Friday, June 22, 2012

குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டலி்ல் சோனக தெரு - கனவுகள் வசப்படல் வேண்டும்!


மறு பதிவு

“சோனகதெரு”. முன்பு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் மறக்க முடியாத நிலம். ஏன் யாழ்ப்பாண சோனவர்களின் “வெனிஸ்” என்றால் வியப்பில்லை. பழைய சோனகதெரு வாழ்க்கையையும், இல்லாத சில கற்பனைகளையும் இணைத்து உருவான கனவு பிரதேசம்.
டயபிடீஸ் நோயாளியின் முன் வைத்த ஐஸ்கிறீம் போல தான் யாழ் முஸ்லிம்களிற்கு சோனக தெரு. 20 வருடகால தெற்கிலங்கை வாழ்க்கையில் பல விடயங்களில் பின்னி பிணைந்து விட்டார்கள். திருமணம், தொழில், குழந்தைகளின் கல்வி, அவர்களது விருப்பு வெறுப்புகள், சொல்ல முடியாத இவர்களது என்டர்டெய்ன்மென்ட்கள் என பலவும் இவர்களை கைது செய்து வைத்துள்ளன. யாழ்பாபண சோனக தெரு செல்ல முடியாமல். 

பொன்னாலை ஓரா, மட்டுவில் கத்தரிக்காய், சுன்னாக பலாப்பழம், நாவந்துறை கயல் மீன், சிங்கிங் பிஸ் உதைபந்தாட்ட போட்டி, ஆணைக்கோட்டை கள்ளு என இவர்களின் எல்லைகள் பரந்தது. ஆனால் இவையனைத்தையும் இன்று இரண்டு நாள் யாழ்ப்பாண விசிட்டினுள் அனுபவிக்கும் பக்கேஜாக மாற்றி விட்டார்கள் இவர்கள். சடவாதம் இவர்களை ஹைஜாக் செய்துள்ளதா, அல்லது இவர்கள் சடவாதத்திற்கு ஒரு புதிய பக்கம் எழுதியுள்ளார்களா என்பது புரியவில்லை. 

சோனக தெரு இன்று அதே சோனக தெரு மக்களில் இருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. கலாச்சார சீர்கேடுகள், பண்பற்ற பழக்க வழக்கங்கள், நியதி தவறிய வாழ்க்கை முறை என பல விடயங்களிலும் சோனக தெரு வித்தியாசப்பட்டு நிற்கிறது. 

தமது பெண்களை, தமது குழந்தைகளை சோனக தெருவினுள் வைத்திருக்க விரும்பாத ஒரு மனோ நிலை இவர்களிடம் ஏற்பட்டுள்ளது. சோனகதெருவை திருத்த முடியாது. மிகவுமே கேடுகெட்ட இடம். வியாபாரம் செய்து திரும்பலாமே தவிர குழந்தை குட்டிகளுடன் வாழ்வது என்பது நினைத்து பார்க்க முடியாத விடயம் என பலரும் பலவிதமாக சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையானவையே. 

இந்த நிலைமையை விடவும் மோசமான ஒரு நிலையே அன்று நபி (ஸல்) காலத்தில் காணப்பட்டது. அய்யாமுல் ஜாஹிலிய்யா. கொலை. கொள்ளை. கற்ப்பழிப்பு. சிசுவதை. கோத்திர பகை. குழுச் சண்டைகள். என அன்று இதனை விடவும் கொடிய நிலை காணப்பட்டது. அதனை தான் மாற்றியமைத்தார்கள் எம் பெருமானார் அவர்கள். 

வெறுமனே நபியாக தனது செய்தியை சொல்லும் மனிதராக அவர் அங்கு வாழவில்லை. சமுதாய தலைவராக, அரசியல் தலைவராக, இராணுவ தலைவராக இன்னும் பல விடயங்களில் சிறந்த முன்மாதிரிமிக்கவர்களாக திகழ்ந்தார்கள். இன்று அவர்கள் தந்து சென்று குர்ஆன் மற்றும் சுன்னா நம் கரங்களில் உள்ளது. ஆனால் மாற்றங்கள் தான் இல்லை. 

மாற்றம் இல்லாததற்கு காரணம் ஆன்மீக வறுமை. இஸ்லாம் எந்த ஒரு காலப்பிரிவிலும் யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் சரியான வடிவத்தில் கொண்டு செல்லப்படவில்லை. இன்று வரை. குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாம் அறிமுகமாகவில்லை. பெரியார் வரலாறு சொல்லும் மனிதர்களாலும், தலைமைத்துவ பித்து பிடித்தவர்களாலும் தவறாக விளங்கப்பட்டு அது மீண்டும் தவறாக சமூகத்திற்கு தஃவா என்ற பெயரில் முன்வைக்கப்பட்டதே வரலாறு. 

மதீனா யுகம் பற்றி பேசும் இஸ்லாமிய தஃவாவின் தடங்கள் படாத பூமியே யாழ்ப்பாண சோனக தெரு. தவ்ஹீதிய கருத்துக்கள் விதைக்கப்படாத பூமியே யாழ்ப்பாண சோனக தெரு. 


ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தவ்ஹீதிய வார்ப்பில் உருவான சமூகம் யாழ்ப்பாண சோனக தெருவில் உருவாவதன் ஊடாகவே ஒரு சரியான நிலையான சமூக மாற்றத்தை நாம் காணலாம். அவ்வாறான ஒரு சமூகம் நிமிர்ந்து நின்றால் நாம் கனவிலும் காணாத ஒரு சோனக தெருவை நிஜத்தில் காணலாம். சாந்தியும் சமாதானமும் மிக்க சோனக தெருவை காணலாம். வடபுலத்தின் அமைதி பூங்காவாக அது திகழ்வது நிச்சயம். 

இந்த மாற்றத்திற்கு குர்ஆன் சுன்னாவை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகும் உண்மையான தியாகமிக்க தாயிகளின் தேவை உணரப்பட்ட ஒரு விடயமாக இன்று தெரிகிறது. தவ்ஹீதை பேசும் மக்கள் கூட்டத்தினாலேயே இதனை சாத்தியபடுத்த முடியும். கப்று வணக்கம்,   தனி மனித வழிபாடு, பணத்திற்கு சஜ்தா செய்யும் வணக்கம், புகழிற்கு சஜ்தா செய்யும் நடைமுறைகள் போன்ற இன்னோரன்ன இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகள், சித்தாந்தங்கள் போன்ற ஷிர்க்கான விடயங்கள் நம்மில் புகுந்துள்ளன. இவைகளை சுத்தம் செய்து ஒரு அழகான சோனக தெருவை உருவாக்க வேண்டியது கடமை. 

இந்த இடத்திலேயே உண்மையான தியாகமிக்க தாயிகளின் பங்களிப்பு தேவைப்படுகிறது. அந்த வளப்பற்றாக்குறையே இன்று சோனக தெருவிற்கு பிரச்சனை தரும் விடயாக உள்ளது. இன்ஷா அல்லாஹ் குர்ஆன் சுன்னாவை முழங்கும் ஒரு கூட்டம் யாழ் மண்ணில் உருவாவது தான் யாழ்ப்பாண சோனக தெருவின் மாற்றங்களிற்கான சரியான தீர்வாக அமையும். 

நாம் எதையோ தொலைத்துவிட்டு, வேறு எதனையோ தேடிக்கொண்டிருக்கின்றோம். அவ்வாறே உணர முடிகிறது. சத்திய  இஸ்லாத்தினை முழக்கும் ஒரு கூட்டம் குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டலில் யாழ் சோனக தெருவில் இயங்குவதே இன்றைய நம் சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களிற்கான சரியான அடித்தளமாக அமையும். 

No comments:

Post a Comment