“சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்”17:81
பனி பொழியும் தேசங்களில் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம். ஒரு நாளில் நீங்கள் செய்யும் ஒவர் டைமையும் எத்தனை மணித்தியாலங்கள் என்பதை நாம் அறிவோம். ஒரு வருடத்தில் நீங்கள் எத்தனை தொழில் மாறுகிறீர்கள் என்பதையும் நாம் அறிவோம். ஸிப்ட் முறையில் நடுச்சாமங்களில் வேலைக்கு செல்வதும், நடுச்சாமங்களில் வேலை விட்டு வருவதும் உங்கள் வாழ்வின் துன்பியல் நாடகங்கள்.
உங்கள் இளமையை விற்றே யூரோக்களை கொள்வனவு செய்கிறீர்கள். உங்கள் சந்தோஷங்களை விற்றே பவுன்ஸ்களிற்கு சொந்தக்காரராகிறீர்கள். கிடைக்கும் வருமானத்தில் வீட்டு வாடகை செலுத்தி, கிறடிட் கார்டிற்கு பில் கட்டி, இன்ஸ்டோல்மென்ட்கள் செலுத்தி, டெலிபோன் மற்றும் ஏனைய வரிகள் கட்டி மிச்சம் வரும் பணத்தில் உம்மாவிற்கும், றாத்தாவிற்கும் அனுப்பி, எஞ்சி நிற்கும் சில்லறையை எண்ணும் போது அடுத்த ஸிப்டிற்கான மணி அடிக்கும். பூட்ஸ்களில் கால்களை திணித்துக்கொண்டு, ஜேர்கினுள் உடம்பை சுருட்டிக்கொண்டு, ஒரு பீஸ் சென்விட்சை கடித்துக்கொண்டு எலக்ரிக் ட்ரெய்னை மிஸ்பண்ண விடாமல் ஓடும் மனிதர்கள் நீங்கள்.
வாப்பாவின் மையத்திற்கும் இல்லை. உம்மாவின் மையத்திற்கும் இல்லை. மரியாதையாக நிமிர்ந்து பார்த்த மனிதர்களின் மையத்திற்கும் இல்லை. எம்மை உருவாக்கிய, எமக்கு கைகொடுத்த, எமக்கு ஆதரவளித்த மனிதர்களின் மையத்திற்கும் இல்லை. ஏன் கைகூடாமல் போன காதலியின் வாப்பாவின் மையத்திற்கும் இல்லை. ஓதித்தந்த லெவ்வையின் மையத்திற்கும் இல்லை. எல்லா செய்திகளையும் டெலிபோனில் கேட்டு அதை நாலு நாட்டில் உள்ள நாற்பது பேருக்கு சொல்லி மனவருத்தப்படுவதோடு சரி. வெள்ளைகார நாட்டில் நாம் உதவி செய்த, நாம் நம்பிய நம்மவர்களே நமக்கு துரோகம் செய்து நஷ்டமாகி மேலும் மேலும் ஓவர் டைம் செய்யும் மனித இயந்திரமாகி போனவர்கள் நீங்கள்.
இது எல்லாவற்றையும் தாண்டியே உங்கள் பணத்தை யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்புகளிற்கும், தனிநபர்களிற்கும் அனுப்புகிறீர்கள். அனுப்பியவுடன் உங்கள் உள்ளத்தில் ஆத்மார்த்தமான சந்தோஷம். அல்லாஹ்விற்காக செய்ததாக நிம்மதி. நல்ல முயற்சி தான். ஆனால் நீங்கள் அனுப்பும் பணம் என்ன செய்யப்படுகிறது?. நீங்கள் கேட்டால் இருக்கவே இருக்கிறது டிஜிட்டல் கமெரா. ஒரு பெனர். சில போட்டோக்கள். அவற்றை ஸ்கேன் பண்ணி ஈமெயில் பண்ணுவார்கள். நீங்களும் பரஸ்பரம் அதை பணம் தந்தவர்களிற்கு அனுப்பி அடுத்த நிதி சேகரிப்பிற்கு தயாராகிறீர்கள்..
நீங்கள் அனுப்பும் பணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது மையல்ல. உங்கள் இரத்தம். ஐரோப்பிய குளிரில் வெளிறி குளிர்ந்து உறைந்து போன இரத்தம்.
பணம் உங்களுடையதாக இருந்தாலும் நீங்களும் மறுமையில் கணக்கு கேட்க படுவீர்கள். நீங்கள் அனுப்பும் பணம் சரியான முறையில் சரியான விடயங்களிற்கு செலவழிக்கப்படுகிறதா என உறுதிப்படுத்துங்கள். கணக்கு விபரங்களை நீங்கள் மட்டும் கேட்காதீர்கள். அதை யாழ் சோனகதெருவின் பள்ளிவாயல்களில் ஒட்ட சொல்லுங்கள். எந்த ஒரு புரஜெக்டாக இருந்தாலும் அதை அது தொடர்பான ஒரு தொழில் வல்லுனரிடம் கொடுத்து அதற்கான ஆய்வறிக்கையை பெற்று கட்டம் கட்டமாக பணத்தை அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் பணத்தை இவர்கள் எவ்வாறு செலவு செய்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்த யாராவது தெரிந்த ஒருவரை நியமிக்காமல் சரியான மனிதர்களை இனங்கண்டு அவர்களிடம் பொருப்பை ஒப்படையுங்கள். அவர்களிற்கு, உங்கள் பணத்தை பெற்று அபிவிருத்திகளை மேற்கொள்ளும் குழுக்கள், தனிநபர்கள் என்பவர்களிடம் கேள்விகள் கேட்டு தெளிவு பெறச் சொல்லுங்கள்.
எத்தனையோ இலட்சங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. விழலுக்கு இறைக்கப்பட்டுள்ளன. அநியாயமாக்கப்பட்டுள்ளன. பாழாக்கப்பட்டுள்ளன. இந்த சுற்றோட்டம் இனியும் வேண்டாம். சோனக தெரு உருப்பட வேண்டி அதற்காக பணமனுப்பும் உங்களை போன்றவர்கள் அங்கு மேலும் மேலும் கஷ்டங்களை தான் சுமக்கிறீர்க்ள். நாம் இங்குள்ளவர்களை கள்வர்கள் என்று சொல்லவில்லை. மோசடிக்காரர்கள் என்றும் சொல்லவில்லை. உங்கள் பணம் 100 விகிதம் எதை நீங்கள் எதிர்பார்த்து அனுப்பினீர்களோ அதை பூர்த்தி செய்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நாம் சோனக தெருவை அபிவிருத்தி செய்வோம். நிச்சயமாக செய்வோம். ஆனால் திட்டமிட்ட முறையில், சரியான விதத்தில், இறைவனின் திருப்தி வரத்தக்க விதத்தில் அபிவிருத்தி செய்வோம். அது தான் நியாயமானது. அப்போது தான் உங்கள் கஷ்டங்களிற்கும், எண்ணங்களிற்கும் அறுவடை கிடைக்கும். அவ்வாறான நபர்களை இனங்கண்டு அவர்களிடம் பணத்தை கையளியுங்கள். எண்ணங்கள் மட்டும் சரியாக இருந்தால் போதாது. புரொஜெக்ட்கள் மட்டும் சரியாக இருந்தால் போதாது. அதை செயற்படுத்தும் மனிதர்களும் சரியாக இருக்க வேண்டும்.
இதை வாசிக்கும் போது உங்களின் அடுத்த ஸிப்டிற்கான மணி அடிக்கும் சப்தம் கேட்கிறது. ஓடுங்கள். ஒரு சிலைஸ் ப்ரட்டை நடெல்லாவில் பூசிக்கொண்டு ஓடுங்கள். எலக்ரிக் கோச்சை புடிக்க வேண்டுமல்லவா. அப்போது தானே இங்கு பணமனுப்ப முடியும்.
No comments:
Post a Comment