இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை தொடர்பான இன்று (04) பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்திலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். விவாதத்தின் போது அமைச்சர் ஆற்றிய உரையின் முழு வடிவம் கீழே...
கௌரவ சபாநாயகர் அவர்களே!
நான் கூறும் கருத்துக்கள் அழகிய எங்கள் இலங்கைத்தீவின் எதிர்கால சுபீட்சத்திற்கானவை.
எனது எண்ணங்களும், இலக்கும் இந்த நாட்டில் வாழும் சகல இன, மத சமூகங்களும் சம உரிமையோடு, தலை நிமிர்ந்து வாழும் உன்னத இலட்சியங்களைக் கொண்டவையே.
ஆகவேதான், நான் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சராக மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், எண்ணங்களையும், இலட்சியங்களையும் ஈடேற்றும் யதார்த்தபூர்வமான நடைமுறைகளை ஏற்று, எமது மக்களின் பிரதிநிதியாகவுமே இந்த சபையில் எனது கருத்துக்களை முன் வைக்கின்றேன்.
நான் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைகளுக்காக எந்தளவிற்கு குரல் கொடுக்கின்றேனோ, அந்தளவிற்கு இலங்கைத்தீவின் இறைமையையும், சுயாதீனத்தையும், இன ஐக்கியத்தையும் விரும்புகின்றேன்.
இந்த நிலைப்பாட்டில் இருந்துதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத் தொடரிலும் நான் கலந்து கொண்டிருந்தேன்.
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைகளை வென்றெடுக்கவும், சிதைந்து போன எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை மீளக் கட்டியமைத்து, அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவும், அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டுவதற்காகவுமே நான் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்டிருந்தேன்.
நாம் எமது மக்களுக்கு வெளிப்படையாகவே கூறி வருவதுபோல், இந்த நிலைப்பாடு எமது கட்சியின் நடைமுறை சார்ந்த கொள்கையைக் கொண்டது.
நாம் எமது மக்களுக்கு எதைக் கூறுகின்றோமோ, அதையே வெளிப்படையாக செயற்படுத்தியும் வருகின்றோம். நாம் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை.
தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து சக தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களிலும் பார்க்க அதிகூடிய விருப்பு வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவன் என்ற வகையிலும், தமிழ் பேசும் மக்கள் எமக்கு வழங்கிய அரசியல் ஆணையை ஏற்றும் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
அங்கொரு பேச்சும், இங்கொரு பேச்சும் நாம் ஒருபோதும் பேசுவதில்லை. இடங்களுக்கு ஏற்றவாறு முகங்களை மாற்றிக் கொள்ள எம்மிடம் முகமூடிகள் இல்லை. அதை நாம் விரும்பவும் இல்லை.
நாம் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கும,; பெரும்பான்மை சமூகத்திற்கும் எமது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படையாகவே காட்டி இருக்கிறோம். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைக்கு ஏதுவான வழிமுறை எனக்கூறி ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவு வழங்கியுள்ளனர்.
நாம் காலம் காலமாக கூறிவந்த “ஐக்கிய இலங்கைக்குள் நிலைத்து நிற்கத்தக்கதும், நடைமுறைக்கு ஏதுவானதுமான அரசியல் தீர்வு” என்ற கோட்பாட்டை இன்று சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதை காலம் கடந்த ஞானமாக கருதுவதா?. அல்லது, வழமை போன்ற அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் என்று கருதுவதா?.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்ததை நான் வரவேற்கின்றேன். ஆனாலும,; அரசாங்கத்திற்கு ஒரு கருத்தும், அதற்கு மாறாக தமிழ் மக்களுக்கு இன்னொரு கருத்தும் கூறி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இரட்டைவேட அரசியல் நாடகத்தையே நாம் வெறுக்கின்றோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்திருந்த சமயம், அதனை நிராகரிப்பதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றது. இது என்ன வேடிக்கை.
ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்து, அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இன்று அமெரிக்கப் பிரேரணையை நிறைவேற்றாவிட்டால் விபரீத விளைவுகளை எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
எந்தவித உறுதியான நிலைப்பாடும் இல்லாதவர்கள், உணர்ச்சிகரமாகப் பேசுவதில் அர்த்தமில்லை. உண்மையும், நேர்மையும் உள்ளவர்களாக உணர்வு பூர்வமாகவும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையிலும் செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வர வேண்டும்.
ஈ.பி.டி.பியினராகிய (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) நாம், எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை குறித்து தெளிவான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறோம். நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, நிலைத்து நிற்கக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தை வகுத்து செயற்பட்டு வருகின்றோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், நாம் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்ற எமது மக்களின் அரசியல் தீர்வு குறித்த நிலைத்து நிற்கக் கூடிய நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளும் பொதிந்திருக்கின்றன. ஆகவேதான், அமெரிக்கப் பிரேரணைக்கு முன்னராகவே நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வரவேற்றிருந்தோம். அதை நடைமுறைப்படுத்துமாறும் கோரியிருந்தோம்.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஈ.பி.டி.பி மீது கூறப்பட்டிருக்கும் அவதூறுகள் பற்றியும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் நான் அளித்த சாட்சியத்தில் என்னால் கூறப்படாத விடயங்களையும், என்னிடம் கேட்கப்படாத கேள்விகளையும் ஆதாரம் எனக் காட்டி ஆணைக்குழுவின் பரிந்துரையில் எமது கட்சி மீது சேறுபூசப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை பொய்யென நிரூபிக்கும் வகையில் எனது வாய்மூல சாட்சியத்தின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இறுவட்டினையும், அதன் எழுத்து மூல பதிவின் பிரதியையும்;, நான் கூறியதாக மற்றும் என்னிடம் கேட்கப்பட்டதாக ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்ட விடயங்களின் தொகுப்பையும் இச்சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றம் செல்கின்றேன் என்பதையும் இங்கு அறியத் தருகின்றேன்.
ஈ.பி.டி.பி மீது சுமத்தப்பட்டிருக்கும் இக்குற்றச்சாட்டில் உள்நோக்கம் இருப்பதாகவே உணர்கின்றேன். ஏனெனில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை 17.12.2011 ல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் அதற்கு முன்பதாகவே அதாவது 22.11.2011 ம் திகதி இவ்வறிக்கையின் பரிந்துரைகளில் ஈ.பி.டி.பி மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறுகள் குறித்த செய்தி ஆங்கிலப் பத்திரிகையொன்றில் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருக்கின்றது.
இலங்கைக்கெதிரான அமெரிக்கப் பிரேரணையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கூறப்பட்டிருந்தாலும், அதில் திட்டமிடப்பட்ட உள்நோக்கங்கள் இருப்பதாகவே நாம் கருதுகின்றோம்.
இதுவரை கால அமெரிக்காவின் வரலாறுகள் யாவும் எமக்குப் பல உண்மைகளை கற்றுத் தந்திருக்கின்றன. உதவும் நண்பர்கள் போல் நடித்து, பிறநாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து, குழப்பங்களையும், கலகங்களையும் இன்று வரை விளைவித்துக் கொண்டிருக்கும் வரலாறுகளை நாம் காண்கின்றோம். இந்த அனுபவங்களை கற்றுக் கொண்ட நாம் தெளிவான தொலைதூரச் சிந்தனைகளோடு தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை வெற்றி அடையாமல் போயிருந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்; எமது நிலைப்பாட்டில் மாற்றம் இருந்திருக்காது. ஏனெனில், எமது வேலைத்திட்டத்தில் ஏற்கனவே அடங்கியுள்ள பல விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் கூறப்பட்டுள்ளன.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை வெற்றி பெற்றதான கற்பனையில் மார் தட்டிக் கொள்ளும் பெருமிதங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றோ, இன ஐக்கியம் பேணப்பட வேண்டுமென்றோ மனவிருப்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. வெறுமனே தமது சுயலாபக் கனவுகள் ஈடேறியிருப்பதான உணர்ச்சி ஊட்டும் மாய வித்தைகளே அதில் வெளிப்பட்டு நிற்கின்றன.
புலம்பெயர் அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதியொருவர் அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில், நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணையானது இலங்கையில் ஆட்சிமாற்றத்தை கொண்டு வருவதற்கான ஒரு முன்னேற்பாட்டு நடவடிக்கையே என்று கூறியிருக்கின்றார். இதிலிருந்து அமெரிக்கப் பிரேரணைக்கு வக்காளத்து வாங்குவதற்கான உள்நோக்கம் புலப்படுகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூக்குரலிடும் சில புலம்பெயர் அமைப்புக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன். நீங்கள் முதலில் உண்மையாக நடந்து கொள்ளுங்கள். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயத்தை நான் இங்கு வாசித்து காட்ட விரும்புகின்றேன்.
“புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்ததுடன் முரண்பாடுகள் மேலும் வலுவடைய காரணமாகவும் இருந்துள்ளனர். புலிகளின் முன்னிலை அமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும், அவை பல வியாபார நிலையங்களையும், கோவில் வருமானங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்த நிறுவனங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து மேற்படி அமைப்புக்களினால் வசூலிக்கப்பட்ட பெருந்தொகையான பணம் இன்னும் அவர்கள் கையில் இருப்பதனால் அவற்றை இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழ் மக்கள் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறையிருந்தால், முதலில் தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் நீங்கள் வசூலித்த, வசூலித்துக் கொண்டிருக்கும் பணத்தை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் மேம்பாட்டிற்காக செலவிடும் நடவடிக்கையை முதலில் மேற்கொள்ளுங்கள் என நான் எமது மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்பதுபோல் எமது பிரச்சினையை நாமே பேசித் தீர்க்க வேண்டும். இனங்களுக்கிடையில் பகைமையை வளர்த்துக் கொண்டு, இன முரண்பாடுகளைத் தூண்டி விட்டுக் கொண்டு, அரசியல் உரிமைப் பிரச்சினைக்கோ அன்றி வேறெந்தப் பிரச்சினைகளுக்கோ ஒருபோதும் தீர்வு கண்டுவிட முடியாது.
தாய்லாந்து, நோர்வே, ஜேர்மனி, ஜப்பான், சுவீஸ் என்று எத்தனையோ நாடுகளுக்குச் சென்று அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, கண்ட மிச்சம் தான் என்ன? இதயசுத்தி இல்லாமல் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது என்பதற்கு இதுவோர் உதாரணம்.
உள்நாட்டிலும் வட்டமேசை மாநாடு, சதுர மேசை மாநாடு என எத்தனையோ பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டும், ஏன் தற்போதைய அரசாங்கத்துடன் கூட ஒரு வருட காலத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் ஐக்கிய இலங்கைக்குள் நிலைத்து நிற்கத்தக்கதும், நடைமுறைக்கு ஏதுவானதுமான அரசியல் தீர்வை உங்களால் எட்ட இயலாமைக்கு காரணம் உங்களிடம் இதயசுத்தி இல்லாமையே.
எமது அரசாங்கம் ஒரு செயற்திட்டத்தை வகுத்து, அதன்வழி செயற்பட்டும் வருகிறது. இச் செயற்திட்டத்தில் அடங்கியுள்ள எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை குறித்த விடயங்களில் பல, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசாங்கம் தனது செயற்திட்டத்திற்கு அமைவாக எஞ்சியுள்ள விடயங்களையும் செயற்படுத்தும்.
அன்று நடைமுறையிலிருந்துவந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பல இன்று அகற்றப்பட்டுள்ளன. உதாரணமாக பாதுகாப்பு அனுமதி முறை, பிராயணங்களுக்கான முன் அனுமதி பெறல் , தொழில் செய்வதற்கான பாதுகாப்பு அனுமதி - குறிப்பாக, கடற்றொழிலுக்கான அனுமதி, சோதனைச் சாவடிகள், வீதித்தடைகள், வீதி ரோந்துகள், வீதி சோதனைகள், பயணிகள் சோதனைகள், வீட்டுச் சோதனைகள், விடுதி சோதனைகள், ஊரடங்குச்சட்டம், அவசரகாலச்சட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட வீதிகள், இராணுவப் பதிவு முறைமைகள், இராணுவ அடையாள அட்டை முறைமை போன்றவை இன்று நடைமுறையில் இல்லை.
அன்று இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட பாடசாலைகள் பல விடுவிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு அவற்றில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மக்கள் பாவனைக்கு விடப்படாதிருந்த வணக்கஸ்தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் இன்று பொது மக்கள் சுதந்திரமாக சென்று வருகின்றார்கள். உதாரணமாக, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், கீரிமலை தீர்த்தக் கேணி, கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம், காரைநகர் கசுரினா கடற்கரை, மூல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில், கிளிநொச்சி கந்தசாமி கோவில், மன்னார் மடு தேவாலயம், திருக்கேதீஸ்வரம் போன்றவற்றை சொல்லலாம்.
இவ்வாறான பிரச்சினைகள் இன்று எமது அரசாங்கத்தினால் தீர்க்கப்பட்டனவா? இல்லையா? என்பதை எண்ணிப் பாருங்கள்.
யுத்தத்தின் போது சரணடைந்தும், கைது செய்யப்பட்டும் இருந்த பல்லாயிரக்கணக்கான முன்னாள் புலி உறுப்பினர்கள் இன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவில்லையா?
பாவனைக்கு விடுவிக்கப்படாதிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மிதிவெடிகள் அகற்றப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவில்லையா?
தடைசெய்யப்பட்டிருந்த ஏ9 பாதை திறக்கப்படுவதானது யாழ்.குடாநாட்டு மக்களின் சொர்க்க வாசலாகக் கருதப்பட்டது. அப்பாதை திறக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் இடம்பெறவில்லையா? கடந்த கால அழிவு யுத்தத்தினால் சேதமாகிப் போன வட மாகாணத்திற்கான புகையிரதப் பாதைகளை மீள அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படவில்லையா?
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையா?
அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறப்பட்ட பல இடங்கள் பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்கப்படவில்லையா? அவ்விடங்களில் இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லையா?
சங்குப்பிட்டி பாலம் முதற்கொண்டு பல பாதைகள் புனரமைக்கப்படவில்லையா?
இலங்கையில் எவருக்கும் எந்தவொரு இடத்திற்கும் அச்சம் சந்தேகமின்றி சுதந்திரமாக சென்று வரக் கூடிய ஒர் சூழ்நிலை ஏற்படுத்தப்படவில்லையா?
இவற்றை அரசாங்கம் செய்வதற்கு எந்தவொரு ஆணைக்குழுக்களும் பரிந்துரை செய்திருக்கவில்லை. எந்தவொரு வெளியுலகத் தீர்மானங்களுக்கும், எதிர்த்தரப்பு அழுத்தங்களுக்கும் அடிபணிந்து அரசாங்கம் இவற்றை செய்திருக்கவுமில்லை.
இது போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைத்த எமது அரசாங்கம், மக்களின் நலனையும், ஜனநாயக முறைமைகளையும் நேசித்து இன்னமும் ஆற்றவேண்டிய பணிகளை ஆற்றும் என்பதனை உறுதிபட இச்சபையில் கூறி வைக்க விரும்புகின்றேன்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒர் அழிவு யுத்தத்தை சந்தித்து வந்த நாம் யுத்தத்தின் சிதைவுகளில் இருந்து நிமிர்ந்தெழ கால அவகாசம் தேவை என்ற உண்மையை நிராகரிக்கவில்லை.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிமுறையில் காலம் கடத்தும் தந்திரோபாயங்களை செய்து வந்திருந்தன. அவ்வாறான ஒரு பொறுப்பற்ற செயலை இந்த அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்காது என்பது எமது நம்பிக்கை.
ஏனெனில், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பிந்திய காலச்சூழலில் தமிழ் பேசும் தலைமைகளே அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் தட்டிக் கழிக்கும் சுயலாப அரசியலை நடத்தி வந்திருக்கின்றன.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சமயத்தில் புலிகள் தரப்பில் 652 உறுப்பினர்கள் மாத்திரமே இறந்துள்ளனர் என்று புலிகள் அன்று உரிமை கோரியிருந்தனர். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது?
கிடைத்த தீர்வுகளை ஏற்க மறுத்து, இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்களை சுயலாபத் தமிழ்த் தலைமைகள் யுத்த களத்தில் பலி கொடுத்திருக்கின்றன.
அழிவுகளுக்கும், அவலங்களுக்கும் நீங்களே காரணமாக இருந்துவிட்டு, இன்று உலகத்தின் கண்முன்பாக வெறுமனே போலிக்கு ஒப்பாரி வைத்து ஒலமிடுகின்றீர்கள்.
உண்மையாகவே நீங்கள் மக்களின் அழிவுகளை தடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தால், இறுதி யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்கள் புலிகளால் மனிதக் கேடயங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த விடயத்தையும், தமது பாதுகாப்புத் தேடி புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட முயற்சித்த மக்களை புலிகள் கொன்றொழித்த விடயத்தையும் உலக நாடுகளுக்கு முறையிட்டு தடுக்க முன்வந்திருக்கலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான வினோநோகராதலிங்கம் அவர்கள் லண்டனில் ஈஸ்ற்;ஹாம் பகுதியில் வைத்து கடந்த வருடம் மே மாதம் 8ம் திகதி செவ்வியொன்று வழங்கிய போது கூறிய விடயத்தை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். மனிதக் கேடயங்களாக புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியே செல்ல அனுமதிக்குமாறு தான் மட்டுமே புலிகளை நோக்கி கேட்டதாகவும் ஏனைய 21 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
வன்னி மோதல்களுக்கான தயாரிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் தனித்தனியாகவும், பொதுவாகவும் சந்தித்து அரசாங்கத்துடன் பேசி எமது மக்களின் அழிவுகளை தடுத்து நிறுத்துவோம் வாருங்கள் என்று கேட்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் அதை மறுக்காவிட்டாலும் ஜனாதிபதி அவர்களுடன் கதைப்பதற்கு முன்வந்திருக்கவில்லை.
இது எதைச் சுட்டிக்காட்டுகிறது? அப்பாவி மக்களின் அழிவுகளை வைத்து உங்கள் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் வக்கிர அரசியல் புத்தியே இதில் வெளிப்பட்டிருக்கின்றது.
இராணுவம் மடுவுக்கு வந்தால் நீங்கள் மதவாச்சியில் நிற்பீர்கள் என்றும், இராணுவம் கிளிநொச்சிக்கு வந்தால் நீங்கள் கொழும்பிலே நிற்பீர்கள்; என்றும் கூறினீர்கள். பீரங்கி பலம் கொண்டு அரசுடன் பேசுவோம் என்றீர்கள், 40 ஆயிரம் சவப்பெட்டிகளை படையினருக்காக தயாராக வைத்திருங்கள் என்றீர்கள், இதே சபையில் வைத்து அவ்வாறு வீரமுழக்கமிட்ட நீங்கள் இப்போது 40 ஆயிரம் மக்கள் பலியாகி விட்டார்கள் என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றீர்கள்.
நெஞ்சில் சூது !---- கண்களில் நீலிக் கண்ணீர்! உள்ளத்தில் வஞ்சம், கபட நாடகம்! உதட்டில் உரிமை பற்றிய வெற்றுக் கோசம்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் முதற்கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான பிறேமதாசா, சந்திரிக்கா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் என அனைத்து அரசுகளோடும் பேசி எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன.
இந்த அரிய வாய்ப்புகளை சுயலாபத் தமிழ்த் தலைமைகள் சரிவரப் பயன்படுத்தி இருந்தால், எமது மக்கள் அழிவுகளைச் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நடந்திருக்காது.
தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை தள்ளிச் சென்று, அவர்களின் உயிர்களை பலிகொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழிவுகளைப் பற்றியோ, அவலங்களைப் பற்றியோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.
இனப்பிரச்சினைக்கு துரிதமானதும், சகல தரப்பினருக்கும் ஏற்புடையதுமான தீர்வை விரைவில் எட்டுமுகமாகவே அரசு, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்னரே நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கு முன்வந்து, அதற்கான அங்கத்தவர்களை நியமிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கோரியிருந்தது.
அதுமட்டுமல்லாமல் பாராளுமன்ற தெரிவிற்குழுவின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான நகல் வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றம் செய்ததுடன், அத்தெரிவிற்குழுவானது ஆறுமாத கால வரையறைக்கு உட்பட்டு தனது நடவடிக்கையை பூர்த்தி செய்ய வேண்டுமென்றும் அரசு கூறியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வரை பாராளுமன்றத் தெரிவிற்குழுவிற்கு தனது அங்கத்தவர்களை நியமிக்காமல் விதண்டாவாதம் பேசி, சுயலாப அரசியல் கருதிய தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் கூட்டமைப்பின் வழமையான நோக்கத்திற்கு அமைவாக தமிழ் மக்களை நெருக்கடி மிக்க பதற்ற நிலைக்குள் தொடர்ந்து வைத்திருந்து அவர்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில் செயற்பட்டு வருகின்றது.
கடந்த ஒக்டோபரில் அரசு கோரியிருந்தமைக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவிற்குழுவிற்கான தனது அங்கத்தவர்களை நியமித்திருந்தால் இம்மாதத்திற்குள் பாராளுமன்றத் தெரிவிற்குழுவின் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றிருக்கும்.
ஆகவே காலத்தை இழுத்தடித்து தமது சுயலாப அரசியலுக்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் மேல் ஏறிமிதித்து, தேர்தல்கள் வரும் போது தேர்தலுக்காக மட்டும் அரசியல் நாடகம் நடாத்தி வருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாறாக தமிழ் தேர்தல் கூட்டமைப்பு என்று உங்கள் பெயரை மாற்றிக் கொள்வது சாலப் பொருத்தமாகும்.
தமது தேர்தல் வெற்றிக்காக மட்டும் அரசியல் சித்து விளையாட்டு நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறிக்குள்; எமது மக்கள் தொடர்ந்தும் வீழ்ந்துவிடப் போவதில்லையென்பதை கூட்டமைப்பினர் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே எமது அரசாங்கம் தனது செயற்திட்டத்திற்கு அமைவாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கும் ஏனைய முழுமையாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று கூறி அதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பங்களிப்புக்களை இதயசுத்தியுடன் வழங்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
ஜெனீவா பிரேரணை என்பது ஒரு மாய மான். நாடாளுமன்றத் தெரிவிற்கு குழுவின் தீர்வு என்பதே நிஜ மான். எனவே பாராளுமன்றத் தெரிவிற்குழுவின் மூலம் எமது அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைக்கு நடைமுறைக்கு ஏதுவான நிலையான தீர்வை எட்டுவதற்கு பங்களிப்பு வழங்குமாறு அனைத்து தரப்பினருக்கும் எமது மக்கள் சார்பாக மனிதாபிமான அழைப்பினை விடுக்கின்றேன்.
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்காக நாம் குரல் கொடுத்து வருவதும், அதற்காக நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் அர்ப்பணங்களோடு நாம் உழைத்து வருவதும் எமது இரத்தத்தோடும் தசையோடும் ஒன்றுகலந்து விட்ட இலட்சிய உணர்வுகளின் உயிர்த்துடிப்பேயாகும்.
எமது இலட்சியங்களை அடைவதற்கான பாதையை மட்டுமே நாம் மாற்றியிருக்கின்றோம். அதற்காக எமது பயணத்தை நாம் ஒரு போதும் கைவிடப்போவதில்லை.
எமது மக்களுக்காக நாம் எழுப்புகின்ற உரிமைக்குரல் வலிமையானதும் நீதியானதும் என்பதில் நாம் எந்தளவிற்கு உறுதியாக இருக்கின்றோமோ, அந்த உரிமைகளை அரசாங்கத்தோடு பேசிப் பெறுவதற்காக அரசாங்கத்தை நோக்கி நாம் நீட்டுகின்ற எமது உறவுக் கரங்களும் நியாயமானவை என்பதில் உறுதியாகவே இருக்கின்றோம்
எமது மக்கள் அரசியல் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாகவும் அழிவுகளில் இருந்து மீண்டெழுந்த புதியதொரு மானிட சமூகமாகவும் வாழ்வதற்கு வழி சமைக்கும் சமத்துவமானதொரு ஐக்கிய இலங்கையை நாம் கட்டியெழுப்புவோம்.
Thanks : Adadarana
No comments:
Post a Comment