Wednesday, September 12, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை எமது அரசாங்கம் நடைமுறைப்படுத்திவருகின்றது



பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் ஜனாதிபதி உரை:ஜனநாயகத்தை பாதுகாக்கும் சிறந்த நாடு இலங்கை என்பது உலக நாடுகளுக்கு நன்கு நிரூபித்து காட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 58வது வருடாந்த மாநாட்டின் ஆரம்பக்கூட்டத்தொடருக்கு இன்று தலைமை வகித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
‘எதிர் காலத்துக்கு பொருத்தமான பொதுநலவாய அமைப்பை உறுதிப்படுத்துதல்’ என்ற தொனிப் பொருளில் ஆரம்பமான இம்மாநாட்டுத் தொடரில் 54 நாடுகளைச் சேர்ந்த 850 பேராளர்கள் பங்குபற்றினர். இம்மாநாட்டில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
முப்பது வருட கால யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்டு அதன் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி அபிவிருத்தி பாதையில் இலங்கை பயணித்துக் கொண்டிருப்பதை பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகள் கண்கூடாக அவதானிக்க முடியும்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை எமது அரசாங்கம் நடைமுறைப்படுத்திவருகின்றது. கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் நாம் துரித முன்னேற்றம் கண்டு வருகிறோம். நாடு அபிவிருத்தியடையாமல் அங்கு அமைதி ஏற்படமுடியாது.
இலங்கையில் ஜனநாயகம் சவாலை எதிர்நோக்கி வருகிறதென முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதில் இப்போது அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் மூன்று மாகாணங்களில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்ட நிலையில் அமைதியான தேர்தல் நடத்தப்பட்டது.
விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு தங்களுடை பிரதிநிதிகளை சுயாதீனமாக தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு இதன்மூலம் வழங்கப்பட்டது. அதேபோன்று அடுத்து வருடம் வடக்கில் தேர்தல் நடத்தி வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து அவர்களது பிரதிநிதிகளை அவர்களே தெரிவு செய்து கொள்ளும் வண்ணம் வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ உட்பட ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்களும் இங்கு உரையாற்றினர்-தகவல்-News.lk

No comments:

Post a Comment