Tuesday, March 06, 2012

யாழ் சோனக தெருவில் தமிழர் தொடர்மாடிகள்! - எப்படியிருக்கிறது சோனவா?



போர் ஓய்ந்து விட்டது. நிச்சயமாக போர் ஓய்ந்து விட்டது. மனிதர்கள் தங்கள் மாமூல் வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். திரும்ப மறுப்பது தமிழ் இனவாதம் மட்டுமே. ஏ9 சாலைகளில் சாரி சாரியாக வாகனங்கள் ஓடுகின்றன. குடா நாடெங்கும் புணருத்தானம். புதிய கொள்முதல்கள். யாழ் பஸாரில் வாங்க கடைகளே இல்லாத நெருக்கடி நிலை. கொம்பிளேக்ஸ் கட்டுவது பற்றியும் அப்பார்ட்மென்ட் கட்டுவது பற்றியும் கனடா தமிழர் கணக்கு போடும் காலமிது.
சோனக தெரு. மெல்ல மாறுகிறது. மெல்ல என்பதும் மெல்லவாகவே நடக்கிறது. சில வீடுகள் மீள் கட்டுமானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பல வீடுகள் கற்பழிக்கப்பட்ட பூமித்தாய் போல் உருக்குலைந்து கிடக்கிறது. யாழ் சோனக தெருவை இந்த அளவிற்கு முடமாக்கிய மனித மிருகங்கள் எந்த வித வெட்கமுமில்லாமல் தம்மை தாமே தலைவர்கள் என சழற்சி முறையில் தெரிவுசெய்து கொண்டு சமூகம் பற்றி கவலையுடன் பேசுகிறது.

எல்லை பகுதி தமிழர்களால் எமது நிலங்கள் வாங்கப்பட்டன. திட்டமிட்ட வகையிலும், திட்டமிடாத வகையிலும் அவை வாங்கப்பட்டன. இப்படியான நிகழ்வுகள் உலக வரலாற்றில் பல இடங்ளில் யுத்தத்திற்கு பிந்திய நிகழ்வுகளாகவே எழுதப்பட்டுள்ளன. அதுவே இங்கும் நடந்துள்ளது.

ஆனால் நிலைமை இப்போது அப்படியல்ல. பண்டத்தரிப்பிலிருந்தும், இளவாளையில் இருந்தும் காரைநகரிலிருந்தும் தமிழர்கள் வருகிறார்கள் நம் காணிகளை வாங்க. அவர்களை அழைத்து வரும் நம் புரோக்கர்கள் என்ன பாடுபட்டாவது ஒரு காணியை அவர்களிற்கு விற்று விட்டே ஓய்கிறார்கள். கேவலம் இரண்டு மூன்று இலட்ச ரூபா வித்தியாசத்தில் நாம் நம் காணிகளை அந்நியவர்களிற்கு விற்கிறோம். நாளைய சோனக தெருவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியுள்ளது.

இப்போது பெருமளவு தமிழ் குடியிருப்புக்கள் முஸ்லிம் பகுதியினுள் அமைக்கப்பட்டுள்னன. நாம் ஒரு பேச்சிற்கு உங்கள் முன் ஒரு கேள்வியை முன் வைக்கிறோம். தமிழர்களால் கொள்வனவு செய்யப்படும் முஸ்லிம் நிலங்களில் வெள்ளவத்தை போன்ற மட்டக்குளி போன்ற சாயலில் தொடர்மாடி வீடுகளை தமிழர்கள் நிறுவினால் யாழ் சோனக தெருவின் நிலைதான் என்ன?. தொடர் குடியிருப்பு அடுக்குமாடிகள் உருவானால் நம்மால் என்னதான் செய்ய முடியும். அந்த தொடர்மாடி கட்டடங்களிற்குள்ளேயே கோயில்களும், சேர்ச்சுகளும் உருவாகாது என்பது என்ன நிச்சயம்.

எமக்கு இன்று ஐந்து மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ஒருவரும் விலகி சென்றும் விட்டார். இவர்களின் துணை கொண்டு யாழ் சோனக தெருவின் வீதிகளிற்கு நம் யாழ்ப்பாண மண்ணில் வாழ்ந்த, நம் சமுதாயத்தின் வளற்சிக்காக பாடுபட்டு மறைந்த பலர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை சூட்டுவோம். ஜின்னாவும், ஆஸாத்தும் பாகிஸ்தானியர். அவர்களின் பெயரிலெல்லாம் நாம் வீதிகளை வைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு ஒழுங்கைக்கும், ஒவ்வொரு வீதிக்கும் எம்மவரின் பெயர்கள் சூட்டுவது உசிதமானதென நினைக்கிறோம். இதன் மூலம் எமது பிரதேசத்திற்கான உரிமையை நாம் தமிழர்களிற்கு பறைசாற்றுவதாக அமையும்.  முஸ்லிம் பகுதியில் ஊடறுத்து செல்லும் நாவலர் வீதி பற்றியும் நம் சிந்தனைகள் அமைதல் அவசியம். செய்வார்களா நம் மாநகர சபை உறுப்பினர்கள்? எங்கே முனிசிபல் கடையை வளைத்து போடலாம் எனும் சிந்தனை மட்டுமே எஞ்சி நிற்கும் இவர்களிடம் இது பற்றி சற்று பேசித்தான் பார்ப்போமே.

No comments:

Post a Comment