அண்மையில் பாராளுமன்ற உரையின் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலதிபர் அமைச்சர் தேவானந்தா அவர்கள் தமிழர் அரசியல் தலைமை பற்றி பல தெளிவான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில் அவர், அவர்களது கபடம், அரசியல் வங்குரோந்து தன்மை போன்ற பலவற்றையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார். இதனை வெறுமனே அரசியல் உரையாக மட்டும் கொள்ளலாகாது. இருண்ட தமிழர் போராட்ட வரலாற்றின் முக்கியமான பாடங்கள் சிலவும் உள்ளன.
இந்தியாவும், எதிர்பார்த்த கம்யூனிச தேசங்களும் கைவிட்ட நிலையிலேயே இந்த அரசியல் வெற்றியை இவர்களால் ஈட்ட முடிந்துள்ளது. இந்த வெற்றியின் ஆயுள் நிரந்தரமானதா, தற்காலிகமானதா என்பதை இப்போது கூற முடியாவிட்டாலும், பாசிஸ புலிகள் அமைப்பின் அழிவுடன் என்ன செய்வது?, எதிலிருந்து ஆரம்பிப்பது என்பதில் பெரிய குழப்பத்திற்கு ஆட்பட்ட தமிழ் சமூகமும் அதன் அரசியல் தலைமைகளும் திகைத்து நின்ற வேளையில் தமழ் புலம்பெயர் வாழ் அமைப்புக்களின் கைகளிற்கு விரும்பியோ விரும்பாமலோ போராட்டத்தை கொண்டு சென்று சேர்க்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளானது தமிழ் தலைமைகள். யூதர்கள் போல் எவ்வாறு செயற்படுவது, இஸ்ரேல் போன்று ஈழத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதிலே இவர்கள் கண்ணும் கருத்துமாக செயற்பட்டனர்.
இப்போது உலக அங்கீகாரம், அனுதாபம் போன்ற அரசியல் வரங்களை கையில் வைத்துக்கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகவர்விற்கு தயாராகிறது தமிழர் தரப்பு. இவர்களது பார்வையில் இலங்கை முஸ்லிம்கள் துரோகிகள். அந்த துரோகத்திற்கான பழிவாங்கள்களை சில நேரம் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மீது ஏதோவொரு வகையில் இவர்கள் காட்ட முற்படலாம். யாழ் பெரியபள்ளிவாயலில் படையினர் வருகை தந்த விடயத்தையும் அவர்கள் தவறாகவே புரிந்துள்ளனர். முஸ்லிம்கள் துரோகிகள் என்பதும், புலிகள் அன்று முஸ்லிம்களை களைத்தது சரியான ஒரு செயல்தான் என்பதும் இன்று யாழ்ப்பாணத்து தேநீர் கடைகளில் கதைக்குமளவிற்கு பரவலாகியுள்ளது.
முஸ்லிம்களை இனவாத நோக்கில் அனுகும் தமிழ் சக்திகளிற்கு இது ஒரு சிறந்த ஆயுதம். இதை சொல்லி சொல்லியே முஸ்லிம்கள் மீதான துவேச கருத்தியலை வளர்ப்பதற்கு இவர்களிற்கு அவகாசம் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாம் தெளிவான எமது நிலைப்பாட்டை முன்வைப்பது அவசியமாகும். யாரோ செய்தார்கள். நாம் என்ன செய்வது என்று சும்மா இருக்கும் விடயமல்ல இது. இதன் பின் விளைவுகள் கனம்மிக்கவை.
தமிழ் அரசியல் தலைமைகளிற்கும், நாம் அறியாத வேறு தமிழர் தலைமைகளிற்கும் நாம் சொல்வது இதை தான்.
“ தமிழ் மக்களே உங்கள் போராட்டத்தின் நியாயங்களும், அதற்கான தர்க்கரீதியான காரணங்களும் உங்களை பொருத்த வரை நியாயமாக இருக்கலாம். அதற்காக நீங்கள் பல வழிகளிலும் பல முயற்சிகளை செய்யலாம். அதை பற்றி எமக்கு கவலையில்லை. நாம் ஐக்கிய இலங்கை என்ற பதத்தின் கீழ் ஒன்றுபடவே விரும்புகிறோம். இந்த நாட்டின் யாப்பு சட்டங்களை மதித்து வாழவே விரும்புகிறோம். இந்த நாட்டின் இறைமையில் கைவைக்க நாம் ஒரு போதும் துணிந்தது கிடையாது. அதற்காக உங்கள் பிரச்சனைகளிற்கு எதிரான ஒரு சக்தியாக நாம் ஒரு போதும் எழுந்து நிற்கவும் போவதில்லை. உங்கள் போராட்டங்களிற்கு தடையாகவும் இருக்க போவதில்லை. அது எம்மை பாதிக்காத வரை. எமக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. பாரிய பிரச்சனைகள் இருக்கின்றன. நாம் இரண்டு பேரினவாத அழுத்தங்களிற்கு மத்தியில் வாழும் மக்கள். யாருடனும் முரண்பாட்டு அரசியலை கைக்கொள்ள நாம் தயாரில்லை. அதே வேளை தீமைக்கு துணை போகவும் நாம் தயாரில்லை.
ஜெனீவாவில் நாம் எமக்கு நடந்த அநியாயங்களை எடுத்துரைத்தோம். அவ்வளவுதான். அதை நாம் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டோம். புலிகளின் கொலை களங்கள் பற்றி வெளிச்சப்படுத்தினோம். இது தவறா. இது தவறென்று நீங்கள் சொன்னால் நீங்கள் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிப்பவர்களாவீர்கள். இப்போதும் புலிகளின் கோட்பாடுகளை சுமக்கும் கூட்டம் என உறுதிப்படுத்தியவர்களாவீர்கள். புலிகள் யார் என்பது பற்றி நாம் இங்கு சர்சைபடுத்தவில்லை. ஆனால் எங்களை பொருத்த வரையின் தமிழீழ விடுதலை புலிகள் கொடிய பயங்கரவாதிகள். எங்களை அழித்தவர்கள். எம் சொத்துக்களை சூறையாடியவர்கள். எம் பெண்களையும் குழந்தைகளையும் இரக்கமின்றி கொன்றவர்கள். எங்கள் மஸ்ஜித்களை அதே எங்களது இரத்தத்தினால் கழுவியவர்கள். எம் வாழ்வுரிமையை பறித்தவர்கள். கொள்ளையடித்தவர்கள்.
இவ்வாறான ஒரு பயங்கரவாத அமைப்பை இலங்கை ஜனாதிபதியும், அவர் படையினருமே அழித்தனர். அந்த வகையில் நாம் அவர்களிற்கு கடமைபட்டவர்கள். புலிகளை அழித்த விவகாரத்தை அமெரிக்கா கையில் எடுத்ததன் விளைவாகவே நாம் எம் அரசை காப்பாற்ற எம்மாலான முயற்சிகளை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் மேற்கொண்டோம். முல்லைதீவின் முள்ளிவாய்க்கால் பற்றி பேசவில்லை நாம். நாம் பேசியதெல்லாம் புலிப்பயங்கரவாதம் பற்றியே. எம் அரசின் பாதுகாப்பு பற்றியே. இதை நீங்கள் புரிந்து கொள்வீரக்ள் என்ற நம்பிக்கை எமக்கு இன்னும் இருக்கிறது. அந்த நம்பிக்கையை மெய்பிப்பதும் பொய்பிப்பதும் உங்கள் எதிர்கால அரசியலில் நடத்ததைகளிளேயே தங்கியுள்ளது.
உங்களது உரிமைகளை நாம் மதிக்கின்றோம். உங்கள் போராட்ட வடிவம் பற்றி எமக்கு தெரியாது. தெரியாத போராட்டத்தை கண்ணை மூடி ஆதரிக்க நாம் அரசியல் குருடர்களும் அல்ல. டக்ளஸ் தேவானந்தா சொல்லும் மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி எனும் அரசியல் தீர்வு பற்றி எமக்கு தெளிவுகள் உள்ளன. ஏனென்றால் அதை அவர் கடந்த 17 வருடங்களாகவே சொல்லி வருகிறார். ஆனால் உங்கள் அரசியல் என்பது மாயமானது. மூடுமந்திரமானது. சந்தர்ப்பவாதங்கள் நிறைந்தது. உங்களது நியாயமான வெளிப்படைதன்மையின் அடிப்படையிலேயே உங்களுடனான எங்கள் உறவுகளின் தெரிவுகள் அமையும். எதுவாக இருந்தாலும் இலங்கையை துண்டாடும் திட்டங்களிற்கு உடன்பட நாம் தயாரில்லை. அதே வேளை உங்கள் சமூகத்தின் நியாயமான, நீதியான உரிமைகளிற்காக குரல் கொடுக்க நாம் எப்போதும் தயார்.
நீங்கள் விரும்பிய வர்ணங்களை தெரிவு செய்து அதனை எம் சமூகத்தின் மீதான அரசியல் சாயமாக பூசாதீர்கள். எமக்கு எந்த சாயங்களும் தேவையில்லை. நாம் மண்ணை ஆள வந்தவர்கள் அல்ல. மண்ணில் புதைய வந்தவர்கள். எமக்கு இந்த உலகம் என்பது ஒரு தரிப்பிடம். நாம் நிரந்தரமாக வாழ நினைப்பது மறுமையில். எங்கள் மரணம் வரை நேர்மையாகவும் நீதியாகவும், அமைதியாகவும் எங்கள் இஸ்லாமிய மார்க்க கடமைகளை செய்ய கூடியதாகவும், எங்கள் பொருளாதாரங்களை மீட்டக் கூடியதாகவும் இருந்தால் போதும். அந்த வகையிலேயே எமது பூர்வீக மண்ணான யாழ்ப்பாண மண்ணை நாம் பார்க்கின்றோம். நேசிக்கின்றோம். எங்கள் புதைகுழிகள் கூட யாழ்ப்பாணத்தின் அமைதியான ஒரு மையவாடியில் அமைய வேண்டும் என்பதே எங்கள் அவாவும் கூட. இது தான் நாங்கள் எங்களை பற்றி உங்களிற்கு சொல்லக் கூடிய தெளிவான விளக்கம். நீங்கள் கற்றவர்களாக இருந்தால், நாகரீகத்தின் சொந்தக்காரர்களாக இருந்தால், கலாச்சாரங்களினதும் பண்பாடுகளினதும் வார்ப்பில் உருவானவர்களாக இருந்தால் நிச்சயம் இதை புரிந்து கொள்வீர்கள். நன்றி.”
அபூ துஜானா
No comments:
Post a Comment