போதை பொருள் பாவனையாளர் தான் மட்டுமன்றி தனது நண்பர்களிற்கும் தன்னை சார்ந்தவர்களிற்கும் இதனை அறிமுகப்படுத்துகிறார். இதனால் பல குடும்பங்கள் சிதலமாகி சீரழியும் நிலை உருவாகியுள்ளது. வீட்டில் வறுமை, நான்கு ஐந்து குழந்தைகள் எனும் நிலையில் குடும்பத்தலைவன் போதை பொருள் பாவனையாளராக மாறும் போது அந்த குடும்பம் மேலும் வறுமையை நோக்கி தள்ளப்படுகிறது.
தினம் உழைக்கும் பணம் 800 ரூபாய் என்றால் இவரது டீ,ரொட்டி ரோஸ்,கோல்ட் லீப் சிகரட், ஸ்டேன்ட்பை மூன்று கோல்ட் சீல், இதரை வாழைப்பழம் போன்றவற்றிற்கு 200 ரூபாய் வரை செலவாகிறது. இவரது போதை பொருளை வாங்க 300 ரூபாய் வரை செலவாகிறது. மிகுதி 300 ரூபாயை மனைவியிடம் சென்று கொடுக்கிறார். அடுத்த நிமிடம் அந்த பணத்தில் மூத்த மகனை அனுப்பி 5 சிகரட் வாங்குகிறார். மீகுதி 200 ரூபாயில் அந்த பெண்ணால் நான்கு குழந்தைகளிற்கும் உணவளித்து இவரிற்கு பொரித்தும் வைக்க வேண்டும். முடியுமா?. முடியாது. முடியாவிட்டால், பிரச்சனை. பணம் தேட வேறு வழிகளை நாட வேண்டிய நிலை அவளிற்கு. பிரச்சனை இதில் இருந்து ஆரம்பிக்கிறது. விளைவு குடும்பம் சிதறடிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் இது ஒரு பாரிய பிரச்சனையை உருவாக்குகிறது. போதையினால் கையில் பணமில்லை. அடுத்து தனி நபர்களிடமும், நிறுவனங்களிடமும் பணத்தை வட்டிக்கு வாங்கும் நிலை. வட்டியை கட்ட முடியாமல் தலைமறைவாக வேண்டும். இருக்கவே இருக்கிறது தில்லையடி. தலைமறைவு வாழ்க்கைக்கு சிறந்த இடம். குடும்பம் மீண்டும் குடிபெயர்கிறது. மீள்குடியேற்றம் புஸ்வாணமாகிறது.
இதைத்தான் இனவாத மிஷனரிகள் எதிர்பார்க்கின்றன. இதற்காக இவை பல ரூபங்களில் செயற்படுகின்றன. முஸ்லிம்களிற்கு கடனுதவி என்ற பெயரில் காசை கொடுத்து பின்பு வட்டியை வாங்காமல் விட்டு திடீரென சென்று அசலுடன் வட்டியை திருப்பி தர வேண்டும் இல்லையென்றால், பொலிஸ், கோடு, வழக்கு என்றவுடன் அரண்டு போய் ஓடுகின்றனர். ஓட முடியாதவர்கள் இருக்கும் காணியை விற்று அல்லது எழுதி கொடுத்துவிட்டு மெல்ல ஊர் போய் சேர்கின்றனர்.
1990 களிற்கு முன்பும் நம் சமூகத்தில் போதைவஸ்து விற்றவர்கள் சிலர் இருக்கவே செய்துள்ளனர். நான் வாழ்ந்த ஹாதி அபூபக்கர் வீதியில் குடும்பமாக வாழ்ந்து கொண்டு போதை பொருட்களை விற்ற ஒரு கடையினை சின்ன முஹிதீன் பள்ளி மஹல்லாவாசிகள், காமால் மஹல்லாவாசிகள் ஒன்று திரண்டு இஷா தொழுகையின் பின் ஊர்வலமாய் சென்று தீயிட்டு கொழுத்தினர். அடித்து நொருக்கினர். இதில் என் உறவினர்கள் பலர் முன் நின்றனர். நான் அறிந்த வகையில் காத்திரமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி இது. இப்போது இதே போதை பொருட்கள் எம் சமூகத்தில் மீண்டும் தலை உயர்த்தியுள்ளன. இதனை விற்கும் சமூக விரோதிகளை இனங்கண்டு தடுத்து நிறுத்தல் வேண்டும்.
இதை தடுப்பது நமது கூட்டு கடமை. தமிழ் மக்களுடன் இணைந்து இதனை நாம் தடுக்க முன்வரல் வேண்டும். தமிழ் பகுதிகளில் இருந்தே அநேகமாக இந்த போதைபொருட்கள் பொட்டலங்களாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதை நாம் எம் கரங்களாலும் சட்டத்தின் உதவி கொண்டும் தடுக்க வேண்டும். பாவனையாளர்களிற்கான புனர்வாழ்வு பயிற்சியினை வழங்க வேண்டும். மார்க்க விளக்கங்கள் ஊடாக அவர்களின் மனங்களை மாற்ற முற்படல் வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பாக தமிழர் பகுதிகளில் காத்திரமான நடவடிக்கைகள் பல மட்டங்களிலும் எடுக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் இயங்கக் அனுமதிக்கக் கூடாது என்று யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்துள்ளார்.
போதைபாவனை தலையெடுத்துள்ள ஆரம்ப நிலையிலேயே இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக போதை பொருள் தடுப்பு தொடர்பாக செயற்படும் நிறுவனங்களின் உதவிகளையும் ஆலோசனைகளையும் பெறுவது நன்மையிளிக்கும் விடயமாகும். இலங்கை பொலிஸாரின் போதை தடுப்பு பிரிவினரின் ஆலோசனைகளை நாம் பெற முயற்சிப்போம். யாழ் முஸ்லிம்களை இந்த போதை பாவைனையில் இருந்து மீட்பதற்காக உங்கள் ஆரோக்கியமான உதவிகளையும், பங்களிப்புகளையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றேன்.
No comments:
Post a Comment