Saturday, June 30, 2012

சோனகதெருவின் ஆன்மா - தீர்வுகள் இதோ !


வ்வொரு மனிதனும் வாழ்வதற்காக உழைக்கின்றான். பலர் அதில் வெற்றி அடைகின்றனர். சிலர் தோல்வி அடைகின்றனர். வாழ்வின் இலக்குகளை அடைந்தவர்கள் பாதி. அடையமுடியாதவர்கள் மீதி. இந்த போராட்டத்தின் மத்தியில் அவனிற்கு விதிக்கப்பட்ட மரணம் அவனை வந்தடைந்து விடுகிறது. மரணிக்கின்றான். சில நாட்களில் அவன் பற்றிய நினைவுகளை மறந்து மற்றைய மனிதர்களும் அவன் முன்பு செய்ததை மும்முராக செய்கிறா்ரகள். 

ஒவ்வொரு மனிதனிற்குள்ளும் நிறைவேறாத ஆசைகள், நிராசைகள் பல. கட்ட ஆசைப்பட்ட வீடு. ஓட்ட ஆசைப்பட்ட கார். தொட ஆசைப்பட்ட காதலி. தொட்டும் திருப்தியில்லாத மனைவி... இப்படி எத்தனையோ. ஆனால் இந்த நிறைவேறாத ஆசைகளைவிடவும் வலி மிக்கது சொந்த மண்ணை விட்டும் பிரிந்து வாழ்வது. இந்த வலி மானுடத்தை நேசிக்கும், இயற்கையை ரசிக்கும், வசந்தங்களை சுவாசிக்கும், சமூகத்தை ஆகர்ஷிக்கும் மனிதர்களிற்கு மட்டுமே புரியும். பணத்தை பூஜிக்கும் பிண்டங்களிற்கு ஒரு போதும் புரிவதில்லை.

வாழ்ந்த மண்ணை பிரிந்த வலி ஒரு சமூகத்திற்கே சொந்தமாகி போயுள்ளதென்றால் அது யாழ்ப்பாண முஸ்லிம்களிற்கு செவ்வனே பொருந்தும். ஒவ்வொரு நாளும் அவர்கள் யாழ்ப்பாண நினைவுகளையும், கனவுகளையும் சுமந்தவர்களாகவே வாழ்கிறா்ரகள். வீடு, வாகனம், வசதி என எல்லாம் இருந்தும் மண்ணை பிரிந்த ஏக்கம் அவர்களின் ஆன்ம வலியாகவே மாறி நிற்கிறது.

உள்ளத்தால் மட்டுமல்ல, உடலால் மட்டுமல்ல, ரத்தம். சதை. நரம்பு. எலும்பு. சுவாசம். என எல்லாவற்றிலும் இந்த வலி அவர்களின் உடலில் கலந்து நிற்கிறது. அவர்கள் மனங்களில் நிழலாடுவது “பசுமையான அந்த பழைய சோனக தெருவின் நாட்கள்” தான்.

மீண்டும் பழைய சோனக தெரு வராதா? என்ற ஏக்கம் கலந்த கனவுகள் அவர்களை விட்டு ஒரு போதும் அகல்வதில்லை. ஒரு போதும் நடக்காது என்பதனை அறிவின் மூலம் உணர்ந்தும் கூட உணற்ச்சிகளால் மடையர்களாக மாறி நிற்கும் சமூகம். ஏனென்றால் அவர்கள் வாழ்ந்து பார்த்தவர்கள். லண்டனில், பாரிஸில், பெர்லினில், வான்கூவரில், மெல்பேர்னில், புத்தளத்தில், நீர்கொழும்பில் என அவர்களின் வாழ்தலின் எல்லைகள் நீளமானவை. இருந்தும் அந்த யாழ்ப்பாண வாழ்தல் எனும் மாயக்கனவுகள் இன்றும் அவர்கள் நித்திரைகளை சித்திரவதை செய்யத்தான் செய்கின்றன.

ஒரு தலைமுறை இந்த ஏக்ககனவுகளை சுமந்தவாறே மரணித்து போய்விட்டது. இன்னொரு தலைமுறை முன்னையவர் சென்ற பாதையை நோக்கி முன்னேறி வருகிறது. புதிய தலைமுறைக்கு இது எதுவுமே தெரிவதில்லை. பேஸ் புக்கில் முகம் பார்த்து, செல்போனி்ல் காதலித்து ஸ்கைபில் மணமுடித்து டிஜிட்டல் வாழ்க்கையை தன் உறவுகளாக்கி கொண்டுள்ளது. மைக்ரோ ஸொப்ட்டும், அப்பிளுமே அவர்களிற்கு அதிகம் தெரிந்த உறவினர்கள்.

எல்லாமே மாறி விட்டது. மாற்றங்களை தவிர. சோனகதெருவின் கலாச்சாரங்கள், அதன் மனிதர்கள், அவர்கள் குணங்கள், அவர்கள் வாழ்வியல் என எல்லாமே மாறிவிட்டன. கச்சுக்காக்காவின் ஆட்டிறைச்சியுடன் தேங்காய் சோறு தின்றவரின் பிள்ளை மெக்டொனால்ஸில் பிஸ்ஸா தின்கிறான். இது தான் இன்றைய வாழ்க்கை.
South லண்டனில் எலக்ரிக்ட்ரெய்னை மிஸ்பண்ணாமல் பிடிக்க ஓடும் நம்மவரில் துண்டுவெட்டி தெருவான் பெரியதெருவான் என்ற பேதமில்லை. யார் ஏறுகிறாரோ அவரிற்கே ரயில்.

மாற்றம் சோனகதெருவிலும் வேண்டும். அதன் கலாச்சாரத்தில். அதன் பண்பாடுகளில். அதன் அரசியலில். அதன் குடும்ப கட்டுமானங்களில். எல்லாவற்றிலுமே. இஸ்லாம் 1433 வருடங்களிற்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது. அப்படியானால் யாழ்ப்பாணதை இஸ்லாமிய மயப்படுத்துவதன் ஊடாக நாம் நிரந்தரமான ஒரு இஸ்லாமிய  யாழ்ப்பாணதை நாம் காணலாம். அந்த சோனக தெருவில் மாற்றங்கள் எதுவும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால் இஸ்லாமும் அதன் கலாச்சாரங்களும், அதன் பண்பாடும், அதன் அரசியலும், அதன் குடும்ப அமைப்பும் என்றும் ஒன்று போன்றதே. அவை மாறாதவை.

புலிகள் அல்ல ஓநாய்கள், பன்றிகள் என்று எது வந்து எம்மீது பாய்ந்தாலும் அதனை முகங்கொடுக்கவல்ல திராணி இஸ்லாத்திடம் மட்டுமேயுண்டு. குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான  யாழ்ப்பாணதை எனும் கனவு தேசம் பற்றிய வரிகள் இவை. நாம் நிர்மாணிக்கும் அந்த இஸ்லாமிய பிரதேசம் என்றும் எம் ஆன்மாக்களை சந்தோஷப்படுத்தும். நாம் நாடுகள்விட்டு நாடுகள் கடந்து வாழ்ந்தாலும், இலங்கையின் வேறு பிரதேசங்களில் வாழ்ந்தாலும் அந்த குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த வாழ்வு எமக்கு இருக்குமானால் எமக்கு பிரிதலின் வலி தெரியப்போவதில்லை. ஏனென்றால் யாழ் சோனகதெருவின் வாழ்வையே நாம் இங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆம் இந்த மாற்றம் எம்மிடம் வரல் வேண்டும். இதுவன்றிய எந்த மாற்றங்களும் எம்மை தோல்விகளிலும், நிராசைகளிலுமே இருக்க வைக்கும்.

நம் ஆன்மாக்கள் குர்ஆன் சுன்னாவின் வழியில் அமைந்த இஸ்லாமிய வாழ்வை நேசிக்குமானால் நாம் அதன் வழி நடக்க வேண்டும். நாம் மாறினால் சோனக தெரு மாறும். நாம் நிச்சயம் அதை செய்வோம். மாற்றுவோம். முழு இலங்கைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இஸ்லாமிய நகராக அதனை நாம் நிலைபெறச் செய்வோம். இன்ஷாஅல்லாஹ். அய்யாமுல் ஜாஹிலியா காலத்தை விட சோனகதெரு ஒன்றும் மோசமானதல்ல. அபூலஹப்பையும், வலீதையும் விட கொடியவர்கள் அல்ல நம் சமுதாயத்தின் ...................கள். பெருமானார் தான் மாற்றிக்காட்டிய டூல்ஸை எம் கரங்களில் தந்தே சென்றுள்ளார்கள். முயல்வது நம் கடமை. முடிவு இறைவனிடம்.

ஏதாவது புரிந்தால் உங்கள் கருத்துக்களை கொமென்ட்ஸ் பண்ணுங்கள்.

No comments:

Post a Comment