Saturday, February 04, 2012

தெஹிவளை – கல்கிசை மாநகர சபை பிரதேசத்தில் மஸ்ஜிதுக்களை நிர்மாணிக்க எந்த தடையும் இல்லை



தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் தமது தொழுகையை மேற்கொள்வதற்கு வேண்டிய பிரதேசத்தில் பள்ளிகளை அமைத்து கொள்ளுங்கள். அதற்கு எவ்வித தடைகளோ இடையூறோ இல்லை. எவராவது இடையூறு ஏற்படுத்தினால் என்னிடம் முறையிடுங்கள் என தெஹிவளை – கல்கிசை மாநகர சபை மாநகர சபை தலைவர் தனசிரி அமரதுங்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை செய்னப் மஸ்ஜிதில் நடைபெற்ற இலவச வைத்திய முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்று கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .
ஆங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அவர் நேற்று முன்தினம் மல்வத்தை வீதியில் பரம்பரையாக வாழ்ந்து வரும் ஒரு ஹாஜியாரின் வீட்டுக்கு முன் பெரும்பான்மையினர் சிலர் பலவந்தமாக சிலை ஒன்றை வைத்தனர் . மாநகரசபை அதிகாரிகளுக்கு அதனை உடனடியாக அகற்றும்படி உத்தரவு இட்டேன் . அவர்கள் என்னிடம் முறையிடவந்தார்கள் . பாதையோரங்களில் புத்தர் சிலை அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இருந்து அனுமதி பெற்ற கடிதம் உள்ளதா ? என நான் அவர்களிடம் வினவினேன் அவர்கள் அதனை பெற்றிருக்க வில்லை .ஆகவே மாநகர சபையினால் அதற்கு அனுமதி வழங்க முடியாது . இது சட்ட விரோத கட்டிடம் .எனவேதான் நான் அதனை அகற்றினேன் .
முஸ்லிம்கள் எனக்கு கடந்த மாநகர சபைத் தேர்தலின் போது கூடுதலாக வாக்களித்துள்ளனர் .அத்துடன் உதவியும் செய்துள்ளனர் .அவர்கள் நிர்மாணிக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் அஹதியா பாடசாலைகள் தமது அன்றாட மதக் கடமைகளை நிறைவேற்ற அத்தியாவசியமாக தேவைப் படுகிறது .அது எமக்கு நன்மையே பயக்கும் . எமது நாட்டுக்கு பல முஸ்லிம் நாடுகள் உதவுகின்றன .
முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள் சுத்தமாகவும் காணப் படுகின்றன அவர்கள் வாழும் வீடுகளைக் கூட நன்றாக அமைத்து சகல இனங்களுடனும் ஒற்றுமையுடன் சமாதானமாகவும் வாழ்கிறார்கள் .அவர்களால் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் எழுவதில்லை. ஆனால் எமது இனத் தலைவர்கள் முஸ்லிம்கள் பற்றி பல்வேறு கதைகளை என்னிடம் வந்து கூறுவார்கள். அதனை நான் கருத்தில்கொள்வதில்லை .ஆனால் முஸ்லிம்களாகிய நீங்கள் இரண்டு மூன்றாக பிளவு படாதிர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்படி வைத்திய முகாமில் மூவின மக்களும் கலந்துகொண்டுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை தெஹிவளை நலன்புரி சங்கம் , செரண்டிப் நிறுவனம் மற்றும் செய்னப் மஸ்ஜித் நிர்வாகம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளது. மேற்படி தகவல் விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகி அஸ்லம் அலியினால் lankamuslim.org க்காக டைப் செய்யப்பட்டதாகும்.

No comments:

Post a Comment