மொரிடானியா நாட்டில் கைது செய்யப்பட்ட கடாபியின் உளவுத்துறைத் தலைவரை,நாடு கடத்தும் முன்பே அவரிடம் விசாரணை நடத்தி முடிக்க மாரிடானியா அரசு முடிவு செய்துள்ளது. லிபியாவில், கடாபி தலைவராக இருந்த போது, அவரது மருமகனான அப்துல்லா அல் சனுஸ்ஸி, உளவுத்துறைத் தலைவராக இருந்தார்.
கடாபிக்கு எதிரான மக்கள் புரட்சியின் போது அவர் நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.1980 மற்றும் 90களில், அரசுக்கு எதிராக திரண்ட மக்களைக் கொலை செய்தது, தலைநகர் டிரிபோலியில் உள்ள அபுசலீம் சிறையில், 1,200 கைதிகளைத் திட்டமிட்ட முறையில் கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக, சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மொராக்கோ நாட்டின் கசாபிளாங்கா நகரில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம், மொரிடானியா நாட்டின் நவாக்சோட் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது,அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவரை லிபியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என, அந்நாடு சட்டப்பூர்வமாக கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மொரிடானியா அரசுடன் லிபியா பேசிவருகிறது. எனினும் லிபியாவில் நேர்மையான முறையில் விசாரணை நடக்குமா என சர்வதேச அளவில் சந்தேகம் எழுந்துள்ளது. பிரான்சில், 1989ல் நடந்த ஒரு விமான விபத்தில், 179பேர் பலியாயினர். இதில், சனுஸ்ஸியின் பங்கிருப்பதாக சந்தேகப்பட்ட பிரான்ஸ் அரசு அப்போதே அவரைக் கைது செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.
இதனால் அவரை பிரான்சுக்கு நாடு கடத்தும்படி அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மொரிடானியாவைக் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் சர்வதேச கிரிமினல் கோர்ட்டுக்கு நாடுகடத்தப்படும் வாய்ப்புகளே அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அவரிடம் முழுமையான விசாரணை நடத்தும் முடிவில் மொரிடானியா அரசு இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. எனினும் இவ்விசாரணை எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியவில்லை
.
.
No comments:
Post a Comment