Wednesday, March 21, 2012

தீர்மானத்தை நிறைவேற்ற களமிறங்கினார் கிலாரி……



அமெரிக்காவின் ஐ.நா. பிரேரணைக்கு எதிராக இலங்கை மேற்கொண்ட சகல விடயங்களையும் உன்னிப்பாக கவனித்துவரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைச் சபையில் கடுமையான அதிர்ச்சியைக் கொடுப்பதற்கு தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், கீழ்நிலை இராஜாங்க மட்டத்தில் இருந்த இலங்கை தொடர்பிலான பிரேரணை விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.   இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களிக்கும் நிலை தற்போது உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற மொத்தம் 47 நாடுகளில், லிபியாவுக்கான வாக்களிக்கும் தகைமை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 46 நாடுகளே வாக்களிக்கும் தகைமையைப் பெற்றுள்ளன.     இந்நிலையில் தற்போது 22 நாடுகள் குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சூழலில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இவ்விவகாரத்தை நேரடியாக கையாள்வத ற்கென தற்போது களத்தில் குதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு சினத்தை ஏற்படுத்தியிருந்ததோடு, அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு முஸ்லிம் மக்களை இலங்கை பாவித்தமையும் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், கீழ் நிலை இராஜாங்க மட்டத்தில் இருந்த இலங்கை தொடர்பிலான பிரேரணை விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக இலங்கை மேற்கொண்ட சகல விடயங்களையும் உன்னிப்பாக கவனித்துவரும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம், இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைச் சபையில் கடுமையான அதிர்ச்சியைக் கொடுப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெருமளவு நாடுகளின் ஆதரவை திரட்டி இலங்கைக்கு பெரும் இராஜதந்திரப் பின்னடைவை ஏற்படுத்த அமெரிக்கா தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலிலேயே, இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அரசாங்கத்தின் எதிர்காலத்திட்டம் குறித்து ஐ.நா. மனித உரிமை சபைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே வாஷிங்டன் வருமாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுக்கு ஹிலாரி கடிதமொன்றை அனுப்பியிருந்தார். இருப்பினும் குறித்த இக் கடிதத்திற்கு ஜி.எல்.பீரிஸ் பதிலளிக்கவில்லை. தற்போது அமைச்சர் பீரிஸ் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்திப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் கை கூடுவதற்குரிய வாய்ப்புகள் குறைவென்றே தெரியவருகிறது.

No comments:

Post a Comment