முஸ்லிம் சமூகம் ஒரு உடம்பை ஒத்தது. இலங்கை முஸ்லிம்கள் மிகப் பெரும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாம் உதவி ஒத்தாசையற்ற சிறுபான்மையினர் என உணரவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அனைவரும் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்கிறோம். அவர்களைப் பலப்படுத்துகிறோம். அவர்களுக்கு தேவையான உபதேசங்களை வழங்குகிறோம். ஏனெனில் இஸ்லாம் எங்களை ஒன்று படுத்துகிறது. எங்களுக்கு மத்தியில் இருக்கக் கூடிய சகோதரத்துவம் எங்களை இணைத்து விடுகிறது. முஃமின்கள் அனைவரும் சகோதரர்களே என ஷெய்க் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி தெரிவித்தார்.
கட்டார் நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நீதி அமைச்சரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றஊப் ஹக்கீம் தலைமையிலான தூதுக் குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை (17.04.2012) ஷெய்க் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்களை கட்டாரில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் குறித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின்போது அமைச்சர் ஹக்கீம் அவர்கள் ஷெய்க் கர்ளாவி அவர்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை இட்டு ஆழ்ந்த மகிழ்ச்சி அடையவதாகவும் ஷெய்க் அவர்களுடைய கருத்துக்களை வாசிப்பதன் ஊடாக அவர்களை நீண்ட காலமாக அறிந்து நேசித்து வருவதாகவும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நிலமைகள், அதன் சீர்திருத்தம் மற்றும் ஐக்கியம் குறித்தும் அவர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களால் அதிகம் கவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ஷெய்க் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஜாமிஆ நளீமிய்யாவுக்கு மேற்கொண்ட விஜயம் முஸ்லிம் சமூகத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.
அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினரை வரவேற்ற ஷெய்க் கர்ளாவி அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். அவர்கள், முஸ்லிம் சமூகம் ஒரு உடம்பை ஒத்தது. இலங்கை முஸ்லிம்கள் மிகப் பெரும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாம் உதவி ஒத்தாசையற்ற சிறுபான்மையினர் என உணரவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அனைவரும் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்கிறோம். அவர்களைப் பலப்படுத்துகிறோம். அவர்களுக்கு தேவையான உபதேசங்களை வழங்குகிறோம்.
ஏனெனில் இஸ்லாம் எங்களை ஒன்று படுத்துகிறது. எங்களுக்கு மத்தியில் இருக்கக் கூடிய சகோதரத்துவம் எங்களை இணைத்து விடுகிறது. முஃமின்கள் அனைவரும் சகோதரர்களே எனக் கூறி தனது உபதேசத்தை ஆரம்பித்த ஷெய்க் அவர்கள், மார்க்கத் தீர்ப்புக்கும் ஆய்வுகளுக்குமான ஐரோப்பிய ஒன்றியத்தை ஆரம்பித்தபோது ஐரோப்பிய முஸ்லிம்களுடனான தனது அனுபவத்தைக் கூறினார்.
ஐரோப்பாவில் காணப்படுகின்ற முஸ்லிம் சிறுபான்மைகளின் நிலமைகளை அவதானிக்கவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் திருமணம், தலாக், குடும்ப விவகாரம், பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரம் குறித்து மார்க்கத் தீர்புகள் வழங்க நிறுவப்பட்டுள்ள இந்நிறுவனத்திற்கு ஷெய்க் அவர்கள் தலைமை தாங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறுபான்மையினரைப் பொறுத்தவரை அவர்களுக்கென தனியான சட்டங்கள், தனியான மார்க்கத் தீர்ப்புகள் காணப்படுகின்றன. ஏனெனில், அவர்கள் தமது மார்க்கத்தோடும், அகீதாவோடும் அதற்கு முரணாக வாழ்கின்ற பெரும்பான்மையினர் மத்தியில் வாழுகின்றனர் என எடுத்துக் காட்டினார்.
No comments:
Post a Comment