சந்திப்பு - இன்ஸாப் ஸலாஹுதீன்
எம்.ஆர். நஜா முஹம்மத் (இஸ்லாஹி) அவர்கள் ஹபுகஸ்தலாவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1987 ஆம் ஆண்டு இஸ்லாஹியா அறபுக் கல்லூரியில் இணைந்து 1992 ஆம் ஆண்டு அதன் முதல் பட்டதாரி குழுவில் ஒருவராக வெளியேறினார். 1998 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான துறையில் விசேட பட்டம் பெற்றார். 1998 - 2000 ஆம் ஆண்டு வரை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் தற்காலிக விரிவுரையாளராகக் கடமையாற்றிய இவர். தனது முதுகலைமாணிப் படிப்பிற்காக ஐக்கிய இராச்சியம் சென்றார். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் பகுதியான ஜம்இயதுத் தலபாவின் தலைவராகவும் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் Sri Lanka Islamic Forum - UK எனும் நிறுவனத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவராகவும் 2007 ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் பணியாற்றினார். சமூகத் தளத்தில் தொடர்ந்து இயங்கிவரும் நஜா முஹம்மத் அவர்களுடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
Sri Lanka Islamic Forum - UK இன் உருவாக்கப் பின்னணி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
உண்மையில் அவை முக்கியமான அனுபவங்கள். அங்கும் கணிசமான புலம்பெயர் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்களை மூன்று கட்டங்களில் குடியேறியவர்களாக நாம் நோக்கலாம். 1965களில் கொழும்பு, கண்டி, காலி ஆகிய இடங்களிலிருந்து சென்றவர்கள் முதல் கட்டத்தினர். இவர்கள் சுமார் 500 குடும்பங்கள் அளவில் தற்பொழுது வசிக்கிறார்கள். Sri Lanka Islamic Association எனும் அமைப்பை 1975 இல் இவர்கள் ஆரம்பித்தார்கள். 1985 களுக்குப் பிறகு ஜூலைக் கலவரம் மற்றும் இனப்பிரச்சினையை மையப்படுத்தி கணிசமான தொகையினர் ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினர். இவர்கள் இரண்டாம் கட்டத்தினர். மூன்றாவதாக, 1995 இற்குப் பிறகு கணிசமான தொகையினர் மாணவர்களாக அங்கு சென்றார்கள். இப்படியாக மூன்று கட்டங்களில் அங்கு இலங்கை முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இதில் மூன்றாவது தலைமுறையை வைத்துத்தான் நாங்கள் எமது பணியை ஆரம்பித்தோம்.
ஆரம்பத்தில் நாங்கள் ஒரு கல்வி வட்டமாகத்தான் செயற்பட்டோம். பின்னர் அங்கிருக்கின்ற பாகிஸ்தான், பங்களாதேஷ், அறபு சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், செயற் பாட்டாளர்களை வைத்து மாதம் ஒரு முறை ஒரு உரை ஏற்பாடு செய்தோம். 2001 ஆம் ஆண்டு நடுப்பகுதியில்தான் அமைப்பு ரீதியான கட்டமைப்புக்கு நகர்ந்தோம். முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், இலங்கை முஸ்லிம்களின் சமூக அரசியல் விவகாரங்களை சர்வதேச மட்டத்திற்கு நகர்த்துவதிலும் Sri Lanka Islamic Forum - UK கவனம் செலுத்தி வருகிறது.
ஐக்கிய இராச்சியம், இலங்கை ஆகிய இரண்டு தளங்களில் வேலை செய்த அனுபவத்தின் அடிப்படையில் இரண்டிற்கும் இடையில் என்ன வேறுபாடுகளைக் காண்கிறீர்கள்?
ஐக்கிய இராச்சியத்தில், உலகில் உள்ள எல்லா சமூகத்தினரும் வசிக்கின்றனர். எனவே, அங்கு மொழி, கலாச்சார ரீதியாக அதிகமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அங்கிருக்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியிலும் இத்தகைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே, முழு பிரித்தானிய முஸ்லிம் சமூகத்தையும் ஒருமுகப்படுத்தி செயற்படுவது என்பது கடினமாக காரியமாக இருக்கின்றது.
அங்கிருக்கின்ற முஸ்லிம்களின் வரலாறானது 100 வருட வரலாறுதான். ஆரம்பமாகக் குடியேறியவர்களுக்கும் பின்னர் குடியேறியவர்களுக்குமிடையில் பாரியதொரு தலைமுறை இடைவெளி காணப்படுகின்றது. இரண்டாவது தலை முறையானது புதிய மொழி, கலாச்சாரப் பின்னணியுடன் ஐரோப்பிய மனநிலையில் வளர்கிறார்கள்.
இலங்கையில் இருந்து சென்று குடியேறிய முஸ்லிம்களுக்கு மத்தியிலும் இந்தத் தலைமுறை இடைவெளி காணப்படுவது தஃவாவுக்கு பெரிய சவாலாக இருக்கின்றது. அத்தோடு ஐக்கிய இராச்சியம் ஒரு திறந்த சமூகமாக இருப்பதாலும், கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டதாலும்,இஸ்லாமிய செயற்பாடுகளுக்கு அங்கு மிகப் பெரிய தடைகள் இல்லை. ஆனால், சில தீவிரவாத இயக்கங்களின் தடைகள் இல்லாமலும் இல்லை.
இலங்கையைப் பொறுத்த வரை அத்தகைய பாரிய தலை முறை இடைவெளிகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே செயற்படுவதற்கு இலங்கையில் இருக்கும் வாப்புக்களும் சந்தர்ப்பங்களும் ஐக்கிய இராச்சியத்தைவிடவும் அதிகமாகும். மேலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியிலான தஃவாவில் அவர்களிடமிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்க முடியும். அதுதான் புதிய தலைமுறையின் கீழ் இருக்கும் பள்ளிவாயல்கள் சுதந்திரமாக இயங்குகின்றன. முஸ்லிம் அல்லாதவர்களைக் கவரும் வகையில் அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன. இது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
மற்றையது, ஐக்கிய இராச்சியத்தில் செயற்படுகின்ற இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் திறந்த மனநிலையும், பொதுத் தளங்களில் இணைந்து பணியாற்றுகின்ற பன்பையும் நாம் அவதானிக்கலாம். இலங்கையிலும் இஸ்லாமிய இயக்கங்கள் அந்தப் பண்பை கைக்கொள்ள வேண்டும். இதனால் ஒருவேலையை பலர் செய்கின்ற நிலையை தவிர்ப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது. மேலும் தமது ஊழியர்களையும் அங்கத்தவர்களையும் தமது இயக்க எல்லைகளையும் தாண்டி ஊடாடுவதற்கு பயிற்றுவிக்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வேலைத் திட்டம் தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் சவால்களையும் வைத்துத்தான் எமது அரசியல் இதுவரையில் தீர்மானிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் கடந்த மூன்று தசாப்த காலமாக இருந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் கெடுபிடி, தமிழ் தேசியவாதத்தின் உக்கிரமான நிலை என்பவற்றிக்குப் பதிலளிப்பதாகவே முஸ்லிம்களின் அரசியல் வடிவமைக்கப்பட்டன. அது காலத்தின் தேவையாக இருந்திருக்கலாம்.
ஆனால், போருக்குப் பிந்திய இலங்கையில் முஸ்லிம்களின் அரசியல் வேலைத்திட்டம் வேறுவகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அது வெறுமனே முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடுகின்ற அரசியல் என்பதற்கு அப்பால்,இஸ்லாத்தின் தூதை மையப்படுத்தியதாகவும் அதனை தேசிய மட்டத்தில் கொண்டு செல்லக் கூடிய ஊடகமாகவும் பயன்படுத்தலாம்.
யுத்தமற்ற இந்த சூழ்நிலையில் நாடு பல சவால்களை எதிர்கொள்கிறது. உலகமயமாக்கல்,மேற்கத்தேய கலாச்சார ஊடுருவல், சர்வதேச பல்தேசிய கம்பனிகளின் வருகை, யுத்தத்திற்கு உதவியமை எனும் அடிப்படையில் சில பிராந்தியங்களின் மேலாதிக்கம் என பல சவால்களை இலங்கை எதிர்கொள்ளும் சூழலில் எதிர்காலம் குறித்த பாரிய அச்சம் நாட்டு மக்களுக்கு இருக்கிறது.
எனவே இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் முஸ்லிம் சமூகம் காத்திரமான பங்களிப்பை செய்ய முடியும். இத்தகைய பங்களிப்புக்களை செய்யக் கூடிய இடமாக நாட்டின் தேசிய விவகாரங்களை அடையாளப்படுத்தலாம். ஒரு சாதாரண மத, கலாச்சார ரீதியான, கீழ்மட்ட சமூக செயற்பாடுகளுக்கு அப்பால் இந்த நாட்டிற்கு தேசிய ரீதியான பங்களிப்பைச் செய்ய வேண்டும். இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒட்டு மொத்த மக்களுக்காகவும் மிகக் கவனமாக முன்வைக்கக் கூடிய ஊடகமாக அரசியல் காணப்படுகிறது. எனவே, இஸ்லாமியப் பின்னணியில் அரசியலை வழி நடத்தக் கூடிய தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் ஊடாக நாம் கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. இதனூடாக நாம் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இதனைச் செயற்படுத்துவதிலே ஒரு பாரிய இடைவெளி இந்த நாட்டிலே இருக்கின்றது.
இந்த நாட்டில் பெரும் பான்மை சமூகத்தோடும், வடக்கு, கிழக்கு சமூகத்தோடும் நாம் செய்ய வேண்டிய இரண்டு அரசியல் அணுகு முறைகள் இருக்கின்றன. அவர்களுடன் நெருக்கமாக உறவாடி ஒரு உடன்பாட்டு அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. அதேபோல பிரிந்து நிற்கின்ற சிங்கள, தமிழ் சமூகத்திற்கு மத்தியில் ஒரு இணைப்புப் பாலமாக செயற்படக் கூடிய ஒரு உபாய ரீதியான இடத்திலும் முஸ்லிம் சமூகம் இருக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த வாப்பை நாம் அரசியலில் பயன்படுத்தும்போது இதுவரை செய்யாத ஒரு வரலாற்றுப் பங்களிப்பை செய்ய முடியுமாக இருக்கும். அதேபோல முஸ்லிம் அரசியல், சந்தர்ப்பவாத அரசியல் எனும் கருத்தை மாற்றக் கூடியதாகவும் இருக்கும். இது உடனடியாகச் செய்யக் கூடிய ஒரு பணியல்ல. நீண்ட திட்டமிடலின் அடிப்படையிலேயே இது நிகழ வேண்டும்.
சமூகத்தில் முதன்மைப்படுத்த வேண்டிய விடயமாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி பெரும்பான்மை சமூகம் கொண்டிருக்கும் பிழையான அபிப்பிராயங்களை களைவதையே நாம் முதன்மைப்படுத்திச் செய்ய வேண்டிய விடயமாக கருதுகின்றேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்கள் நாங்கள் இந்த நாட்டிலே வாழ்கிறோம். ஆனால், பிற சமூகங்களுடனான உறவில் நாங்கள் ஒரு திரையை ஏற்படுத்தித்தான் வாழ்ந்திருக்கிறோம். அதனால், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய சரியான புரிதல் அவர்களுக்கு ஏற்படவில்லை.
சர்வதேச ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பிழையாக சித்தரிக்கின்றன. அது இந்த நாட்டிலும் தீர்மானங்களை மேற்கொள்பவர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள்,கருத்துருவாக்கம் சேய்பவர்களுக்கு மத்தியில் நியாயமான அளவு செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது. இந்த செல்வாக்கு எவ்வளவு தூரம் இருக்கின்றது, எங்கு தாக்கம் செலுத்துகின்றது, இதனது வெளிப்பாடுகள் எங்கு வெளிப்படும் எனத் தெரியாது. எனவே, அதற்கு மாற்றீடாக நாம் அவசரமாக செயற்பட வேண்டிய தேவை உள்ளது. இலங்கை முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் தம்மைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற இரண்டு இடங்கள் இருக்கின்றன. ஒன்று அரசியல் மற்றது வர்த்தகம்.
இந்த இரண்டின் ஊடாகத்தான் முஸ்லிம் சமூகத்தை அவர்கள் விளங்கி இருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக, அந்த இரண்டும் இஸ்லாத்தை சரியாக பிரதி நிதித்துவப்படுத்தாத ஒரு நிலை காணப்படுகிறது. எனவே, அவை இரண்டும் சரி செய்யப்பட வேண்டும். மேலும், எமது சிவில் சமூகமும் ஏனைய சமூகங்களோடு நெருங்கிப் பழக வேண்டும். அதற்கு தேசிய விவகாரங்களை நாம் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, இது தொடர்பில் நாம் முன்னுரிமை செலுத்த வேண்டும்.
Thanks:Meelparvi
Thanks:Meelparvi
No comments:
Post a Comment