Tuesday, March 06, 2012

சோனக தெருவின் மாற்றங்கள்...



சோனக தெரு பற்றிய இரு பார்வைகளைப் பற்றி நாம் இங்கு சற்று பேசுவோம்.

“தமிழர் விடுதலை” என்ற பெயரில் கபளீகரம் செய்யப்பட்ட நிலம் யாழ் சோனக தெரு. யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றியதன் மூலம் புலி பாசிஸ்ட்கள் அடைந்த இலக்குகள் தான் என்ன என்ற கேள்விக்கு பூச்சியமே விடயாகும். புலிகளின் பலவந்த வெளியேற்றத்தின் பின்னரான யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாழ்க்கை என்பது இதுவரை எழுத்தில் வராத சோக காவியம். இந்த சமூகம் 22 வருடங்களின் பின் தன் நிலை என்ன என்பதை மீளாய்வு செய்யாமலே வாழ்தலை நோக்கி நகர்கிறது. மீள்குடியேறுகிறது. மீள்குடியேற மறுக்கிறது.


புலிகள் நம்மை நாசம் செய்ய நினைத்து விரட்டினாலும் நாம் தெற்கிலங்கை வந்ததால் வர்த்தக துறைகளில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளோம். கல்வியில் எம் இளைய தலைமுறை பல மைல்கற்களை எட்டியுள்ளன. மேற்கைரோப்பிய நாடுகளில் எம் சமூகத்தை சேர்ந்த பலர் அசைலம் கேட்டு இன்று சிட்டிஷன் எனும் பிரஜாவுரிமை பெற்றவர்களாக உள்ளனர். அவர்களின் குழந்தைகள் ஐரோப்பிய குழந்தைகளிற்கு நிகராக கல்வி கற்கின்றன. ஏன் தொழில் கூட புரிகின்றனர். தெற்கிலங்கையின் பல பகுதிகளிலும் தொழில் மற்றும் திருமண உறவு என நாம் பல உறவுமுறைகளையும் நெருக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளோம். இஸ்லாமிய மார்க்கவியல் தொடர்பான பல சரியான புரிதல்களையம் தெளிவுகளையும் பெற்றுள்ளோம். எம்மில் பல ஆலிம் உருவாகியுள்ளனர். தனியார் தொழில் துறையில் பல மட்டங்களில் எம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர். உயர் கல்விக்காக எம் இளைஞர்கள் பலர் ஐரோப்பிய நாடுகளிற்கு சென்றுள்ளார்கள். கிணற்று தவளையாய் இருந்த நம்மில் பலர் பலதும் தெரிந்த மனிதர்களாக மாறியுள்ளனர். மேற்சொன்ன இவையெல்லாம் அடைதல்கள்.

சொந்தமாக தொழில் புரிந்தவர்கள் தொழில் இல்லாமல் இன்று வரை கூலியாட்களாகவும், தொழிளாலர்களாகவும் தொழில் செய்கின்றனர். சொந்த வீடின்றி வாடகை வீடுகளில் மாறி மாறி வசிக்கும் அவலம், 22 வருட அகதி வாழ்க்கையின் மொத்த வெளிப்பாடே யாழ்ப்பாணத்து இரும்பு வியாபாரிகள். இன்னும் பல வெளிப்பாடுகள் வர காத்திருக்கின்றன. அராஜக சிந்தனை மிக்க இளைஞர்கள், வன்முறையை நாடும் மனோபாவம், பண்பாடற்ற வார்த்தை பிரயோகங்கள், போதை பொருள் பாவனை, மது பழக்க வழக்கங்கள், பெற்றோரை மதிக்காத தன்மை, விவாகரத்துக்கள், கல்வியறிவற்ற பெருந்தொகை இளைஞர்கள் என சமூகம் இன்னொரு சிதைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு வகையினரான யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒரே கனவு “பழைய சோனக தெரு வராதா” என்பதே. நிச்சயமாக வரப்போவதில்லை. அது 1990 களுடன் முடிந்து போயிற்று. இப்போது இருக்கும் சோனக தெருவை அதன் சாயலை ஒத்த சோனக தெருவாக மாற்றுவது எப்படி என்று மட்டும் நாம் குறைந்த பட்சம் சிந்திக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட கால எல்லையின் பின்பு முழு இலங்கையிலுமேயே கல்வியில் சிறந்த சமூகமாக யாழ்ப்பாண முஸ்லிம் பகுதி மாற்றப்படல் வேண்டும். வர்த்தகத்தில் ஒழுக்கத்தில், பண்பாடுகளில் என எல்லா துறைகளிலும் ஏனைய பிரதேச முஸ்லிம்கள் அண்ணாந்து பார்க்கும் பகுதியாக யாழ் சோனக தெரு மாற்றப்படல் வேண்டும். இந்த உயரிய குறிக்கோளிற்காக அல்லாஹ் எமக்களித்த ஆற்றல்களை, அறிவுகளை, செல்வங்களை நாம் இப்பகுதி நோக்கி ஒன்று குவிக்க வேண்டும். எம் மரணம் வரை யாழ் சோனக தெருவின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். இது எம் தார்மீக கடமையும் கூட.

எமது வாழ்க்கையின் மீதி பகுதியில் நம் சமூகத்திற்காக என்ன செய்தோம் என்ற கேள்விக்கு விடை தான் என்ன? சமூக விரோத சக்திகள் புறந்தள்ளப்பட்டு இளைஞர் சமுதாயம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை கையில் எடுக்கும் காலம் வந்து விட்டது. அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். வழி விட்டு விலக வேண்டும். அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். எம் அநுபவங்களை அவர்களிற்கு வழங்க வேண்டும்.

இன்றைய சோனக தெரு அசிங்கமானது தான். அழகற்றது தான். கேவலமான குணாதிசயங்களை கொண்ட மனிதர்களை கொண்டதுதான். நாகூசும் வார்த்தைகள் வலம் வரும் தெருக்கள் தான். எம்மில் பலரிற்கு சோனக தெரு பக்கம் செல்லவே விருப்பமில்லை. சுயநல, சந்தர்ப்பவாத துரோக சமுதாய தலைமைகளும் அரசியலும் புரளும் இடம் இன்றைய சோனக தெரு. இந்த புளுதிக்குள் போட்டி, பொறாமை, புறம், அவதுறு, பொய், பித்தலாட்டம், வஞ்சகம் போன்ற பல இழி செயல்களால் நிறைந்துள்ள பூமி சோனக தெரு.

இதை நாம் தான் மாற்ற வேண்டும். நாம் மாற்றாமல் வேறு யார்தான் வந்து மாற்றுவார்கள். எமது ஈகோ, பிரஸ்டீஜ், ரெஸ்பெக்ட் போன்றவற்றிற்கும் அப்பால் நாம் நமது சோனகதெருவிற்கு செய்ய நிறையவே உள்ளது.  இது தொடர்பான திட்டமிடல்கள், ஒன்றுகூடல்கள் எம்மிடையே நடைபெற வேண்டியது அவசியம். எல்லாவற்றிற்கும் நம்பிக்கை பிரதானம். அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்ற உயரிய சிந்தனை அதை விடப் பிரதானம்.

நாளைய நல்ல சோனகதெருவை உருவாக்கவல்ல சிற்பிகள் நாம். உளிகளை தொலைத்து விட்டு சிற்பங்களை குறை சொல்லும் மன்தர்களாக நிற்கிறோம்.
சகோதரர்களே தயது செய்து பங்கெடுங்கள். உணற்சிகளைகாட்டிலும் அறிவிற்கு இந்த விடயத்தில் முன்னுரிமை கொடுங்கள். தொடரான பல வேலைத்திட்டங்கள் ஊடாக அந்த ஒப்பற்ற சமுதாயத்தை கட்டியெழுப்புவோம். அதன் பெயர் “யாழ் முஸ்லிம் தெரு”

No comments:

Post a Comment