Saturday, June 16, 2012

மூதூர் மூனாம் கட்டை மலையும் பௌத்த விஹாரையும்



திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேசத்தில் திருமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர் நகரத்திலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில்(64வது மைல்கல் பகுதியில்) அமைந்திருக்கும் ஒரு அழகான கிராமமே ஜபல் நகராகும். இக்கிராமத்தின் தெற்குப் பகுதியில் இருப்பது ‘மூனாம் கட்டை’ மலையாகும். இம்மலை இன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. இதற்குக் காரணம் அம்மலையை பௌத்த விஹாரையோடு இணைத்து பலரும்பார்ப்பதேயாகும்.
ஆனால்,இம்மலையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு 2002ஆண்டு ஏப்ரல் மாதம் சிலர் சில சமைய அடையாளங்களை வைத்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்தநிலையில் அவை வேறு சிலரால் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து 2002.06.25ஆம் திகதியன்று மூதூரில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே பிணக்கொன்று உருவாகியது. இப்பிணக்கின் பின்புலமே 2003.04.17ஆம் திகதியன்று மூதூரில் மற்றுமொரு வன்செயலை உருவாக்கியது. அதன் பின்பு 2006.08.03ஆம் திகதியன்று மூதூரை விடுதலைப் புலிகள் முழுமையாக முற்றுகையிடுவதற்கும் கூறப்போனால் விடுதலைப் புலிகளின் முதல் தோல்விக்கும் ஒருவகையில் இம்மலையே காரணமாக அமைந்திருக்கின்றது.
மூதூர் முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இம்மலைப்பகுதியில் சுமார்; 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இறைநேசர் ஒருவரின் ஸியாரம் ஒன்று இருப்பதெல்லாம் இப்போதைக்கு மறந்துவிட அனேகருக்கு ( ஞாபகத்தில் இருப்பது) 2006ஆம் ஆண்டு கனரக குண்டு மழையில் நனைந்து, சிதைந்து, சரியாகச் சொல்லப்போனால் ஒரு உலக ‘மஹ்ஸரில்’ மூதூரை விட்டு இம் மலையடிவாரத்திற்கூடாக கடந்து சென்ற அந்த நாள் நினைவுகள்தான் நெங்சில் நிலைத்திருக்கின்றன.
நீங்காத இந்நினைவுகள் ஓரு புறமிருக்கட்டும்;;;;; விடயத்திற்கு வருவோம். இம்மலை அமைந்திருக்கும் ஜபல் நகரானது ஜின்னா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருக்கின்றது. இப்பிரிவில் மொத்தம் 410 குடும்பங்களைச் சோந்த1652 பேர் வசித்து வருகின்றனர். இனரீதியாப் பார்க்கின்ற போது இக்கிராம உத்தியோகத்தர் பிரிவில் மொத்தம் 333 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 1344 பேரும் 77 தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த 308 பேரும் வாழ்கின்றனர். கடந்த 100 வருட காலத்திற்குள் சிங்கள குடும்பங்கள் எதுவும் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான எவ்வித ஆதாரமும் இருந்ததாகத் தெரியவில்லை.
இம்மலைக்கு மிக அண்மையாக சிறிய இந்துக் கோயில் ஒன்றும் சுமார் 100 மீற்றர் தூரத்தில் பள்ளிவாசல் ஒன்றும் அமைந்திருக்கின்றது. சற்று தொலைவில் கிறிஸ்தவ ஆலயம்; ஒன்றும் உள்ளது. மலைக்கு வடக்குப் பக்கமாக குடியிருப்புக்கள் அமைந்திருக்க ஏனைய பக்கங்களில் வயல் நிலங்கங்களே பெரும்பாலும் காணப்படுகின்றன. மலைக்கு தெற்குத் திசையில் சம்பூரையும் கிண்ணியாவையும் இணைக்கும் உப வீதியொன்றும் அமைந்திருக்கின்றது.
இம்மலையிலிருந்தே மூதூர் மற்றும் அயல் பிரதேசங்களுக்கு கட்டிட நிர்மாணத்திற்கான கல் பெற்றுக் கொள்ளப் படுகிறது. கல் உடைக்கும் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாவும் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தபோதும், சிங்கள சகோதரர்கள் சிலர் தமது புராதன விஹாரை ஓன்று இம்மலையில் இருந்து அழிவடைந்துள்ளதாக் கூறி விஹாரையொன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விஹாரையொன்றை அமைப்பதற்கு அவர்கள் தமது தரப்பில் சில நியாயங்களை கூறினாலும் இப்பகுதிவாழ் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர். இம்மக்கள் விஹாரை அமைக்கும் முயற்சியை சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர்.
மூதூர் மக்களின் பொதுவான கருத்து என்னவென்றால் இப்பகுதியில் சிங்கள மக்கள் எவரும் இல்லாத நிலையில் இப்பகுதியில் விஹாரையொன்று அமைப்பதற்கான தேவை எதுவும் இல்லையென்பதேயாகும். அத்தோடு,பௌத்த விஹாரை அமைக்கப்படும் போது தமது தொழில், உடைமை மற்றும் இருப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதுமாகும். எது எவ்வாறிருந்த போதும் இக்கருத்திற்கு வலு சேர்ப்பதாகவே நாட்டின் தற்போதய நிலைமை அமைந்திருக்கின்றது.
தம்புள்ள நகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் தமது புனித பிரதேசத்தில் அமைந்துள்ளதெனக் கூறி அதுதொடர்பாக இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணி இம்மக்களுக்கு இம்மலையில் விஹாரை அமைக்கும் விடயத்தில் பலத்த சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது என்று துணிந்து கூறலாம். தம்புள்ள ‘புனித பிரதேசம்’ என்ற எண்ணக்கரு தோன்றுவதற்கு முன்பே குறித்த பள்ளிவாசல் அவ்விடத்தில் செயல்பட்டு வந்துள்ளது என்பதற்கு வலுவான பல ஆதாரங்கள் இருந்தபோதும் அதனை அகற்றுவது சம்பந்தமாக பெரும்பாலான பௌத்த மக்கள் கருத்தொற்றுமையுடன் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இத்தகைய நிலைமையொன்று இம்மலையில் விஹாரை அமைக்கப்பட்டதன் பின்பு ஏற்பாடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதுதான் இம்மக்களது கேள்வியாக இருக்கின்றது. இம்மலையில் பௌத்த விஹாரை அமைக்கப்பட்டதன் பின்பு இம்மலையையும் மலையைச் சூழ்ந்த பகுதியையும் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தினால் அல்லது மலையடிவாரத்தில் சிங்கள மக்களை குடியமர்த்தினால் தமது நிலைமை என்னவாகும் என்ற மன உளைச்சல் இம்மகளிடம் மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது. தமது குடியிருப்புக்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஜீவனோபாயம் முதலானவை இழக்கப்படுமோ என்ற ஏக்கம் இம்மக்களிடம் இழையோடியுள்ளது.
ஏனெனில், இப்பகுதி புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும் போது முதலாவதாக கட்டிட நிர்மாண தேவைகளுக்காக மலையை வெடிவைத்து உடைப்பதற்கான அனுமதி, அல்லது கல்உடைப்பதற்கான அனுமதி மீளப் பெற்றுக் கொள்ளப்படலாம். அவ்வாறு கல் உடைப்பதற்கு அனுமதி மறுக்கப்படும் போது அதில் தொழில் புரிந்து வரும் அனைவரும் உடனடியாக பாதிக்கப்படுவர் என்பது ஒருபுறமிருக்க மூதூர் பிரதேச கட்டிட நிர்மாணப் பணிகள் ஸ்தபிதமாவதோடு கட்டிட நிர்மாணத்திற்கு தூர பிரதேசங்களிலிருந்து மிகுந்த சிரமத்துடன் கூடிய விலையில் கல்லை பெற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டடான நிலைமை உருவாகும்.
இம்மலையில் பௌத்த விஹாரை அமைக்கப்பட்டு அது புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டால் அதன் பின்பு இப்பகுதியில் புதிய வர்த்தக மையம் ஒன்று உருவாகிவிடும் என்றும் அதன் மூலம் தமது வியாபாரம் சோபை இழக்கலாம் என்றும் மூதூர் நகரத்திலிருக்கும் வியாபார சமூகத்தினர் அச்சம் கொண்டுள்ளனர். அதுபோலவே,இப்பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் இம்மலையில் விஹாரை அமைந்துவிட்டால் அதனைத் தொடர்ந்து வரும் ‘புனித பிரதேசம்’ என்ற இரு சொற்களின் ஆக்கரமிப்பு தமது சுதந்திரமான தொழிலுக்கு தடங்களாக அமைந்து விடுமோ என்றுதான் கவலைகொண்டுள்ளனர்.
இதனாலேயே இம்மலைப் பகுதியில் விஹாரையொன்று அமைக்கப்படும் விடயம் சம்பந்தமாக இப்பகுதிவாழ் மக்கள் பீதியடைந்துள்ளனர் என்று கூறலாம். மாறாக சூட்சுமமான திட்டமிடல், புனிதப் பிரதேசப் பிரகடனம் எதுவுமில்லாது வழிபாட்டுக்காக விஹாரை ஒன்றை மட்டும் சிங்கள சகோதரர்கள் அமைப்பார்கள் என்று அதிகாரபூர்வமான உத்தரவாதம் வழங்கப்படுமாக இருந்தால் விஹாரை அமைக்கும் பணியை எவரும் விமர்சிக்க முன்வர மாட்டார்கள்.
அவ்வாறு ஒரு உத்தரவாதம் அதிகார தரப்பினால் வழங்கப்பட்டாலும்கூட காலப் போக்கில் அவ்வுத்தரவாத்தை மீறவேண்டிய ஒரு கட்டாய நிலைமை அவர்களுக்கு ஏற்படலாம். உதாரணத்திற்கு கல் உடைக்கும் தொழிலை தடைசெய்ய மாட்டோம் என்று ஒரு வாக்குறுதி வழங்கப்படுமாக இருந்தால் கட்டிட நிர்மாணத்திற்கான கல்லின் தேவை அதிகரித்திருக்கும் இக்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் தற்போது கல் உடைக்கப்படும் மலைப் பகுதி முழுமையாக முடிவுற்றதும் மறுபக்கம் விஹாரை அமையவுள்ள பகுதியில் கல் உடைப்பதற்கான அனுமதி ஒரு போதும் வழங்கப்பட முடியாததாகவே இருக்கும். இதேவேளை, முன்பு வழங்கப்பட்ட உத்தரவாத்திற்கு அமைய அனுமதியை தந்தாக வேண்டுமென்று கோருவதுகூட பகுத்தறிவுக்கும் மனிதாபிமானத்திற்கும் பொருந்தாதவொன்றாகவே அமையும்.
அடுத்தது, வணக்கஸ்தலமொன்றில்; வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது அதன் சுற்றுச் சூழல் மிக அமைதியாக இருப்பதனையே எவரும் பொதுவாக விரும்புவர்.எனவே, பார இயந்திரங்களையும் வெடிபொருட்களையும் பயன்படுத்தி கல் உடைப்பதென்பது பொருத்தமான செயற்பாடாக அமையாது.எனவே,இவ்வாறான ஒரு சிக்கலான நிலைமை ஒன்று விஹாரை அமைந்திருக்கும் போது ஏற்படவே செய்யும். இதனால் கல் உடைப்பதற்கான அனுமதி இயற்கையாகவே காலாவதியாகிவிடும்.
இத்தகைய பிரச்சினைகள் எதுவும் இல்லையென்றால் மூதூர் நகரத்திற்குள் அமைந்துள்ள விஹாரையை புனர் நிர்மாணம் செய்வதில் மூதூர் முஸ்லிம்களும் தமது நன்கொடைகளைக் கொடுத்து ஒத்துழைத்தது போல் இவ்விஹாரை அமைக்கும் பணிக்கும் ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
எனவே,இவ்விஹாரை அமைக்கும் பணி மூதூரில் முஸ்லிம் -சிங்கள மக்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தாது பார்த்துக் கொள்கின்ற கடப்பாடு இரு சாராருக்கும் உள்ளதென்பதை உணர்ந்து, இரு தரப்பினரும் திறந்த மனதுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தீர்க்கமான முடிவுகளை எட்டவேண்டும். இல்லையேல் இனங்களுக்கிடையில் வீண் பிணக்குகள் ஏற்பட்டு அது வன்முறையாக வளர்வதற்கு வாய்ப்பிருக்கின்றது.
Thanks- LankaMuslim

No comments:

Post a Comment