தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இன விரிசலை ஏற்படுத்தி நல்லுறவை சீர்குலைக்கின்றது TNA
மாவை, வினோ எம்.பிக்கள் மீது ஹுனைஸ் எம்.பி. பாய்ச்சல்
தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைத்து இனங்களுக்கிடையே பிளவை உருவாக்கி அரசியலில் குளிர்காய தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் முற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் எமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் தெரிவிக்கப்பட்டிருந்த நியாயமான குற்றச்சாட்டுக்களை பூதாகரப்படுத்தி, இனங்களுக்கிடையேயான நல்லுறவை சீரழிக்க கூட்டமைப்பு எம்.பிக்களான வினோநோகராதலிங்கமும், மாவை சேனாதிராஜாவும் முயற்சி செய்வதாக ஹுனைஸ் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கிலிருந்து 1990 ம் ஆண்டு முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் புலிகளால் விரட்டப்பட்ட போது வாய்மூடி மெளனம் காத்தவர்தான் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்கள். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயக பூமியில் குடியேற முயற்சிக்கும் போது மன்னார் ஆயர் தடையாக இருப்பது வேதனையாயுள்ளது. மன்னார் மாவட்டத்தில் சன்னார் என்ற கிராமத்தில், அகதி முஸ்லிம்கள் மீண்டும் தமது பூர்வீக காணியில் குடியேற முற்படும் போது அதையெதிர்த்து ஜனாதிபதிக்கு அவர் கடிதமொன்றை எழுதியிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
விடத்தல்தீவு முஸ்லிம்களுடனோ, அந்த முஸ்லிம்களின் பிரதிநிதிகளுடனோ அல்லது பள்ளிவாசல் நிருவாகத்தினரு டனோ கலந்து பேசி உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியமையை மாவை எம்.பியும் வினோ எம்.பியும் ஏற்றுக் கொள்கின்றனரா?... மக்களால் போற்றப்படும் மத பிரமுகரொருவர் ஓரினத்திற்கெதிராக அதுவும் புலிகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கெதிராக ஜனாதிபதியிடம் கடிதம் அனுப்பியமையை மனித நேயமுள்ள எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
வன்னி மாவட்ட மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும் பொறுப்புணர்வுள்ள அமைச்சர் என்ற வகையிலும் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்றத்தில் ஆயர் ஜோசப்பின் செயற்பாடுகள் குறித்து பிரஸ்தாபித்ததை கறுப்புக் கண்ணாடி கொண்டு நோக்கி அதனை மிகைப்படுத்தி பத்திரிகைகளில் அரைவேக்காட்டுத்தனமாக எம்.பிக்களான மாவையும் வினோவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
விடத்தல்தீவுடன் தொடர்புடைய வினோ எம்.பிக்கு சன்னார் பிரதேசக் காணிகளின் பூர்வீக வரலாறு தெரியாததொன்றல்ல. விடத்தல்தீவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் சொந்தக் காணியே அது என்ற உண்மை அவருக்குத் தெரியும். முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த காணிகளின் ஒரு பகுதியில் நூற்றுக்கணக்காக தமிழ் குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தமையும் அவருக்குத் தெரியும்.
அத்துடன் அதையண்டிய முஸ்லிம்களுக்கு சொந்தமான ஈச்சளவக்கை எனும் இடத்தில் மாவீரர் குடும்பங்களை புலிகள் குடியமர்த்தியமையையும் விநோ எம்.பி. நன்கறிவார். யுத்தம் முடிவடைந்த பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பிரதேசங்களில் மீளக்குடியேற தலைப்பட்ட போது அங்கு புதிதாக குடியேறி வாழ்ந்து வரும் தமிழ் குடும்பங்களுக்கு எந்தவிதமான பாதிப்புமில்லாமலேயே தமது முயற்சியை முன்னெடுத்தனர்.
குடியேறுவதற்கு அவர்கள் ஆயத்தமான போது இனவாதத்தை கக்கி அவர்களின் குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டன. அந்த சக்திகளுக்கு மன்னார் ஆயர் துணையாக இருப்பது வேதனையானது எனவும் ரிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். வடக்கிலுள்ள முஸ்லிம்களின் 87ற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் புலிகளால் துவம்சம் செய்யப்பட்ட போது பேசாதிருந்த மன்னார் ஆயர் முஸ்லிம்கள் மீள் குடியேறச் செல்லும் போதும் தடையாக இருக்கின்றாரே என அமைச்சர் வேதனைப்பட்டார்.
தம்புள்ளையில் பெளத்த பிக்குமார் பள்ளிவாசலை அகற்ற முயற்சிப்பதுபோல மன்னார் முஸ்லிம்களையும் மீளக்குடியேற விடாமல் ஆயர் தடுக்கின்றாரா? என்ற கேள்வியையும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் எழுப்பினார். அமைச்சர் தனது நியாயமான ஆதங்கத்தை உயர் சபையொன்றில் தெரிவித்தமை தவறா?
யுத்தத்தின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்கள் வெளியேறி வவுனியாவில் தஞ்சமடைந்த போது அவர்களை எட்டிப்பார்க்காத இந்த எம்பிக்கள் தற்போது அவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். அபலைகளாக வந்த அந்த மக்களை சொந்த சகோதரர் போல அரவணைத்து அவர்களுக்கு உதவி வழங்கி அதிகமானோரை மீள்குடியேற்றியவர் இந்த ரிசாத் பதியுதீனே. இந்த உண்மையை மாவையும், விநோ எம்.பியும் ஒருபோதும் மறக்கக்கூடாது.
வன்னியில் பிறந்து, வளர்ந்த வினோ எம்.பியை போன்ற நன்றி கெட்ட மக்கள் பிரதிநிதிகள் இதனை மறந்தாலும் தமிழ் மக்கள் மறக்கப் போவதில்லை. அத்துடன் மேடைகளிலே தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமையை பற்றிப் பேசும் பழம்பெரும் தமிழ் அரசியல் வாதி மாவை சேனாதிராஜா போன்றவர்கள் உண்மை நிலைகளை புரிந்து கொள்ளாமல் ஆயருக்கு பரிந்து பேசுவதுபோல காட்டி அரசியல் இலாபம் தேடுவதே உள்நோக்கம். இதன் மூலம் அவர்கள் தமது இருப்பை பாதுகாக்க முயலுகின்றனர்.
விநோ எம்.பி. போன்றவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க எத்தனிக்கக் கூடாது. வடமாகாண தமிழர்களின் மீள் குடியேற்றம், தொழில் வாய்ப்பு, நலவுரிமைகள் போன்றவற்றில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் அமைச்சர் ரிசாத்திற்கு எதிராக ஊடகங்களை பயன்படுத்தி இனவாதத்தைக் கிளப்பி வரும் இந்த எம்பிக்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதே தமிழ், முஸ்லிம் உறவிற்கு ஆரோக்கிய மானதென ஹுனைஸ் பாரூக் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இனவாதத்திற்கு தூபமிட்டு அரசியல் நடத்த முடியுமென இந்த எம்.பிக்கள் பகற் கனவு காணக்கூடாது.
இது முஸ்லிம்களின் வாழ்வாதார பிரச்சினை. 30 வருடங்கள் அகதி வாழ்க்கையில் துன்பப்பட்ட இந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் கூட தடையாக இருக்கக் கூடாதென்பதே இந்த மக்களின் கோரிக்கையாகும்.
தினகரன்
Meelparivai
No comments:
Post a Comment