Wednesday, April 04, 2012

அரசியலுக்காக வன்முறையை பிரயோகிக்காத ஒரு சமூகம் முஸ்லிம் சமூகம்



அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இந் நாட்டிலே இதுவரை காலமும் அரசியலுக்காக வன்முறையை பிரயோகிக்காத ஒரு சமூகத்தவராக முஸ்லிம்கள் பெருமைப்படலாம். தமிழ் சமூகத்திலும், சிங்கள சமூகத்திலும் அரசியலை அடியொட்டி வன்முறைகள் தலைதூக்கின. ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் அரசியலை நோக்கமாக கொண்டு அவ்வாறான ஆயுதக் கலாசாரம் தோன்றவில்லை.
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கெலிஓயா கலுகமுவ தரீக்காக்கள் சம்மேளனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) அங்குள்ள முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடாத்திய ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ என்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்ததாவது,
காலம் காலமாக கல்கமுவை கிராமத்தில் இருந்து வரும் காணிப்பிரச்சினையொன்றைப் பற்றி இங்கு கூறப்பட்டது. அக் காணிகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. துவேஷத்தின் காரணமாக அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஏனென்றால் எங்கள் சமூகத்திலும் அவ்வாறான ஒரு சிந்தனைப் போக்கு தலையெடுத்துள்ளது. மற்ற சமூகங்கள் முஸ்லிம் சமூகத்தை எவ்வாறு உற்று நோக்குகின்றன என்பதும் நாங்கள் அச் சமூகங்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதும் இந்த துவேஷம் எனப்படும் வார்த்தையோடு சம்பந்தப்பட்ட விபரீதங்களால் ஏற்படும் விஷயமாகும்.
இதனோடு தொடர்புபட்டதாகத் தான் எனக்கு முன் உரையாற்றிய பிரதி அமைச்சர் நண்பர் சேகுதாவூத் கையாண்ட ஓர் அம்சமான அடையாளத்தை இழந்துவிட்ட சமூகம் என்ற விஷயம் எனக்குத் தோன்றுகிறது. அடையாளத்தை நிறுவ முயற்சிப்பதற்கு ஆதாரமாக ஒரு விஷயத்தை அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களது அடையாளம் என்பது என்ன? எனப்படுவது ஒரு பிரதானமான கேள்வியாகும். ஆன்மீகம் என்பதுதான் உண்மையில் எங்களுடைய அடையாளமாகும். ஏனைய சமூகங்களைப் பொறுத்தவரை ஆன்மீகத்தை ஓர் அடையாளமாக ஏற்றுக்கொள்வது ஓர் இலேசான காரியமல்ல. அடையாளம் தான் அவர்களுக்கு வெறுப்புக்குரியதாக இருந்து வருகிறது.
நாம் எங்களது அடையாளம் என எதனை கருதுகிறோமோ அதனை ஏனைய சமூகத்தவர்வெறுப்புக்குரிய அம்சமாக நோக்குகின்றனர். இறைவன் எங்களது சமயத்திற்கு அவசியமான ஒரு பிரதான அம்சத்தை அல் குர்ஆனில் சுட்டிக்காட்டுகிறார். அந்தப் பண்பை தான் நாங்கள் அடையாளமாக காட்ட வேண்டும்.
அதுதான் ‘உம்மத்தன் வஸத்தன்’ என்ற நடுநிலையான சமுதாயம் என்ற அடையாளமாகும். அதுவே எங்களது உண்மையான அடையாளமாகும். ஆன்மீகத்திலே பல வகையறாக்கள் உள்ளன. அது ஒவ்வொரு தனி மனிதனதும் மனப் பக்குவத்தோடும் தொடர்புபட்ட அம்சமாகும். மனப்பக்குவத்திற்கேற்ப ஆன்மீகத்தில் வெவ்வேறு தராதரங்கள் மற்றும் படித்தரங்கள் இருக்கலாம். ஆன்மீகத்தை ஒவ்வொருவரும் அரவணைத்துக்கொள்வது அவர்களது முக்தியின் படித்தரத்தின் பக்குவத்தைப் பொறுத்தது. எனவே தான் நாங்கள் நடு நிலையான சமுதாயத்தவர் என்றிருக்கத் தக்கதாக எங்களைப் பற்றி ஒரு தவறான பார்வை ஏனைய சமுதாயத்தவர் மத்தியில் ஏற்படுவதற்கு நாங்கள் தான் ஒரு விதத்தில் காரணமாகி விட்டோம் என்றவாறு எங்களை நாங்களே ஒரு முறை திரும்பிப் பார்க்கின்ற ஒரு பார்வை எங்களுக்கு தேவைப்படுகின்றது.
அதில் முக்கியமானது தான் எங்கள் மத்தியில் காணப்படும் ஆன்மீகம் தொடர்பான தேவையற்ற கருத்து முரண்பாடுகள் ஆகும். மார்க்க வரையறைகள் அகீதா பற்றிய நான் இங்கு பேச முற்படவில்லை. ஆனால், ஒவ்வொரு கிராமங்களோடும் அதன் பாரம்பரியத்தோடும், பூர்வீகத்தோடும் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆன்மீகத்தோடு இரண்டர கலந்து விட்டதை காண்கிறோம். அரசியல்வாதி ஒருவராகிய நான் எந்தவொரு தனிப்பட்ட சன்மார்க்க இயத்திற்கும் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக யாரும் தவறாக எடை போட்டுவிட கூடாது.
நான் இயக்கம் சார்ந்தவனல்ல. ஆன்மீகம் எந்தவொரு தனிப்பட்ட இயக்கத்திற்கு மட்டும் உரியதோ அல்லது சொந்தமானதோ அல்ல. ஆன்மீகத்தில் உள்ள பக்குவம், படித்தரம், தராதரம் பற்றி தெரிந்தவர்கள் நான் எதனைக் கூறுகிறேன் என்பதை சரிவரப் புரிந்து கொள்வார்கள்.
இலங்கைக்கு ஆன்மீகத்தை கொண்டு வந்த பலர் கேரளத்திலிருந்து இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். மலபார் கரையோரத்திலிருந்து இங்கு ஆன்மீகப் பணிக்காக வந்து சென்ற சமயப் பெரியார்களின் பட்டியல் மிக நீண்டது.
இன்னொரு முக்கியமான விஷயம் தென்னிந்தியாவில் மூன்று முக்கிய பேரரசுகள் அமைந்திருந்தன. சேர, சோழ, பாண்டியர்கள் அங்கு ஆட்சி செய்திருக்கிறார்கள். சோழர்களும், பாண்டியர்களும் இலங்கைக்கு படையெடுத்து வந்து இந் நாட்டை கைப்பற்றினார்கள். ஆனால், சேரர்கள் மாத்திரம் தான் இலங்கைக்கு படையெடுத்து வரவில்லை. சேர நாட்டு படையெடுப்பு ஆன்மீகப் படையெடுப்பு மாத்திரமே. அந்த அடிப்படையில் இந் நாட்டுக்குள் வந்த ஆன்மீகத் தொடர்பு பற்றி அண்மையில் கேரளத்திலிருந்து வந்த சமயப் பெரியார்கள் சிலருடன் இதுபற்றி நான் குறிப்பிட்டேன். அது பற்றி நாம் கலந்துரையாடினோம்.
அவ்வாறே இலங்கைக்கு வந்த ஏனைய அந்நியர்கள் இந்நாட்டை கைப்பற்றுவதற்காகத்தான் இங்கு வந்தார்கள். முஸ்லிம்கள் மாத்திரம் தான் நாட்டை கைப்பற்ற வராதவர்கள். இந்த உண்மை எங்களது மாற்று சமூகத்தவர்களுக்கு இன்னும் சரிவர புரிந்ததாக தெரியவில்லை. நாங்கள் ஏதோ இந்த நாட்டை அபகரிக்க வந்தவர்கள், வெறும் வந்தேறு குடிகள், சுரண்டிப் பிழைக்க வந்தவர்கள் என்ற பார்வை எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது. இத்தகைய பார்வையின் ஒரு வெளிப்பாடு தான் துவேசம் என்கிற வார்த்தைப் பிரயோகத்தோடும் சம்பந்தப்பட்டுள்ளது. அத்தகையதொரு சூழ்நிலையில் தான் எமது அடையாளம், நாம் ஒரு நடுநிலையான சமுதாயம் என்பவற்றை நிறுவ வேண்டிய நிலைமை கூர்மையடைந்துள்ளது.
ஒரே சமூகமாக நாம் நடுநிலைமையாக இருக்கிறோம் என்ற விஷயத்தை ஓர் அடையாளமாக எங்கள் சமூகத்தில் உள்ள எல்லாப் பிரிவினரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஆன்மீகக் கூறுகள் இருக்கலாம். அவை தரிக்காக்களாகவோ, தௌஹீத் அமைப்புகளாகவோ, தப்லீக் இயக்கமாகவோ வேறு வடிவங்களிலோ இருக்கலாம். ஆனால், இந்த கூறுகளுக்கு இடையில் அவ்வப்போது உருவாகும் ஒரு போட்டி நிலை எமது சமுதாயத்தைப் பற்றி வேற்றுச் சமூகத்தவர்களுக்கு எம்மைப் பற்றிய ஒரு மிகத் தவறான பார்வையை உருவாக்கி விட்டது.
அன்றாடம் நாட்டின் ஏதாவது ஒரு கோணத்தில் அல்லது மூலையில் ஏதோ ஒரு விபரீதம் நடந்து கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் எங்களுக்கு இடையில் உள்ள ஆன்மீக முரண்பாடாகும்.
அரசாங்கம் கூட ஏதோ ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தோடு நோக்குவதற்கு இவ்வாறான நிலைமை வழிகோலிவிட்டது. அரச மேலிடம் என்னிடம் இதுபற்றி வினவும் அளவுக்கு சென்று விட்டது.
எங்கள் மீதான இந்தப் பார்வை மாற முடியாத அளவுக்கு நாம் சமய ரீதியாக உள்ளுக்குள் பிளவுபட்டு காணப்படுகிறது. இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். நடுநிலையான சமுதாயம் என்ற முக்கிய அம்சத்தை நாம் நிலைநாட்ட வேண்டிய முக்கிய கட்டத்திற்கு வரவேண்டும்.
ஆங்கிலத்தில் Sectarianism பிரிவினைவாதம் என்றுள்ளது. அதாவது ஒரே சமயத்திற்குள் குழுக்குழுக்களாக பிரிந்து செயற்படுவதைத்தான் இவ்வாறு கூறப்படுகிறது. ஆனால், எங்களுக்குள் காணப்படுவது பிரிவினைவாத குழுக்கள் அல்ல. அவற்றை சிந்தனை வட்டங்கள் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இதனை Schools of thoughts என்பார்கள். இஸ்லாத்திற்குள்ளும் ஒவ்வொரு விதமான சிந்தனை வட்டங்கள் உள்ளன. அதற்காக அவற்றை வேறுபட்ட வெவ்வேறு பிரிவுகளாக சித்திரிக்க முற்படக் கூடாது. ஒரே அல்லாஹ்வை வணங்குகிறோம். ஒரே நபியை இறுதித் திருத் தூதராக ஏற்றுக்கொள்கிறோம். ஒரே திருக்குர்ஆனையே பின்பற்றுகிறோம். ஆன்மீக ரீதியாக சிந்தனை வட்டங்கள் ஊடாக பிரிந்திருக்கிறோம். அந்தச் சிந்தனை வட்டங்கள் தான் தனித்தனி இயக்கங்களாக பரிணாமித்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அடிப்படையிலிருந்து வேறுபடாத ஆன்மீகச் சிக்கல்கள் அடிக்கடி ஏற்படுவதை காண்கிறோம்.
இவற்றின் விளைவாக மாற்றுச் சமூகத்தினர் எங்களைப் பற்றிய ஒரு பீதி மனப்பான்மையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் ஜனாதிபதி மாலைதீவில் ஜிஹாத் காரர்கள் இருக்கிறார்களே என என்னிடம் கூறினார். ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள் எனக் கேட்ட போது அண்மையில் மாலைத்தீவில் சார்க் மாநாடு நடைபெற்ற போது தமதும், இந்திய ஜனாதிபதியினதும் வேறு அரச தலைவர்களினதும் கட்அவுட்கள் இளைஞர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் அவ்வாறான ஒரு கேள்வியை அவர் எழுப்ப நேர்ந்தது. இஸ்லாத்தில் உருவங்களை தாங்கிய கட்அவுட்களுக்கு இடமில்லையென கூறி அவற்றை அகற்றி விட்டதால் இவ்வாறானதொரு மனப் பதிவு ஏற்பட ஏதுவாகிவிட்டது.
எதனை எங்கே செய்ய வேண்டுமென்று தெரியாததனால் முஸ்லிம்களை வன்முறையாளர்கள் என பார்க்கும் பார்வையேற்பட்டு விட்டது.
எங்களுக்குள் சியாரங்களை உடைக்கும் பொழுது சலசலப்பும், பிரச்சினையும் ஏற்படுவதுண்டு. ஆனால், நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அவ்வாறான வழிமுறைகளை கையாள்வது பொருத்தமில்லை. இதனால் சகிப்புத் தன்மை இல்லாத ஒரு சமூகமாக நாம் மாறிவிட்டோம். இஸ்லாத்தில் முக்கியமான அம்சமாக சகிப்புத் தன்மை விளங்குகிறது. அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு எவற்றையும் திணிக்க முன்வரக் கூடாது. அண்மையில் பிரபல சமய பிரசார இயக்கமொன்றில் பணியாற்றுவதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் பின்னணியில் ஏற்பட்ட சம்பவத்தையும் ஜனாதிபதியின் ஆலோசனைப் பிரகாரம் சுமூகமாக தீர்க்க முடிந்தது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் ஒரு சிநேகபூர்வமான ஒர் உரையாடல் இடம்பெற்றது.
நடுநிலைமைத் தன்மையையும் சகிப்புத் தன்மையையும் இழந்து விடாமல் நிதானமாக நடந்து கொள்ள நாம் முன் வருவதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றிய, முஸ்லிம்களைப் பற்றிய சரியான பார்வையை ஏற்படுத்த முடியும். பொறுமையை இழந்து, வன்முறையை கையாள முற்படக் கூடாது.
இந் நாட்டிலே இதுவரை காலமும் அரசியலுக்காக வன்முறையை பிரயோகிக்காத ஒரு சமூகமாக முஸ்லிம் ஆகிய நாம் பெருமைப்படலாம். தமிழ் சமூகத்திலும், சிங்கள சமூகத்திலும் அரசியலை அடியொட்டி வன்முறைகள் தலைதூக்கின. சிங்கள சமூகத்தில் இடதுசாரி இளைஞர்கள் ஜே.வி.பி என்ற போர்வையில் சேகுவேரா இயக்கம் என பெயர்சூட்டி ஆயிரக்கணக்கான இளைஞர்களை பழிகொள்ளும் அளவுக்கு ஒரு பாரிய கலவரம் இடம்பெற வழிவகுத்தது. ஆனால் இலக்குகள் எதையும் அவர்கள் இன்னும் அடையவில்லை. அதில் இன்னும் பல கூறுகளாக பிளவுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறே தமிழ் சமூகத்தில் விடுதலைப்புலிகள் தலைமை தாங்கினாலும் அதை அடியொட்டி வேறு சில இயக்கங்களும் வன்முறை கலாசாரத்தில் ஈடுபட்டு ஈற்றில் முப்பது வருடமாக நடாத்திய ஆயுதப் போராட்டம் பின்னர் பூச்சியத்திலே வந்து முடிந்திருக்கிறது. ஆனால் முஸ்லிம்களை பொறுத்தமட்டில் அரசியலுக்காக ஆயுதம் தாங்கவில்லை. மிகவும் சாதுரியமாக பல விஷயங்களை சாதித்துக்கொள்ளலாம் என எத்தனித்துக்கொண்டிருக்கும் போது ஆன்மீகத்திற்காக நாம் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைமைக்கு துரதிஷ்டவசமாக வர நேர்ந்தது கவலைக்குரியது. இஸ்லாத்தை வேறு சமூகத்தவர் மத்தியில் பரப்புவதற்காக செய்யும் விஷயமல்ல. ஆனால் எங்கள் மத்தியிலே இதற்கு வழிகோலப்படுவது உண்மையிலே வருந்தத்தக்கது. இவ்வாறு வன்முறையை கொண்டு வந்து வலிந்து புகுத்துகின்ற ஒரு விபரீதத்தை எங்களுக்குள்ளேயே ஏற்படுத்திக்கொள்வது எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல. இதன் விளைவாக முஸ்லிம்களைப் பற்றிய ஒரு பீதி மனப்பான்மையை மாற்று சமூகத்தார் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவாக நாங்கள் அபகரிக்க வந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் நீதி நியாயமாக எமது சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும் பரிகொடுக்க வேண்டிய பரிதாப நிலை காணப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் கெலிஓய கல்கமுவை பிரதேசத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைக்கு நாம் விரைவில் உரிய மட்டத்தில் பேசி சுமூகத் தீர;வை காண முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
எமது பூர்வீகத்தை நாம் பேணிக்கொள்வதற்காக வேறு மொழிகளைக் கூட எமது மூதாதையர்கள் அரவணைக்க விரும்பவில்லை. அதன் பயனாகவே அரபுத் தமிழ் என்ற லிபியும் இலக்கிய வடிவமும் தோற்றம் பெற்றன. அதாவது எமது முன்னோர்கள் தமிழைக் கூட அரபியில் எழுத ஆரம்பித்தார்கள். அவ்வாறே மலையாள மொழியையும், அரபியில் எழுதியிருக்கிறார்கள். அவ்வாறே, நான் அண்மையில் இந்தோனேஷியாவிற்குச் சென்றிருந்த பொழுது அங்கும் அரபியை இந்தோனேஷிய மொழியில் எழுதும் வழக்கம் இருந்ததாக கூறினார்கள்.
அடையாளத்தைப் பேணிக்கொள்ள வேண்டும் ஆர்வமே எமது மூதாதையர்கள் இவ்வாறான முடிவுகளை மேற்கொள்ள காரணமாக அமைந்தது. அண்மைக் காலமாக அரபுத் தமிழ் உபயோகத்தைப் பற்றி நான் பேசி வரும் போதிலும் ஏற்கனவே வழக்கொழிந்து போன ஓர் எழுத்து வடிவத்தை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டு வருவது இலகுவான காரியமல்ல என்பதை நான் நன்கு உணர்ந்து இருக்கின்றேன். ஆனால், எங்களது நடுநிலைத் தன்மை என்பது இன்னும் வழக்கொழிந்து போகவில்லை. எங்களது சமூகத்தின் நடுநிலைத் தன்மையும், இஸ்லாம் வலியுறுத்தும் சகிப்புத் தன்மையையும் சரிவரப் பேண வேண்டும் என்பதில் எங்களில் பெரும்பாலானோர் மிகவும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், வெறும் சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒரு போதும் தயாராக இல்லை.
தகவல் : F.M. பர்ஹான்- LankaMuslim

No comments:

Post a Comment