Monday, April 02, 2012

தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுங்கள்! முஸ்லிம் உம்மத்துக்கு தலைமைத்துவம் அவசியம்




யாழ் முஸ்லிம் சம்மேளனத்தின் சல சலப்புகளிற்கு மத்தியிலான தலைமைத்துவ தெரிவு சம்மந்தமாக நாம் அவர்களிற்கு முன்வைக்கும் நஸீகத்..............
லைமைத்துவம் என்றால் என்ன? அது எந்தளவுக்கு இஸ்லாத்தில் வழியுறுத்தப்பட்ட விடயம் என்பதனை மனிதன் அறிந்துகொள்ளாததன் காரணத்தினால் பல சிக்கல்களை, கருத்து மோதல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. தலைமைத்துவம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. டொக்டர் ஹிஷாம் அத்தாலிப் எனும் அறிஞர் இஸ்லாமிய தலைமைத்துவம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.

வலுக்கட்டாயமற்ற வழி வகைகளைக் கொண்டு செயலாற்றுவதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தி ஒரு திட்டமிடப்பட்ட திசையில் மக்களை அவர்களுக்குள் நீண்டகால ரீதியில் சிறந்த பலனளிக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இஸ்லாமிய தலைமைத்துவமாகும். இவரின் கருத்தின் படி வற்புறுத்தல் இல்லாத வகையில் மனிதனை சிறந்த வழியில் கொண்டு செல்ல வழிகாட்டும் ஓர் அமைப்பு முறை என்று கூடக் கூறலாம்.
வழிகாட்டல் எனும் போதே அங்கு தலைமைத் துவம் உட்பொதிந்துள்ளதனைக் காணலாம்.
இஸ்லாம் உலகில் பரவிய காலத்திலிருந்தே தலைமைத்துவம் என்ற அம்சமும் தொடங்கிவிட்டது. இத்தலைமைத்துவமானது அல்லாஹுத்த ஆலாவினால் இறக்கியருளப்பட்ட அல்குர்ஆனில் இடம்பெறுவதனைக் காணலாம்.
“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்.
மேலும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விடயத்தில் சர்ச்சைப்பட்டுக் கொண்டால் அதனை அல்லாஹ் விடமும், அவனுடைய தூதரிடமும் நீங்கள் மீளவும் எடுத்துச் செல்லுங்கள்”. (அந்நிஸா-59) இவ் அல்குர்ஆன் வசனமானது தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதனை வழியுறுத்துகின்றது.
அதேவேளை தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் பற்றியும் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. அவர்கள் எத்தகையோர் என்றால் நாம் பூமியில் ஆற்றலை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுவார்கள்.
ஸகாத்தையும் கொடுத்து வருவார்கள். நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார்கள். மேலும் சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்ஹஜ்: 41) மேலும் தலைமைத்துவத்தை வகிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதனையும் அல்குர்ஆன் கூறுகின்றது.
“அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்கிறவரெல்லாம் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கின்றவர்கள் தாம். எனவே அத்தகையோர் நேர்வழி பெற்றவர்களில் அவர்கள் இருக்கப் போதுமானவர்கள்”. (அத்தவ்பா:18) இவ்வாறு அல்குர்ஆன் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவது பற்றியும், தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் நிலை பற்றியும் குறிப்பிடுகின்றது.
அத்தோடு நபி (ஸல்) அவர்களும் தலைமைத்துவம் பற்றி பெரும்பாலான விடயங்களில் வலியுறுத்தியுள்ளார்கள். “காய்ந்த திராட்சை போன்ற தலை முடியையுடைய நீக்ரோ அடிமை உங்கள் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவரது கட்டளைகளுக்கு செவிமடுத்து, அவருக்கு அடி பணியுங்கள்” (ஹதீஸ்). “இஸ்லாத்தின் வளங்கள் ஒவ்வொன்றாக அழிந்து போய்விடும். அவற்றில் ஒன்று அழியும்போது அடுத்துள்ளதை மக்கள் பற்றிப் பிடித்துக்கொள்வார்கள். அவ்விதம் தலைமைத்துவமே முதலில் அழியும்.
இறுதியாக அழிந்து போவது தொழுகை ஆகும்.” (அஹ்மத்) இவ்விரு ஹதீஸ்களின் மூலம் மனிதன் எந்தளவு தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுவதனைக் காணலாம்.
அதேவேளை முஸ்லிம் உம்மத்தினருக்கு கட்டாயம் தலைமைத்துவம் அவசியம் என்பதை நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்…
முஸ்லிம்களின் கூட்டமைப்பையும், அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலும் தலைமைத்துவப் பொறுப்பினை ஏற்பது சாதாரண ஒரு விடயமல்ல. அது பற்றி நாளை மறுமையில் பொறுப்புக்கூற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதுபற்றி ‘நிச்சயமாக தலைமைத்துவம் என்பது ஓர் அமானிதம். அதனை ஒருவர் தகைமை இல்லாத நிலையில் ஏற்றுக்கொண்டு, அதன் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றத் தவறினால் அது மறுமை நாளில் அவருக்கு கேடாகவும், சாபமாகவுமே மாறிவிடும். (முஸ்லிம்) மேலும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ‘மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரைத் தலைவராக நியமித்துக்கொள்ளுங்கள்” (புகாரி, அபூதாவூத்)
உண்மையில் இஸ்லாம் கூறுகின்ற வகையில் சிறந்த தலைமைத்துவம் அமையவேண்டுமாயின் தலைமைத்துவத்தை கையில் எடுப்பவர்கள் அல்குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவதோடு ஆளுமையுடையவராகவும், வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, நன்னடத்தை, திடவுறுதி, வீரம், பொறுமை, எளிமை, உடற்தோற்றம், முதிர்ச்சி (அனுபவம்), ஏனையோரை புரிந்து நடக்கக்கூடிய தன்மை, போன்ற பண்புகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
எனவே இஸ்லாம் கூறுகின்ற வகையில் தலைமைத்துவம் அமையுமாயின் சமூகத்தை சிறப்பான முறையில் இறை திருப்தியைப் பெற்று கொண்டு செல்ல முடியும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment