Tuesday, February 14, 2012

வெளிச்சங்களை நோக்கிய பாதையில் சோனக தெரு!!



யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பல கேள்விகளுடன் சமர் புரியும் இந்த நாட்களில் அது வருங்கால யாழ்ப்பாண முஸ்லிம்களின் தங்கு தளமாக மாறி விடுமோ என எண்ணும் அச்சங்கள் உருவாகும் இந்த நாட்களில் விடிவெள்ளியாய் நாம் அவரை சந்தித்தோம். மடித்துக்கட்டிய யாழ்ப்பாண சோனவனிற்கு உரித்தான சண்டிக்கட்டு. வெறுமேலென காட்சியளித்தார் அந்த சகோதரர். வீட்டின் முன்பகுதியையே வேலைத்தளமாக மாற்றி சுறு சுறுப்பாக இருந்தார் அந்த வயதான இளைஞர்.
அவரிடம் ஆரம்பித்தோம். உங்கள் பெயர் என்னவென்று? எதற்கென்றார். சும்மா ஒரு பேட்டியென்றோம். பல பேர் வந்து பேட்டியெடுத்தார்கள். கடைசியில் அவர்கள் பெட்டியை நிரப்பியதுதான் மிச்சம் என லோக்கல் பொலிடிக்ஸ் பேசினார் அந்த சகோதரர். பஞ் டயலொக் ஸ்டைலில்.

நாம் அவ்வாறானவர்கள் அல்ல. எங்களிடம் பெட்டிகளுமில்லை என்ற பின் எம் முகங்களை ஒரு முறை அல்ட்ரா ஸ்கேனிங் செய்தார். நான் ஓ.கே. பின்பு என் நண்பரை ஒரு மாதிரியாக பார்த்து இன்னொரு சீ.டி. ஸ்கேனிங் செய்தார். அதன் பின்பு தான் அவர் ஓகேயானர் இவரிற்கு.

“சொல்லுங்கள் மக்கள்” எனும் சோனக தெருவின் மதுர பாஷையில் எம்முடன் இணைந்து கொண்டார். இப்போது நாம் கேட்டோம் “தொழில் துறைகள் எப்படி”. உடனடியாகவே சொன்னார். நன்றாக உள்ளது. கடினமாக உழைக்க வேண்டும். தரமான பொருட்களிற்கு நல்ல கிராக்கியிருக்கிறது. இதற்கு மட்டுமல்ல ஏனைய தொழில்களிற்கும் அவ்வாறே. குறிப்பாக கைத்தொழில்களிற்கு.

90 விகித நமது கைத்தொழில்கள் இப்போது மாற்று மதத்தவர்களின் கைகளிற்கு சென்று விட்டது. ஆனால் 10 விகிதம் மட்டுமுள்ள எமது கைத்தொழிலிற்கு 90 விகித டிமான்ட் உள்ளது என்றார் தெளிவாக. அவர் கூறிய வார்த்தைகளுல் ஒரு பெரிய பொருளாதார மந்திரமே அடங்கியிருப்பது மெல்ல புலப்பட்டது. 

மார்கெட்டிங், சிம், சீமா, சார்டட், டிமான்ட், சப்ளை, புரடக்சன், ஸ்டொக் என முன்பு படித்த என்னவெல்லாமோ நினைவில் வந்து சென்றது. ஆம் அவர் ஒரு தகர வேலை செய்யும் தொழிளாலி. ஆனால் அவர் சொல்லிய வார்த்தைகளில் எம் சமூகம் நிமிர்ந்து நிற்காதா என்ற எங்கங்களிற்கான பல விடைகள் ஒழிந்து கிடக்கின்றன.

இன்று அவர் செய்வது இறால்களை நிரப்பி அடைத்து அனுப்பும் கொள்கலன். பிளாஸ்டிக் கொள்கலன்கள் இறாலின் தன்மையை மாற்றி விடுகின்றன. தகடில் ஒரு கொள்கலன் செய்ய பதின்னாராயிரம் ரூபாய்கள். நாவந்துறை, கொழும்புத்துறை இறால் ஏற்றுமதியாளர்கள் இவரின் வாசலில் வந்து வரிசையில் நிற்கிறார்கள். இறால் வர்த்தகத்தின் இராஜா இவர் இப்போது. 

மற்றவர்கள் எம் வர்த்தக துறையை கைப்பற்றியிருக்கலாம். ஆனால் எம்மவர்களின் தொழில் நேர்த்திக்கு முன் யாரும் நிற்க முடியாது. அதனால் முழு குடா நாடுமே எம்மை நோக்கி திரும்பும் நிலை வருவதற்கு பலமான சாத்தியக் கூறுகள் உண்டு. என்ஜினியர்கள், டாக்டர்கள் என கல்வியில் முன்னேறிய சமூகத்தால் ஒரு சட்டையையோ அல்லது குசனையோ செய்ய முடியாது. இது இறைவனால் எமக்கு அருளப்பட்ட கொடை. இதை நாம் சரியனா திட்டமிடல்கள் மூலமும், முகாமைத்துவம் மூலமும் மேம்படுத்த முடியும். 

இவர் போன்ற தொழில் முனைவர்கள் பலர் எம் சமூகத்தில் இருந்தும் முயற்சி இல்லாமல் இருப்பது கவலை தரும் விடயமாகும். இவர்களை கொண்டு ஒரு  பாசறை நடாத்தி யாழ்ப்பாண முஸ்லிம்களின் கைத்தொழில் முன்னேற்றம் சம்மந்தமான விடயங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

நான் என் நண்பரிடம் கேட்டேன். இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டு எதற்காக நம்மவர்கள் இரும்பு பொருக்குகிறார்கள் என்று. அவர் புன்முறுவல் பூத்த முகத்தோடு சொன்னார் “லேசாக காசு பாக்கலாம்” என்று. இன்றைய முதலாளித்துவ வர்த்தக ஆதிக்கத்தின் பன்மைகளில் ஒன்று “மேக் சம் ஈஸி மனி அன்ட் எனி குருகர்ட் வேய்” என்பது. அதற்கு நம் சமுதாயத்தின் இளைஞர்கள் பலியாக்கப்பட்டுள்ளனர். இந்த விஷ வட்டத்தில் இருந்து இவர்கள் மீட்கபடல் வேண்டும். இரும்பு முடிந்த பின்பு போத்தல் பித்தளை பொருக்கும் சமூகமாகவல்லவா இவர்கள் மாறப்போகிறார்கள்? இவர்களிற்கு வழிகாட்டுவது யார்? நம் பிள்ளைகளாக இருந்தால் அல்லது நம் சகோதரர்களாக இருந்தால் இவ்வாறு விடுவோமா?

நம் சமூகத்தை வழிகாட்டுவதற்கான ஒரு பன்முகத்தன்மை கொண்ட அமைப்பின் அவசியம் உணரப்பட்டுள்ளது. அதை அமைப்பதற்கான அனைத்து மட்டத்திலான முனைவுகள் அவசியம். அதற்காக களமிறங்க தயாரானவர்களை தான் கண்டு பிடிக்க முடியவில்லை.!!

No comments:

Post a Comment