இரு சமூகங்களினதும் ஒரு தலைமுறை அகன்ற நிலையில் இளைய தலைமுறையின் கைகளிளேயே யாழ்ப்பாண சமூகவியல் நகர்கிறது. முஸ்லிம்களின் இதயத்தில் வீற்றிருந்த அல்பிறட் துரையப்பா, மொக்கன் கடை ரோஸ் தின்னும் குமார் பொன்னம்பலம், நல்லுர் கோயில் மணி செய்த அய்துரூஸ், இரு இன வர்த்தக ஜாம்பவான்களான முத்துராசா கோபாலின் ராஜ்கோபால்ஸ் என இதன் எல்லைகள் பரந்தது. இதிலும் எது சரி எது பிழை என்பதனை விடவும் இரு சமூக உணர்வுத்தளங்கள் வலிதாகவே இருந்தன.
முஸ்லிம்கள் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாத தமிழர் விடுதலை போராட்டம் தடமாறி, தன்னையும் அழித்து, தன் இனத்தையும் அழித்து, கூடவே எந்த தொடர்பும் இல்லா முஸ்லிம்களின் வாழ்க்கையையும் சீரழித்துள்ள இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் விழாக்களிலும், கேளிக்கைகளிலும் சிக்கி தடுமாறும் இனமாக இருப்பது கவலைக்குரியது.
தமிழர்கள் எப்பாடுபட்டாவது ஒரு அரசியல் அதிகாரத்தை பெறும் முனைப்பில் உள்ள நிமிடங்கள் இவை. நாளை ஒரு சமஷ்டி உருவானால் நிலைமை தலைகீழாக மாறிவிடும். பயந்து பதுங்கியிருக்கும் தமிழ் குறுந்தேசியவாதமும், இனவாதமும் மீண்டும் புளியமர உச்சியில் ஏறி நின்று முஸ்லிம்களிற்கு எதிராக கூச்சலிடும். அந்த காட்டு கூச்சலில் எமது மீலாது விழாவின் சத்தங்கள் சந்தமிழந்து போய்விடும்.
நாம் நமது சமூகம் தொடர்பாக சிந்திக்க வேண்டும். இது சமூக கடமை மட்டுமல்ல, தனி மனித கடமையும் கூட. ஒவ்வொரு யாழ்ப்பாண முஸ்லிமும் தனக்கு இறைவன் வழங்கிய அருள்களைக்கொண்டும், ஆற்றல்களை கொண்டும் யாழ்ப்பாணம் வாழ் எமது உறவுகளிற்காக உழைத்தல் அவசியம்.
தமிழ் அரசியல் சக்திகளிற்கு மத்தியிலோ அல்லது பதுங்கியிருக்கும் அதன் இராணுவ முனைப்புகளிற்கு மத்தியிலோ நாம் தலை குனிந்து வாழும் ஒரு அடிமை சமுதாயத்தை விட்டுச்செல்ல முடியாது. தமிழர்கள் மத்தியிலும், தமிழ் பேசும் கத்தோலிக்கர்கள் மத்தியிலும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தலை நிமிர்ந்த சமூகமாக வாழ்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை நாம் செய்தல் வேண்டும்.
இன்றைய மீலாதுன் நபி விழாவிற்கு சேகரித்த இரண்டு மில்லியன் போல் எம்மால் நம் எதிர்கால யாழ்ப்பாண முஸ்லிம் சந்ததியின் சமூக அரசியல் பாதுகாப்பிற்கான ஒரு நிர்ணய அமைப்பை உருவாக்க சேகரிக்க முடியுமா? இது நம் மூளைகளையல்ல இதயங்களை பார்த்து நாம் கேட்க வேண்டிய கேள்விகள்.
மூன்று நாள் அற்ப சந்தோஷங்களிற்காக நாம் எவ்வளவோ செய்கிறோம். செய்யவும் உள்ளோம். 2013, 2014, 2015...... என இன்னும் எத்தனையோ சந்தோஷங்களிற்காக நாம் தயாராக போகிறோம். காத்துக்கிடக்கிறோம். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும் எனும் கீதையின் கோட்பாட்டின் பிரகாரம் அடுத்த மீலாத் விழாவிற்காக இப்போதே தயாராகும் சமூகமாக நாம் மாறி நிற்போம்.
ஒன்று மட்டும் நிச்சயம். நாம் இந்த மீலாது விழாக்கள் (முஸ்லிம் ஒன்று கூடல் நிகழ்வு) மூலம் பல வாயில்களை திறந்து விட்டுள்ளோம். அவை....
A) இலங்கை முழுவதும் இனிவரும் நாட்களில் மீலாது விழா கொண்டாடுவது எப்படி என்பதற்கான முன்மாதிரி சமூகமாக நடந்து காட்டியுள்ளோம்.
B) முடங்கி போன பக்கிரிசாக்களிற்கு யாழ்ப்பாணத்தின் சுவர்க்க வாயில் கதவுகளை திறந்து விட்டுள்ளோம். (சின்னபள்ளி மடங்களில் அமைதியாக கஞ்சா அடிக்கலாம்)
C) யாழ்ப்பாணத்தில் குப்புல் அவ்லியா இஸம் வளர முன்மாதிரியாக தொழிற்பட்டுள்ளோம்.
D) இடிந்த தைக்காவை நாளை கட்டியெழுப்ப வழி வகுத்துள்ளோம்.
F) தங்கள் பாவா, போத்தல் பாவா என பல மஸ்தான்களை யாழ்ப்பாணத்தின் பக்கம் கடைகண் பார்வை விழ இடமளித்துள்ளோம்.
முடியுமானால் எமது தந்தை ஆதம் நபி பிறந்த தின விழா, மூஸா நபியின் ஜனன விழா, என நுவரெலியாவின் சீசன் போல் விடுமுறைகளிற்கு பல விழாக்களை அதாவது ஏற்பாட்டாளர்கள் பாஷையில் சொன்னால் மக்கள் ஒன்று கூடல்களை நிகழ்த்தலாம்.
ஒன்று சொல்ல மறந்து விட்டோம். இப்போது தான் ஞாபகம் வருகிறது. எமது நபி ஈஸா (அலை) அவர்களிற்கு கிறிஸ்மஸ் லீவில் ஒரு மாபெரும் முஸ்லிம் மக்கள் ஒன்று கூடலை நடாத்தி முடிக்கலாம். விடுமுறையா இல்லை எங்கள் திரு நாட்டில்.
No comments:
Post a Comment