ஒரு ஆயுதப்போராட்டத்தின் பலாத்காரமே முஸ்லிம்கள் வெளியேற காரணமாக இருந்தது. வடக்கு முஸ்லிம்கள் தனியாக கையாளபட வேண்டியவர்கள் என்பதை இந்த நாட்டின் தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார். அவர்களிற்கு பல பிரச்சனைகள் இருக்கின்றது என்பதை இந்த நாட்டின் பல தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் நிர்வாகம் என்று வருகையில் இவர்களிற்கு எந்த கருணையும் காட்டப்படுவதில்லை. இவர்கள் தங்கள் மின்சார மானியை உடைக்கவில்லை. இவர்கள் தங்கள் வீடுகளிற்கு மின்சார பில் கட்டுவதை நிறுத்தவில்லை. 20 வருட கால புலம்பெயர் அகதி வாழ்க்கையின் பின் மீள் குடியேறியவர்கள் இவர்கள். இவர்களிடம் அடிப்படை சட்டங்களின்படியே எதுவும் செய்ய முடியும் என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.
இவர்களிற்கு ஒரு முஸ்லிம் கிராம சேவகர் இல்லை. இறைவனின் அருளால் மீண்டும் எமது பிரதேசத்தின் முன்னைய கிராம சேவகர் தனது சேவையை வழங்க முன்வந்துள்ளதாக அறிகிறோம். அவருடைய சேவை காலத்தில் சோனகதெரு பல விடயங்களை அவர் மூலமாக இலகுவாக பெற்றுக்கொண்டதை இங்கு குறிப்பிடல் அவசியம். அது நடக்குமானால் யாழ் முஸ்லிம்களிற்கு அது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு யாழ் முஸ்லிம்களிற்கு கடனுதவி எனுமடிப்படையில் பணம் வழங்குகிறது. சுமார் 150 பேர் இவ்வாறான உதவிகளை பெற்றுள்ளனர். மேலும் 40 பேரின் விண்ணப்பம் கிடப்பில் உள்ளது. இவர்களிற்கு வழங்கப்படும் பணம் மீள செலுத்தப்படும் போது அது மேலதிக வட்டியுடன் சேகரிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் தங்கள் வியாபாரத்திற்கு வட்டிக்கு 5000 ரூபா முதல் 10000 ரூபாவரை நாளாந்த வட்டிக்கு பணம் எடுத்து சென்று மாலையில் 5500 ரூபாவாகவும், 11000 ரூபாவாகவும் திருப்பி செலுத்துகின்றனர். ஆடு, இரும்பு போன்ற பலவற்றை தமிழ் பிரதேசங்களில் சேகரிக்க செல்லும் இவர்களிற்கு கையில் காசு இல்லை. அவர்களிற்கு இருக்கும் ஒரே வழி இதுவாக இன்று உருவெடுத்துள்ளது. இவர்களிற்கு பணம் வழங்கும் பைனான்ஷியர்களாக பலர் இப்போது ஓட்டுமடம், கற்குளம், நாவாந்துறை போன்ற பிரதேசங்களில் உருவெடுத்துள்ளனர்.
புத்தளம் பகுதியில் சுமார் 245 இற்கும் அதிகமான வீடுகளின் உறுதிகள், அடைவு வைக்கப்பட்டுள்ளன. தில்லையடி பிரதேசத்திலேயே கணிசமான காணிகளின் உறுதிகள் மதுரங்குளி, புத்தளம், பாலாவி போன்ற பிரதேச மாற்று மத வட்டி தொழிலதிபர்களிடம் கொடுக்கப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது. இவற்றில் பல வட்டி மீள செலுத்தப்பட முடியாமல் அறுதியாகியுள்ளன. இது தான் இன்றைய நிலை.
மார்க்கம் வன்மையாக தடை செய்த ஒரு விடயம் வட்டி. இறைவன் பல இடங்களில் வட்டியை கண்டனம் செய்துள்ளான். இது ஒரு மனிதனின் வாழ்க்கையை அடியோடு சிதைத்து சீரழிக்கும் எகொனமிகல் கேன்சர். இன்று நம் சமூகம் இதனுல் மெல்ல அகப்பட்டுக்கொண்டுள்ளது. தமது வாழ்க்கையின் அன்றாட தேவைகளை கவனிக்கவும், தனது மனைவி பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்யவும் ஒரு பொருப்பு வாய்ந்த கணவனாக உள்ள ஒரு மனிதனின் கவலைகளை பூர்த்தி செய்யும் ஒரு விடயமாக இது உருவாகியுள்ளது. குடும்பத்திற்காகதானே வட்டிக்கு எடுக்கிறேன் என ஒருவன் தனது மனசாட்சிக்கு நியாயம் சொல்லும் ஒரு மனோபாவம் இன்று நம்மில் பலரிடம் காணப்படுவது கவலைக்குரிய விடயம்.
பலஸ்தீனில் ஏழை முஸ்லிம்களிற்கு தாங்களாகவே முன்வந்தே யூதர்கள் பணத்தை கொடுத்து உதவினர். வட்டிகட்ட இயலாத போது அவர்களின் காணி உறுதிகளை எழுதி வாங்கினர். அது காஸாவிற்கும் ஜெரிக்கோவிற்கும் மட்டுமல்ல சோனகதெருவிற்கும் பொருந்தும். நலிந்தவன் யார், ஏழ்மையில் உழல்பவன் யார்? அவனிடம் நிலம் இருக்கிறதா? என வட்டமிட்டு குறிவைக்கும் இந்த வல்லுறுகள் இலகுவாக இரையை கவ்வுகின்றன. இறுதியில் இருந்த வீடும் இல்லாமல் நடுவீதியில் குடும்பத்துடன் நிற்கும் நிலை உருவாகிறது. இதற்கெல்லாம் காரணம் இறைவன் தடை செய்த வட்டியை வாழ்வின் தெரிவாக நாம் தேர்ந்து கொண்டதே.
புலிகளின் துப்பாக்கி முனைகள் எம் நெற்றியை நோக்கி வந்த போது நாம் எம் ஷஹாதத் கலிமாவை விட்டுவிடவில்லை. “தமிழனாக இங்கு வாழலாம்” என்ற பாசிஸத்தின் பாஷைக்கு பதிலாக புத்தள உப்பு வாய்க்காலில் உழைத்து குடுப்பத்தை காப்பாற்றிய வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள் நாங்கள். புலிகளின் விடயம் துனியாவுடன் சம்மந்தமுடையது. வட்டி என்பது ஆகிராவரை நீண்டு செல்லக்கூடியது. ஆனால் நாம் சரணடைகிறோம். எவ்வித தயக்கமும் இல்லாமல். பொருாளதார பிராணிகளாக நாம் மாறியதன் விளைவு இது. எமது இருப்பை தீர்மானிப்பது இரைப்பையும், இந்திரியமும் என சிந்திக்க தலைப்பட்ட சடவாத முடிவு இது.
நாம் நம் சமூகத்தை இதில் இருந்து மீட்கவும், காக்கவும் செய்ய வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. அது தொடர்பான அவசரமான தீர்மானங்களிற்கு செல்லல் வேண்டும். பள்ளிவாயலில் டைல்ஸ் பிடிப்பதற்கு செலவிடும் பணத்தை விட வட்டியில் விழும் முஸ்லிமை மீட்க செலவிடும் பணம் குறைவானதாவே இன்றும் இருக்கிறது.
No comments:
Post a Comment