ஐக்கிய நாடுகள் சபை பற்றி இலங்கைக்கு அறிமுக விழா நடாத்தியுள்ளது அமெரிக்கா. கொழும்பில் ஐ.நா.காரியாலய முற்றுகையின் போதே இலங்கைக்கான இந்த பாடம் பற்றிய வரிகள் எழுதப்பட்டு விட்டன. அதீதமான பிரச்சாரங்கள் பல வேளைகளில் முழு மக்களையும் தவறான கோணத்தில் சிந்திக்க வைத்து விடுகின்றன. அந்த வகையில் இலங்கை மீதான ஜெனீவா பிரேரணையும் ஒன்றாகும்.
நாம் கணிக்க தவறியவையும், கவனிக்க தவறியவையும் பல. ஆமிரேட்ஜின் வருகை, பலாலி தள விஜயம், ரொபோர்ட் ஓ பிளேக்கின் யுத்தகால செயற்பாடுகள், யுத்தத்தின் பின்னரான அவரது இடமாற்றம், இராஜாங்க நிலை பதவியுயர்வு, பசுபிக் கட்டளை மையத்திற்கான அவரது பொருப்புக்கள், இன்னொரு அமெரிக்க ஏஜென்டான எரிக்சொல்கைமின் மௌனம், இஸ்ரேலிய அரசமட்ட குழுக்களின் விஜயங்கள் என பலவற்றை நாம் சிந்திக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் ஒரு மையத்தை இலக்காக வைத்து அசைக்கப்பட்ட புள்ளிகள் என்பதே உண்மை.
இப்போதும் கூட அமெரிக்கா இந்த நாட்டு தலைவர்களை கைது செய்யும் பேச்சைபற்றி பேசவில்லை. அது பேசியதும் இல்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பான நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த கோரிகிறது. இலங்கை அரசியலில் இந்திய இராஜதந்திரம் விளையாடிய நிலை மாறி இப்போது பென்டகன் விளையாடுகிறது.
தமிழ் இயக்கங்களை வளர்த்து இந்திரா காந்தி அரசே அவர்களிற்கு உத்தர பிரதேச (யூ.பி.) ட்ரெய்னிங்கை ஆரம்பித்து வைத்தது. பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய போராளிகளின் கைகளில் கலஷ்னிகோவ் 47 ஐ கொடுத்ததும் இந்தியாதான். எம்.ஜி.ஆர். மூலம் நிதியுதவி செய்ததும் இதே இந்தியாதான். அதன் இலங்கை தொடர்பான அரசியல் வியூகம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவால் ஒரு புறமும், பிரபாகரனால் மறுபுறமும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையில் தவறை சரி செய்ய இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியது. இறுதி யுத்தத்தில் புலிகளை அடியோடு ஒழிக்க தன் சட்டலைட்கள் வரை பயன்படுத்தி வெற்றி கண்டது.
அத்தோடு விட்டதா இந்தியா? கிழக்கு மாகாண முஸ்லிம்களிற்கு ஆயுதங்களை அறிமுகப்படுத்தியது. எஸ்.எல்.ஆர். களும், எஸ். எம்.ஜி. களும் எப்படி சுடும் என்பதை சொல்லிக் கொடுத்தது “றோ”. ஆர். பிரேமாதாஸாவால் வழியனுப்பி வைக்கப்பட்ட இந்திய இராஜதந்திரம் தான் செல்லும் போது கிழக்கு மாகாண முஸ்லிம்களையும், தமிழர்களையும் ஆயுத கலாச்சாரத்தினுள் ஆழமாக இழுத்து விட்டே சென்றது. துப்பாக்கி மொழியில் அரசியல் பேசும் பழக்கம் ஏற்பட இந்திய உளவமைப்பே பிரதான காரணம். அதன் ஈரத்தை காத்தான்குடி பள்ளிவாசல்களில் நாம் உணர்ந்தோம்.
இப்போது அமெரிக்காவும் அதையொத்த பாணியில் விளையாடுகிறது. ரொபேர்ட் ஓ பிளேக் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் உரிமை பற்றி பேசியதும் இதில் ஒரு அங்கமே. ஜெனீவாவில் முஸ்லிம்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதும் இதில் ஒன்றே. தமிழர்களிற்கான உரிமை பற்றி பேசும் அமெரிக்கா முஸ்லிம்களின் உரிமை எனும் பூதத்தை கிளப்பி விடுகிறது. இது ஆபத்தானது. ஒரு நாளும் அமெரிக்கா முஸ்லிம்களின் நலன்களிற்காக தனது நேரத்தை செலவழிக்காது என்பதையே உலக வரலாறுகள் எமக்கு கற்றுத்தந்துள்ளன.
இலங்கையை ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகள் ஆதரித்ததற்கு இந்த நாடுகளை ஆதரிக்க அனுமதித்ததும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயமாகும். கக்கூசிற்கும் போடுவதற்கு அமெரிக்க பூட்டை நம்பும் சவுதி அரேபியாவும், அமெரிக்கா பாதுகாப்பில் தவக்கல் வைத்த குவைத்தும், இன்று அமெரிக்காவால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள கட்டாரும் அமெரிக்காவின் நலன்களை செய்து முடிக்கும் நாய்குட்டிகள். இவைகள் ஒரு போதும் அமெரிக்காவின் அரசியல் அபிலாஷைகளிற்கு எதிராக நிற்பவைகள்அல்ல.
கிழக்கு முஸ்லிம் உரிமைகள், தனித்துவம் பற்றி புலிகள் எழுப்பிய கேள்வியில் போது மௌனித்த அமெரிக்கா 22 வருடங்களின் பின் ரவுப் ஹக்கீமிடம் அந்த உரிமைகளை வலியுறுத்துகிறது. அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக கையுயர்த்துகின்றன. ஆனால் நாம் இதை அவதானிக்காமல் திரைப்படம் பார்ப்பவர்கள் போல முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு என பெருமைப்படுகிறோம். இந்த பெருமையும், சந்தோஷமும் சிங்கள மக்களுடன் புரிந்துணர்வையும் நெருக்கத்தையும் பல வேளைகளில் ஏற்படுத்தலாம். ஆனால் தமிழ் மக்களுடன் ஒரு பாரிய இடைவெளியையும் இவை ஏற்படுத்துகின்றன. இந்த நாடகத்தின் சூத்திரதாரி அமெரிக்கா.
இலங்கையின் ஆட்சி மாற்றமே அமெரிக்காவின் குறி. அல்லது ஆட்சியாளர்கள் மாறவேண்டும். அமெரிக்க பிராந்திய ஏகாதிபத்திய கொள்கைகை்கு ஏற்ற, அதன் சர்வதேச அரசியல் போக்குகளிற்கு ஏற்ற அரசாங்கம் இலங்கையில் அமைந்தால் போதும். மனித உரிமை பற்றி பேச அமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை. கொலம்பஸ் செய்த கொலைகளில் ஆரம்பித்து செவ்விந்திய இரத்தம் குடித்தது முதல் ஆப்கானின் அப்பாவிகளை கடந்த வாரம் சுட்டுக்கொன்றது வரை அமெரிக்கா செய்தது ஏராளம். இவர்கள் கடாபி போலோ, அல்லது சதாம் போலோ இலங்கை அரச தலைவர்களை கொலை செய்ய எண்ணவில்லை. சீன சார்பு கொள்கையே இவர்களிற்கான பிரச்சனை. அதற்கான கடிவாளம் தான் ஜெனீவா பிரேரனை.
மாலைதீவுகளில் பாரிய நீர்மூழ்கி கப்பல் தளமமைக்க சீனா முற்பட்டதன் விளைவே மாலை தீவுகளின் ஜனாதிபதி மாற்றம். இதை செய்தது அமெரிக்கா. அதையொத்த பாணியில் சீனாவின் அதிகரித்து வரும் கடலாதிக்கம் இலங்கையிலும் தளமமைக்குமோ என்ற அச்சத்திற்காக இலங்கை அரசை பிளேக்மைல் பண்ணப்பார்க்கிறது அமெரிக்கா. அதற்கான அஜன்டாவின் நிகழ்ச்சி நிரவே ஜெனீவா. நாளை அமெரிக்க அரசியல் குழுக்கள் இலங்கை வரும். இதுவரை ஆலோசனை சொன்ன அமெரிக்கா நேரடியாகவே இலங்கை அரசியலில் தன் மூக்கை நுழைக்கும்.
இலங்கை தேசத்தின் ஒருமைப்பாட்டிற்காக நாம் உழைக்க முன்வருதல் அவசியம். அதில் மாற்று கருத்து கிடையாது. அதே வேளை அமெரிக்க அரசியல் பற்றிய விழப்புணர்வும் எமக்கு தேவை. இலங்கை முஸ்லிம்களிற்கு அமெரிக்காவால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
எப்படியாவது பழிவாங்க வேண்டும், எப்படியாவது அரசியல் அதிகாரங்களை அடைய வேண்டும் என தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் மீண்டும் தவறு செய்கின்றன. ஆயுதப் போராட்டத்தில் இந்தியாவால் ஹைஜாக் செய்யப்பட்ட தமிழர் போராட்டம் இப்போது அரசியல் போராட்டத்தில் அமெரிக்காவால் ஹைஜாக் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசத்தின் இறைமை இல்லாமல் போனாலும் பரவாயில்லை தமக்கான அரசியல் அபிலாஷைகளை எவ்வழியிலாவது அடைய வேண்டும் என நம்பும் தமிழர்களின் முட்டாள்தனத்தின் ஒரு வெளிப்பாடே “வெற்றி” என எக்காளமிடும் ஜெனீவா நிகழ்வுகளாகும்.
ABU MASLAMA

No comments:
Post a Comment