இதுவும் கவிதையோன்னு பயந்துடாதீங்க. தலைப்பு மட்டுமே அப்பப்போ கவிதைத்தனமா இருக்கும்னு நாஞ்சொல்லாமலே உங்களுக்குத் தெரியும்கிறதாலத்தான் தைரியமா உள்ளே வந்திருக்கீங்க. இது ஒரு ”டெக்னிக்கல் வரலாற்றுப் பதிவு”ன்னு சொல்லலாம். அடடா... ஓடக்கூடாது. வரலாறு முக்கியம் தோழர்களே!!
ஆரம்பகாலங்களில் - கி.பி. 300-400க்கு இடைப்பட்ட காலங்களில், கண்ணின் பார்வை என்பது, கண்ணிலிருந்து வெளிவரும் ஒளி பொருட்களின்மீது பட்டு பிரதிபலித்து, மீண்டும் கண்ணினுள் நுழைவதாலேயே என்றே டாலமி (Ptolemy), யூக்ளிட் (Euclid) போன்ற அறிஞர்களின் புரிதல் இருந்தது. பின்வந்த அரிஸ்டாட்டில், கேலென் (Galen) போன்றவர்கள் நாம் பார்க்கும் பொருளிலிருந்து நம் கண்ணிற்குள் ஏதோ ஒரு ஏதோ ஒரு ”இயற்பொருள்” (physical form) நுழைவதாலேயே பார்க்க முடிகிறது என்று கூறினர். எனினும் இதை ஒரு ஊகமாகவே அல்லாது, அந்த இயற்பொருள் என்னவென்று அவர்கள் தகுந்த ஆய்வுகளின் மூலம் விளக்கவில்லை.
அதன்பிறகு இதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. காரணம் 5ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டுவரையான காலம், ஐரோப்பாவின் “இருண்ட காலம்” என்று அழைக்கப்படுமளவுக்கு அங்கு குறிப்பிடத்தகுந்த அறிஞர்கள் யாரும் இல்லை. பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடுவது மாதிரி, இது உலகம் முழுமைக்குமான இருண்ட காலம்போல வரலாற்றில் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், அந்த காலகட்டங்களில்தான் பெர்ஷியா, எகிப்து, இந்தியா உள்ளிட்ட ஆப்பிரிக்க-ஆசியப் பகுதிகளில் அறிஞர்கள் பலர் தோன்றினர்.
அவர்களில் ஒருவர்தாம், கி.பி. 965-ல் ஈராக்கின் பஸ்ரா நகரில் பிறந்த ”அல்ஹஸன் இப்ன் அல்-ஹைதம்” என்பவர். ”இப்ன் அல்-ஹைதம்” என்று அரேபிய வரலாற்றில் அழைக்கப்பட்ட இவர், ஐரோப்பாவில் அல்ஹாஸன் (Alhazen) என்று அறியப்பட்டார். ஒளியியல், இயற்பியல், கணிதம், வானவியல், தத்துவம், விஞ்ஞான முறைகள் என்று பல்துறைநிபுணராக (Polymath) ஆக விளங்கினார். எல்லாத் துறைகளுக்கும் சேர்த்து இவர் எழுதிய புத்தகங்களும், ஆய்வுக்கட்டுரைகளும் 200க்கும் மேலே!!
இவர், அறிஞர்கள் டாலமி மற்றும் யூக்ளிட் ஆகியோரின் “பார்வை”க்கான விளக்கத்தை மறுத்தார். நாம் பார்க்கும்போது, கண்ணிலிருந்து ஒளி தோன்றி பொருட்களின்மீது விழுவதாலேயே பார்க்க முடிகிறது என்பது உண்மையானால், பிரகாசமான அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசுவது ஏன்? மேலும், விண்ணில் இருக்கும் சில நட்சத்திரங்களைக்கூட வெறும் கண்ணால் - அதுவும் கண்ணைத் திறந்த உடனே - பார்க்க முடிவதெப்படி என்றும் கேள்விகள் எழுப்பி, அது தவறென்று உணர்த்தினார். மேலும், ஒளிக்கற்றைகள் பொருட்களின்மீது விழுந்து, பின் நம் கண்களுக்குள் நுழைவதாலேயே “பார்வை” நடக்கிறது என்றும் நிரூபித்தார். லென்ஸ்கள், கண்ணாடிகள் உதவிகொண்டு ஒளிக்கற்றைகள் எப்போதும் நேர்க்கோட்டிலேயே பயணிக்கின்றன என்றும் நிரூபித்தார்.

இவரது பரிசோதனைகளின் முக்கியமான மைல்கல் “கேமரா அப்ஸ்க்யூரா” (Camera Obscura) என்ற “ஊசித்துளை கேமரா” முறையாகும். ஒரு இருட்டு அறையின் சுவற்றில் இட்ட சிறு ஊசித்துளைவழி ஊடுறுவும் புறவெளிச்சம், வெளியே உள்ள காட்சியைத் தெளிவாகக் காட்டும் (ஆனால், தலைகீழாக) என்பதைச் செயல்படுத்திக் காண்பித்தார். இதுவே பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கேமராவின் செயல்முறைக்கும், பெயருக்கும் அடிப்படையாகும்!! அல்-ஹைத்தம் அரபியில் இருட்டு அறையை “பைத் அல்முத்திம்” என்கிறார். அதாவது, லத்தீன் மொழியில் “கேமரா அப்ஸ்க்யூரா”; ஆங்கிலத்தில் “dark chamber"!! இதுபோதுமே கேமராவின் ஆரம்பம் எங்கென்று தெரிந்துகொள்வதற்கு!!
http://www.youtube.com/watch?v=a5icY1dMin4

மேலும் இச்சோதனையைக் கொண்டே, “பார்வை” என்பது என்ன, கண்ணின் அமைப்பு, கண்ணில் உருவங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதையெல்லாமும்கூட விவரித்தார். “காட்சி” (vision) என்பதில் மூளையின் செயல்பாடும் உண்டு என்பதையும் விவாதித்த முதல் விஞ்ஞானியும்கூட!! இதன்மூலம், கண் மருத்துவத்திற்கும் பங்காற்றியுள்ளார்.இன்னும் ஒளியியலில் எண்ணற்ற கோட்பாடுகள், பரிசோதனைகள், கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். அவற்றையெல்லாம் “Book of Optics" (Kitâb al-Manâzir) என்ற தலைப்பில் ஏழு தொகுதிகளாக எழுதி வைத்துள்ளார். இப்புத்தகம் லத்தீன் மொழியில் 12-ம் நூற்றாண்டில் மொழிபயர்க்கப்பட்டது.
இந்நூல், பின்னாளைய அறிஞர்களான ராபர்ட் க்ரோஸெடெஸ்ட், ரோஜர் பேகான், ஜான் பெக்ஹாம், விடேலோ, வில்லியம் ஆஃப் ஓக்ஹம், லியனார்டோ டாவின்ஸி, ஜோஹன்னெஸ் கெப்ளர், கலிலியோ, நியூட்டன் உள்ளிட்டவர்களின் ஆய்வுகளுக்கு உதவியுள்ளது. அதோடல்லாமல், மூக்குக் கண்ணாடி, கேமரா, டெலஸ்கோப், மைக்ரோஸ்கோப், கண் அறுவை சிகிச்சை, ரோபாட்டுகளின் “பார்வை” ஆகியவை உள்ளிட்ட பார்வை மற்றும் ஒளி சார்ந்த முக்கிய கண்டுபிடிப்புகளுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் துணையாயிருந்தது.
இக்காரணங்களாலேயே அல்-ஹைத்தம் ”ஒளியியலின் தந்தை” (Father of Modern Optics)என்று அழைக்கப்படுகிறார்.
இவர் சார்ந்த துறைக்கு மட்டுமல்லாமல், பொதுவாகவே ஆராய்ச்சித் துறைக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கிறார். இவர் காலத்திற்கு முன்பு வரை, அறிவியல் தத்துவார்த்த ரீதியாகவே அணுகப்பட்டது. ஒரு புதிய கோட்பாடு உருவாகும் சமயத்து, அது தர்க்க ரீதியாக, யூகமாகத்தான் சொல்லப்பட்டது. அல்லாமல், இன்றுள்ளது போல அது தகுந்த ஆராய்ச்சிகள், பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்படும் வழக்கம் இல்லை. அல்-ஹைத்தம்தான் இதிலும் முன்னோடியாக இருக்கிறார். ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கும்போதோ அல்லது முந்தையவர்களின் கோட்பாட்டை மறுக்கும்போதோ, முதலில் அதைச் சரியாகக் கூர்ந்து கவனித்து, விவர அறிக்கை எழுதி, ஒரு உத்தேசக் கோட்பாடு வகுத்து, அதை ஆராய்ந்து பரிசோதித்து, பரிசோதனையின் முடிவுகளை ஆய்ந்து, தரவுகளின் விளக்கமளித்து, அதனடிப்படையில் ஒரு முடிவை எத்தியபின், இவ்விபரங்களோடு தன் கண்டுபிடிப்புகளைப் பகிர்தல் என்ற வரிசைக்கிரமப்படி உலகில் முதன்முதல் செயலாற்றியவர் இவரே. பரிசோதனை- ”experiment" என்கிற வார்த்தைக்கான அடித்தளமே அவரது ஒளியியல் குறித்த நூலில்தான் இடப்பட்டது என்றால் மிகையில்லை.
ஒரு விஞ்ஞானி எனப்படுபவர் எவ்வாறு பணியாற்றவேண்டும் என்பதற்குரிய வரைமுறைகளை வகுத்துத் தந்தவராகையால், இவர் “உலகின் முதல் விஞ்ஞானி” (World's first scientist) என்றும் அழைக்கப்படுகிறார்.
“இறையியல்” (Theology) துறையையும் விட்டுவைக்காத அல்-ஹைத்தம் சொல்கிறார்:
"உண்மை, அதன்பொருட்டே தேடப்படுகிறது. உண்மையைக் கண்டறிவது கடினமானது. அதை நோக்கிய பாதை கரடுமுரடானது.. ஏனெனில் உண்மை தெளிவற்ற இருட்சியில் மூழ்கியுள்ளது... அறிவியலாளர்கள் பிழைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர்; அறிவியலும் குற்றங்குறைகள் உடையதே......
அறிவையும், உண்மையையும் நான் தொடர்ந்து தேடிவருகிறேன். ஏனெனில் இறைவனின் ஒளிர்வை அணுகவும், அவனோடு நெருக்கத்தை அடைவதற்கும் இதைவிடச் சிறந்த வழியில்லை என்பது என் நம்பிக்கை!!"
Ref:
http://en.wikipedia.org/wiki/Alhazen
http://en.wikipedia.org/wiki/Book_of_Optics
http://www.1001inventions.com/ibnalhaytham
http://harvardmagazine.com/2003/09/ibn-al-haytham-html
http://ezinearticles.com/?Who-Was-the-First-Scientist?&id=637076
http://news.bbc.co.uk/2/hi/7810846.stm
http://www.firstscientist.net/
http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Al-Haytham.html
Book: 1001 inventions: Muslim heritage in our world
Published by: Foundation for Science Technology and Civilisation
No comments:
Post a Comment