சர்வதேச மன்னிப்புச் சபையினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபை மிகைப்படுத்தப்பட்ட அதீதமான தரவுகளை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றிய சகல தரவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் அல்லது சாதாரண சட்டத்தின் கீழ் மட்டுமே கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற தொண்டு நிறுவனமொன்று எவ்வித ஆதாரமுமின்றி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் அதனை அரசாங்கத்திடம் தெரிவித்து தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் தருணத்தில் இந்த அறிக்கை திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment