முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் இனவாதம் ஆயுதரீதியான வன்முறைகளை அவர்களது விடுதலை போராட்ட காலத்தில் பல தடவை நிகழ்த்தியுள்ளன. சித்தாந்த ரீதியில் ஏனைய தமிழ் இயக்கங்களைவிடவும் தெளிவான நேரான பார்வைகளை கொண்ட மக்கள் போராட்ட இயக்கமான புளொட் கூட இதற்கு விதிவிலக்கல்ல. சித்தசுவாதீனமற்ற முஸ்லிமை பிடித்து சென்று சீ.ஐ.டீ. என விசாரித்து கொலை செய்த பண்பாட்டிற்கு சொந்தக்காரர்கள் இவர்கள்.
இப்போது மீள்குடியேற்றம் நடக்கவுள்ள காலம். ஆனால் நடக்கவில்லை. மாறாக குடியேறியவர்கள் சிலர் மீளவும் புத்தளம் சென்றுள்ளனர். முஸ்லிம் வட்டார காணி நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வடக்கின் அனைத்து பகுதிகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேறும் போது யாழ்ப்பாண முஸ்லிம்கள் மட்டும் மீள்குடியேற முடியாமல் திண்டாடுகின்றனர். இதற்கான காரணிகள் கண்டறியப்படல் வேண்டும்.
யாழ்ப்பாண முஸ்லிம்களிற்கு எந்தவொரு அரசியல் தலைமையும் இல்லை. சுயநல அரசியல்வாதிகளே எஞ்சியுள்ளனர். அவர்களை விஞ்சும் வகையில் கொழும்பில் இருந்து விசிட் பண்ணும் அரசியல்வாதிகள் தொழிற்படுகின்றனர். தமிழர் போராட்டம் தொடர்பாகவோ, யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பாகவோ எந்தவித அரசியல் திட்டங்களும் இல்லாத ஒரு சுயலாப அரசியலை முன்னிறுத்திய போக்கே காணப்படுகிறது.
சமூகரீதியான வழிகாட்டல்கள், உதவிகள் என்று பார்த்தாலும் அங்கும் மிகவும் பலவீனபட்ட நிலையே உள்ளது. உறுதியான ஒரு சமூக சேவை மக்களிற்கு கிடைப்பதில்லை. கிடைக்கும் உதவிகளில் கொங்கிறீட் கல்லிலும், கம்பியிலும் கொமிஷன் வைக்கும் மனிதர்களே ஆதிக்கம் செய்கின்றனர்.
யாழ்ப்பாண முஸ்லிம் பகுதியை அண்டிய பகுதிகளிலும், ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் உள்ள பல தமிழர்கள் தங்களது போராட்டத்தின் தோல்வியுடன், யுத்தத்தின் தாக்கங்களின் பின் ஒரு தத்துவார்த்த மனோநிலைக்கு சென்றுள்ளனர். எல்லாமே பொய் எனும் நிலையது. கடவுள் கூட இருக்கிறாரா என எண்ணத்தலைப்பட்டுள்ளனர் தமிழர்கள். இது எமக்கு பலமான சூழல். இந்த மக்களிற்கு மத்தியில் இஸ்லாத்தை எடுத்துச் செல்லும் பணி எமக்கு உள்ளது. பலர் தாங்களாகவே இஸ்லாத்தை நோக்கி வந்துள்ளனர்.
இது தொடர்பில் எமக்கு ஆழமான சிந்தனைகள் தேவை. ஒரு உறுதியான வேலைத்திட்டம் தேவை. இவர்கள் மத்தியில் மிஷனரி வேலைகளை செய்யக்கூடிய திறன் மிக்க அமைப்பு தேவை. இதன் ஊடாக பல்லாயிரம் தமிழர்கள் புனித இஸ்லாத்தை நோக்கி வர வாய்ப்புக்கள் உள்ளது. சோனக தெருவை இவர்களாளேயே இட்டு நிரப்ப முடியும். நாளைய எமது மஸ்ஜித்களிற்கு சொந்தக்காரர்களும் இவர்களே.
இஸ்லாம் ஒன்றும் அநந்தர சொத்தல்ல. அது மற்றைய மக்களிற்கு பகிரப்படல் வேண்டும். அதை எடுத்துச் செல்வது நம் கடைமை. அவர்களை இஸ்லாத்தின்பால் அழைப்பதும் நம் கடமை. இவ்வாறு மாறும் ஒரு சமூகவியல் மாற்றத்தின் ஊடாக ஒரு உறுதியான பலமிக்க சோனக தெருவை நாம் உருவாக்கலாம். எல்லாம் வல்ல இறைவன் நாடினால் பல சோனக தெருக்கள் குடா நாட்டில் உருவாகலாம்.
இதற்கான காலமிது. இது நாம் செய்ய வேண்டிய ஒன்றும் கூட. இறைவனின் பாதையில் வெளிக்கிளம்புதல் என்பது இதுதான். தப்லீக் செய்தல் என்பதும் இதுதான். தஸ்கீல் பண்ணுதல் என்பதும் இதைத்தான். மாறாக நாம் நமக்குள்ளேயே பம்பரம் விடுகிறோம். கூட்டமாக போய் பள்ளிவாசலில் தங்கி உண்டு புஷித்து, உருண்டு புரண்டு நாலு மாசம் என்றும் நாற்பது நாட்கள் என்றும் என்னெல்லாமோ செய்கிறோம்.
இனிவரும் ஜமாத்தகள் தமிழ் பிரதேசங்களை நோக்கி பயணிக்கட்டும். தவ்வத் அவர்களை நோக்கி நடக்கட்டும். கஸ்துகள் அவர்கள் படலைகளை தட்டட்டும். அப்போது மட்டும் தான் நாதன் நாஸராகும், பார்வதி பாத்திமாவாகும் அற்புதம் நிகழும். நபி (ஸல்) இதைத்தான் செய்தார்கள். இஸ்லாத்தை மதீனாவில் முடக்கி வைக்கவில்லை. மாறாக ரோம், பாரசீகம், பைசாந்திரியா என கொண்டு செல்ல கட்டளையிட்டார்கள்.
காதலித்தவனையோ, காதலித்தவளையோ கூட்டி வந்து திருமணம் முடிக்கும் “இஸ்லாமியப்படுத்தல்” என்பது என்னவென்று புரியவில்லை. காதலிற்காக அல்லது திருமணத்திற்காக அவர்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள். பின்னர் தங்கள் முஸ்லிம் துணைவரின் அல்லது துணைவியின் தவறான பழங்கவழக்கங்களை கண்டு இஸ்லாத்தை விட்டும் உள்ளத்தால் ஒதுங்குகிறார்கள்.
முன்மாதிரி முஸ்லிமாக நாம் நடக்க வேண்டும். முன்மாதிரி முஸ்லிம்களை நாம் உருவாக்க வேண்டும். உமர் இப்னு கத்தாபும் காலித் இப்னு வலீதும் மௌலா இஸ்லாமியர்களே. நாளை எம்மால் உள்வாங்கப்படும் தமிழ் பிரதேச சகோதரர்கள் மத்தியிலும் இதே உமர்களும் காலித்களும் நிச்சயம் வரத்தான் போகிறார்கள். உஹதில் முஸ்லிம்களை வென்ற அதே காலித் இப்னு வலீதே பின்னர் பல தேசங்களை முஸ்லிம் தேசங்களாக மாற்றி காட்டினார். அப்படியென்றால் தமிழ் சமூகத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்று மதம் மாறிவரும் காலித் இப்னு வலீத்களாலேயே நாளை இனவாத பாசிஸ்ட்களை முகம் கொடுக்க முடியும் .
இந்த தஃவாவை செய்து நாம் நம் சோனகதெருவை பலப்படுத்தவில்லை என்றால் எம் சமூகத்தில் உள்ள முதலாளித்துவ சக்திகள் இந்த சோனக தெருவை தம்மிடையே பங்கு வைப்பர். அதன் பலனாய் சாதி, தெரு, அண்டான் அடிமை போன்ற வர்க்கங்கள் உருவாகும். இவர்கள் தங்கள் சல்லாபங்களிற்கான உல்லாசபுரியாக சோனகதெருவை மாற்றுவர். அப்போது தமிழ்மக்கள் எம்மில் இருந்து விலகியிருப்பர்.
எம் சமூகத்தின் சகோதரர்களே!, சகோதரிகளே! சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கையில் இஸ்லாத்திற்காக எதை செய்தீர்கள். சகாத் சதக்கா கொடுப்பதோடு, உம்ரா ஹஜ் செல்வதோடு உங்கள் கடமைகளை முடக்கிவிடாதீர்கள். சத்திய இஸ்லாம் மேலோங்க முன்வாருங்கள். இதற்கான வேலைத்திட்டம் உருவாக உதவுங்கள். உங்களிற்காக நாம் காத்திருக்கிறோம். எமது ஈமெயில் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாளைய ஒளிமிக்க சோனக தெருவில் எம் பிள்ளைகள் நடந்து செல்லட்டும்.....
No comments:
Post a Comment