“மின்சார கண்ணா” (இது விஜய் நடித்த படமல்ல நம் மாநகர சபை உறுப்பினர்கள் நடித்த படம்)
இதன் பல பகுதிகளிற்கு மின்சாரம் இல்லை. சில பகுதிகளிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளிவில் மின்வசதிகள் இருந்தன.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பாக 05 உறுப்பினர்கள் யாழ் மாநகர சபைக்கு தெரிவானார்கள். இவர்களில் நால்வர் ஒரு அணியிலும் மற்றையவர் இன்னொரு அணியிலும் உள்ளனர். இவர்களிற்கிடையிலான உறவுகள் அவ்வளவு சுமூகமாக இருந்ததில்லை. பரஸ்பரம் போட்டா போட்டி அரசியல் களத்திலேயே காலத்தை கடத்தி வந்தனர். காட்டிக்கொடுப்பு அரசியலை தவிர்க்க முடியாத அரசியல்வாதிகள் இவர்கள்.
இப்போது மின்சாரம் வடக்கின் வசந்தம் மூலம் பொம்மைவெளிக்கு முழுவதுமாக கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை அதன் அங்குரார்ப்பண வைபவம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடாத்தப்பட இருந்தது. பல வேலைப்பளுவிற்கும் மத்தியில் அவர் இதற்காக நேரம் ஒதுக்கியிருந்தார்.
அங்குரார்ப்பண வைபவத்தின் போது நடப்படும் கல்வெட்டில் அமைச்சர் திறந்து வைத்த டக்ளஸ் தேவானந்தாவின் பெயரிற்கு பின் யார் முயற்சியால் வேலைத்திட்டம் நடந்தது என்பதில் பிரச்சனை ஆரம்பித்தது. தனக்கு எல்லாம் தெரியும் என செயற்படும் தனி பிரதிநிதி அமைச்சரிடம் தன் பெயரை இடுமாறு கேட்டுள்ளார். விடுவார்களா நால்வர் அணி. சட்டத்தரணி தலைமையில் மாநகர மேயரை சந்தித்து தாங்கள் தான் இதற்காக பாடுபட்டதாகவும் தாங்கள் சார்ந்த அமைச்சரிடம் இது தொடர்பாக பல முறை பேசியதாகவும் கூறி தங்கள் பெயர்களை கல்வெட்டில் செதுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இல்லாவிடின் பதவியை இராஜினாமா செய்வோம் எனவும் உல்டா விட்டுள்ளனர்.
அமைச்சர் இதற்கு உடன்பட மறுத்தமையால் இப்போது இது பிரச்சனையாகி விட்டது. அமைச்சரும் வேறு வேலைகளை கவனிக்க சென்று விட்டார். கடைசியில் இதை எழுதும் வரை பொம்மைவெளி பிரதேசத்திற்கு எந்த மின்சாரமும் வழங்கப்படவில்லை. நிர்க்கதியில் மீண்டும் இவர்கள் குழந்தைகள் இருட்டில் பள்ளிப்பாடம் பாடிப்பார்கள். இந்த ஐவர் வீடுகளிலோ சன்டீவியோ அல்லது அல் ஜெஸீராவோ ஓடிக்கொண்டிருக்கும்.
20 வருட அகதி வாழ்க்கையில் புத்தள கந்தக பூமியில் வாடி வதங்கி, பொருளாதாரத்தில் நலிந்த இந்த ஏழை மக்கள், தங்கள் தாயக மண்ணில் மரியாதையாகவும், கௌரவமாகவும் இருப்போம் என எண்ணி இங்கே வந்து மிகவும் கஷ்டங்களிற்கும் பிரச்சனைகளிற்கும் மத்தியில் குடியேறினால் அதை கூட நிம்மதியில்லாமல் செய்யும் கைங்கரியத்தை செய்து முடித்துள்ளனர் இந்த அரசியல்வாதிகள்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்களிற்காகவும், உரிமைகளிற்காகவும் இறுதிவரை தம்மை தியாகித்து போராடுவோம் என மக்களிடம் வீடு வீடாக, ஊர் ஊராக வாக்கு பிச்சை கேட்டு படியேறி, முகமூடி முகங்களால் அவர்களை பார்த்து சிரித்து ஏமாற்றி, இன்று அவர்கள் போட்ட வாக்குகளால் மாநகர சபை பிரதிநிதிகளாக மாறி நிற்கும் இவர்கள் அந்த மக்களின் வாழ்வின் பிரதான அடிப்படை தேவையான மின்சார வழங்களினை தங்கள் பெயர்கள் எதிர்காலத்தில் நிலைத்து நிற்க வேண்டும் எனும் அற்பத்தனமான உலக ஆசையாலும், எதிர் தரப்பு அரசியல்வாதியின் பெயர் கல்வெட்டாக மாறுவதா? என்ற கேவலமான பொறாமை உணற்ச்சியாலும் தடுத்துள்ளனர்.
இதற்காகவா இவர்கள் வாக்கு கேட்டார்கள்?. நாளை இந்த பொம்மைவெளி மக்கள் ஓட்டுமட மாநகர சபை உறுப்பினரையோ அல்லது நாவாந்துறை மாநகர சபை உறுப்பினரையோ சென்று சரணடைந்து சலுகைகளை பெறும் கையறு நிலைக்கு தள்ளிய பொருப்பு இவர்களையே சாரும்.
நகர சபை சந்தைகளில் தங்களிற்கு கிடைக்கும் கோட்டாவின் மூலமான கடைத்தொகுதிகளை பெற, நான் முந்தி நீ முந்தியென காட்டிய முனைப்பும் அக்கறையும் அப்பாவி முஸ்லிம்கள் மீது இவர்களிற்கு ஏற்படவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
அபிவிருத்தி நலன்கள் சார் விவகாரங்களிலேயே இவர்கள் இப்படியென்றால் நாளை முஸ்லிம்களின் அரசியல் மற்றும் உரிமை பிரச்சனைகளில் இவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதனை நினைக்கையில் யாழ்ப்பாண முஸ்லிம்களை நினைத்து கண்ணீர் வருகிறது. அந்த கண்ணீர் பொம்மைவெளி மண்ணின் உப்பு நீரை விடவும் அதிகமாக கைய்கிறது.
No comments:
Post a Comment