம் நீங்க வேண்டுமென என்னுள்ளம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றது.
வியாழக்கிழமை:
ஏற்கனவே ஒத்துக் கொண்டது போல கஷினோவில் வலீத்தை நான் காணவில்லை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் வருவான் என உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்தேன். இதற்கு முன் அவன் எனக்கு வாக்குறுதி தவறியதில்லை. அவனது தந்தையின் உருவத்தைக் காணச் சகியாமல் என் மன கனவுகளிலிருந்து மீண்டேன். அவன் இருக்கையை இழுத்துப் போட்டுக் கொள்கிறான். என்னை நோக்கி அமர்கிறான். என் உடலிலுள்ள எல்லா உணர்ச்சி நரம்புகளும் நாணத்தால் குறுகுவதை என்னால் தடுக்க முடியவில்லை. ஆயினும் பலவீனமாகப் புன்னகையொன்றைத் தவழ விட்டேன். அவன் மயங்கி விழப்பார்த்தான்.
அந்த மனிதன் தெளிவாக இருந்தான். அவன் ஒரு பழைய வியாபாரி. ஆயினும் அவனது மகனைப் போல முற்று முழுதாகப் பேரம் பேசுவதை அறிந்திருக்கவில்லை. அவன் வெறுப்புடனேயே கூறினான்.
“என் மகன் ஒரு அகதிப்பெண்ணை முடிக்கவே மாட்டான்.”
அவனது வார்த்தை இடியைப்போல் என் மீது இறங்கியது. பூமி சுற்றியது. பின்னரும் அவன் சொல்வதைக் கேட்டேன்.
“வியாபார நிமித்தம் இன்று அவன் பெய்ரூத்துக்குப்போய்விட்டான். அவனுக்கு பொருத்தமானவளை மிக நீண்ட நாட்களுக்கு முன்பாகவே நான் தெரிவு செய்து விட்டேன். அவன் என் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறவே மாட்டான். பெண்ணே! உனக்கு புரிகிறதா? பெண்ணே! உனக்காக நான் வருந்துகிறேன். உன் கரம் பிடிக்க அபுறைஜ் முகாமில் பதிற்றுக்கணக்கான ஆண்கள் இருக்கின்றனர். அவர்கள் தான் உனக்கு பொருத்தமானவர்கள்.
கஷினோவிலிருந்து வெளியேறினேன். எனது பார்வையில் எல்லாமே இருண்டு போயிருந்தன. வாழ்கை அதன் அர்த்தத்தை இழந்திருந்தது.
No comments:
Post a Comment