Saturday, April 28, 2012

இஸ்லாத்தின் பார்வையில் (Credit Card)கிரடிட்-கார்ட்



 

இன்று வட்டிஉலகப் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பாக இருந்து வருகின்றது. வட்டி பூச்சிய நிலைக்குச் செல்லாதவரை உலகப் பொருளாதாரம் சீர்பெற முடியாது என்பது பொருளியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகும். அதாவது வட்டி அமைப்பு முற்றாக ஒழிக்கப்படுவதன் ஊடாகவே உலகில்ஆரோக்கியமான ஒரு பொருளாதார ஒழுங்கு உருவாக முடியும் என்பதே உண்மையாகும்
. ஒரு பொருளியல் அறிஞர் வட்டியை 'வாழ்வின் எய்டஸ் என வர்ணித்துள்ளார். வட்டியானது பொருளாதாரம் எனும் உடலின் பலத்தைக் குன்றச்செய்து அழித்துவிடும் எய்ட்ஸாகவே இருக்கிறது. இதனையே அல்குர்ஆன், 'அல்லாஹ் வட்டியை அழிக்கிறான் எனக் கூறுகிறது.

மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் நாளை பிறக்க இருக்கும் குழந்தையும் கூட பெருந்தொகைக்கடனுடன்தான் பிறக்கிறது. இதற்கு நமது நாடும் விதிவிலக்கல்ல. பல நாடுகளால் செல்வந்த நாடுகளினதும்உலக நிதி நிறுவனங்களினதும் கடன்களை அடைக்க முடிவதில்லை. வருடா வருடம் குட்டிபோடும் வட்டியைக் கட்டுவதே இந்தநாடுகளுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. பழைய கடனை அடைப்பதற்கே பல நாடுகள் புதிய கடன் வாங்கும் அவலமும் உலகில் தொடர்கிறது. சிலபோது புதிதாகப் பெற்ற கடனால் பழைய கடனை அடைக்க முடிவதில்லை. மாறாக,அதற்கான வட்டியைச் செலுத்துவதில் குறித்த தொகை தீர்ந்து விடுகிறது. உதவி என்ற பெயரில்வழங்கும் இத்தகைய கடன்கள் மூலமே மூன்றாம் உலக நாடுகளில் செல்வந்த நாடுகளின் ஆதிக்கம் நிறுவப்படுகிறது. அவர்களின் விருப்பு வெறுப்புகள்நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 


கடன் கொடுப்பது இஸ்லாத்தில் ஒரு பெரும் சமூகநலப் பணியாகக் கொள்ளப்படுகிறது. ஒருவர் கடன் வழங்கி செய்கின்ற உதவி அடுத்த சகோதரனின் கஷ்டங்களில் பங்கேற்கும் புண்ணிய காரியமாக இஸ்லாம் கருதுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள்.

'
எவர் ஒரு முஸ்லிமுடைய உலகக் கஷ்டங்களில் ஒன்றை நீக்க உதவுகின்றாரோ அவரின்மறுமைநாள் கஷ்டங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்கிவிடுவான். மேலும் எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு (உதவி செய்து) அவருக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கின்றாரோ அல்லாஹ் உலகிலும்மறுமையிலும் அவருடைய (கஷடங்களை) இலேசாக்கிக் கொடுப்பான்.(முஸ்லிம்)


கடன் தொடர்பான சில இஸ்லாமிய வரையறைகளும் சட்டதிட்டங்களும் இருக்கின்றன.

பொதுவாக கடனாகக் கொடுத்த தொகையை விட கூடுதலாகப் பெறப்படும் தொகை தடைசெய்யப்பட்டவட்டியாக கொள்ளப்படுகின்றது. வட்டிக்கான வரை விலக்கணங்களும் அவ்வாறுதான் அமைந்துள்ளன.ஏதாவது ஒரு பயன்பாட்டைப் பெற்றுத்தரும் எந்தவொரு கடனும் வட்டியாகும் என்றே இஸ்லாமிய அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்துகின்றார்கள். கொடுத்த தொகையை விட கூடுதலாகத் திருப்பித் தரவேண்டும் என நிபந்தனை இடுவதே ஹராமாகும்




  
கிரடிட் கார்ட்:

வட்டிக்கு கடன் வழங்கும் முறை இன்று பல வடிவங்களைப் பெற்றுள்ளது. Mortgage, Finance, Leasingபோன்றன அவற்றில் சில வடிவங்களாகும். அவற்றுள் ஒரு வடிவமே Credit Card எனவழங்கப்படுகின்ற கடன் அட்டை ஒழுங்காகும். ஆரம்பத்தில் மேற்குலகில் அறிமுகமான கடன் அட்டை இப்போது உலக மயப்படுத்தப்பட்டு உலகின் மூலை முடுக்குகளிலும் சந்து பொந்துகளிலும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாகமாறியிருக்கின்றது. தேவையுடையோரும் தேவையற்றோரும் இதனை உபயோகிக்கும் நிலைஇன்று உருவாகியுள்ளது.

நிதி நிறுவனங்களும் வங்கிகளும் வீட்டுக்கதவுகளைத் தட்டி கவர்ச்சியான விளம்பரங்களையும் சந்தைப்படுத்தும் உத்திகளையும் கையாண்டு இதற்கான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன. பலர் இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை உணராத நிலையில் இதற்குப் பலியாகி வருகின்றனர். கடன் அட்டையை வைத்திருப்பதை ஒரு பெருமையாகவும் நாகரிகமாகவும் கருதும் நிலையும் தோன்றியுள்ளது.

உண்மையில் கடன் அட்டை என்பது நுகர்வோரை வீணாக கடன் காரராக மாற்றும் ஒரு நவீன கால சமூக கொடுமையாகும். கையில் பணம் இல்லாத நிலையிலும் உளரீதியாக ஒருவரை செலவு செய்யத் தூண்டும் ஒரு உத்தியாகவே இது காணப்படுகின்றது. பண அட்டையை வைத்திருக்காதவர் கையில் உள்ள காசை கொண்டு அவசியமான பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்வார். பண அட்டையை வைத்திருப்போரோ அத்தியவசியமற்ற பொருட்களையும் வாங்குவதற்குதூண்டப்படுவார். அவ்வாறே கையிலுள்ள பணத்தை வைத்து பொருள் வாங்குபவர் ஏலவே திட்டமிட்ட பொருட்களையே கொள்வனவு செய்வார். கடன் அட்டை வைத்திருப்போரோ பலபோது அட்டையிலுள்ள பணத்தை தனது பணமாக நினைத்து செலவு செய்ய முற்படுவார். இத்தகைய உளநிலையை அது உருவாக்குகின்றது என்பது இன்று நிறுவப்பட்ட ஒரு உண்மையாகும். இதனால் தனது நுகர்வுச் சக்திக்கு மேல் செலவு செய்து கடன்பழுவினால் வாடும் பல மில்லியன் பேரை இன்று உலகில் காணமுடிகின்றது. கடன் அட்டைக்கு பலியான பலர் அதன் மோசமான விளைவுகளை உணர்ந்துள்ள போதிலும் அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் இது ஒருவகை அடிமைத் தளையாகும். 

 இன்று Credit Card மூலம் உலகில் பல மில்லியன் கணக்கானோர் பெரும் கடன்காரர்களாக மாறியுள்ளனர்.

பெரும்தொகை பணத்தை கையில் வைத்திருப்பது ஆபத்தானது. அந்த வகையில் கடன் அட்டையைவைத்திருப்பது பாதுகாப்பானது என்பது அதனை பயன்படுத்தோரின் ஒரு முக்கியமான வாதமாகும். இது ஒரு நியாயமான வாதம் என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால் குறித்தபிரச்சினைக்கான ஒரே பரிகாரம் கடன் அட்டை மட்டுமே என்பது பிழையான வாதமாகும். ஏன் காசோலைகளை பயன்படுத்த முடியாது.

அவ்வாறே Debit Card என்று அழைக்கப்படுகின்ற அட்டைகளும் Credit Card களுக்கு சிறந்த ஒரு மாற்றீடாகும். Debit Card என்பது ஒருவரது வங்கிக் கணக்கில் உள்ள வைப்பின் அளவுக்குப் பயன்படுத்தக் கூடிய ஓர் அட்டையாகும். ஒப்பீட்டு ரீதியில் பொருளாதார நோக்கிலும் சரி இஸ்லாமிய கண்ணோட்டத்திலும் சரி இது ஒரு பாதுகாப்பான ஒழுங்காகும். இன்று உலகில் உள்ள நுகர்வோர் நலன் காக்கும் அமைப்புக்கள் கடன் அட்டைக்குப் பதிலாக கையிலுள்ள பணம் (Cash), காசோலை (Cheque), பெறுகடன் அட்டை (Debit) முதலானவற்றைப் பயன்படுத்துமாறு நுகர்வோருக்கு ஆலோசனை கூறுகின்றன. 

  
ஷரீஆ நோக்கு

பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எத்தகையதொரு கொடுக்கல் வாங்கலாக இருப்பினும் அது இஸ்லாமிய நோக்கில் ஹராமானது என்பதில்  வேறு கருத்துக்களுக்கு இடமில்லை . 



ஷரீஆ நோக்கில் மட்டுமன்றி  பொருளாதார நோக்கிலும் கடனட்டைப் பயன்பாடு பிரச்சினைக்குரிய ஒன்றாகவே விளங்குகின்றது. கடன் அட்டையைப் பயன்படுத்தும் ஒரு முஸ்லிம் ஆரம்பத்தில் வட்டி கொடுப்பதில் இருந்து விடுபடும் வகையில் உரிய தவணைக்கு முன்னர் கணக்கைச் செலுத்தினாலும் காலப் போக்கில் கவனக்குறைவினால் உரிய காலத்தில் பணத்தை செலுத்த முடியாமல் போய் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்து உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் கடனட்டை அடிப்படையில் வட்டியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் ஒழுங்காகும்.

ஒரு சிலர் உரிய தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்தி வட்டியில் இருந்து விடுபட்டாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் காலதாமதத்தின் காரணமாக ஒரு சிறு தொகை வட்டியையேனும் செலுத்துபவர்களாகவே இருப்பர். எனவே ஒரு முஸ்லிம் நேரடியாக இல்லாத போதிலும் மறைமுகமாக வட்டியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொடுக்கல் வாங்கல் ஒழுங்கு வளர்வதற்கு துணை புரிகின்றார் என்ற வகையில் குற்றவாளியாக கருதப்படும் நிலை காணப்படுகின்றது.

எனவேஒரு பேணுதலான முஸ்லிம் கடனட்டைப் பாவனையை தவிர்த்துக் கொள்வதே பொருத்தமான நிலைப்பாடாக கொள்ளப்படுகின்றது. இதற்கு மாற்றீடாக காசோலையை (Cheque) அல்லது பெறுகடன் அட்டையை (Debit Card) பயன்படுத்துவதே பொருத்தமானதாகும்.







கிரடிட் காட் பாவனை மார்க்கத்திற்கு முரணானது வட்டியை அடிப்படையாகக் கொண்டது என்பதைத் தெரிந்துகொள்ள அதன்முறைமை பற்றி ஒரு சிறு விளக்கம். 
Visa, Master 
 போன்ற நிறுவனங்கள் நிறுவனங்களின் வளர்ந்த உலகலாவிய ரீதியிலான இணையத் தொலை தொடர்பு தொழிநுற்பத்தின் விளைவுகளில் ஒன்றே கடனட்டைப் பயன்பாட்டின் இன்றைய வடிவம். உங்கள் கடனட்டையில் விஸா என்றும் மாஸ்டர் என்றும் இடப்பட்டிருப்பதன் அர்த்தம் நீங்கள் கடனட்டையைப் பயன்படுத்திய வங்கி குறிப்பிடப்பட்ட அந்நிறுவனங்களின் நெட்வேர்க்கைப் பயன்படுத்தியே உங்களுக்கு அந்த சேவையை வழங்குகிறது என்பதுவே. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட வங்கியின் மூலம் நீங்கள் பெற்றுள்ள கிரடிட் அட்டையை இன்னொரு வங்கியின் ATM இல் உபயோகப்படுத்த முடிகிறது. ஆக இந்த அட்டைகளை நீங்கள் வங்கிகள் மூலம் பெற்றுக் கொண்டாலும் அந்த அட்டைகள் உலகத்தில் எங்கும் செயல்படுத்தும் வண்ணம் அந்த சேவைகளை வழங்குவதும் நிர்வகிப்பதும் விஸா மாஸ்டர் போன்ற நிறுவனங்களே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.வங்கிகளிலிருந்து நாம் இவற்றைப் பெறுகிறோம். நாம் பெறும் இந்தக் கடன் அட்டைகளுக்கான பணத்தை உரிய நேரத்தில் கிரடிட் காட் இணைப்பைப் பெற்ற நிறுவனங்களுக்கு விஸா மாஸ்டர் போன்ற நிருவனங்கள்  வழங்கி விடுகின்றன. அதாவது கணக்கில் வைப்புச் செய்து விடுகின்றன. எனவே வங்கிகளுக்கு இதில் பொறுப்பேதுமில்லை. 
கிரடிட் காட் வினியோகம் செய்யும் நிறுவனங்களேஅவற்றுக்கான பொறுப்பை ஏற்றுள்ளதால் வங்கிகள் அச்சமின்றி அவற்றை வினியோகிக்கின்றன. இதனால் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிக்கின்றன. இந்த சேவைக்காக நூற்றுக்கு இரண்டரை முதல் ஏழரை வரையிலான தொகையை வட்டியாக தமக்கு வழங்க வேண்டும் என்று கிரடிட்காட் நிறுவனங்கள் வங்கிகளோடு உடன்படிக்கை செய்கின்றன. இவ்வுடன்படிக்கையின் அடிப்படையில்தான் கிரடிட் காட் வினியோகமே நடைபெறுகின்றன. 
ஆகவே வங்கிகள் செலுத்தும் இந்த வட்டியை வங்கிகள் குறிப்பிட்ட அட்டைகளைப் பயன்படுத்தும் தொழில்ஸ்தாபனங்களிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.
இந்த வட்டி முறைக் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறா விட்டால் நாம் கிரடிட் காட்டை உபயோகிக் முடியாது. நாம் பெறும் கிரடிட்காட்களே காரணம் என்பதால் வட்டிக்கு நாம் இங்கே துணை போகின்றோம். இவ்வடிப்படையில்தான் கிரடிட் காட் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக ஆகின்றது. 
அது மட்டுமல் இந்த அட்டைகளைப் பயன்படுத்தும் பொழுது மறை முகமாக நமது பணம் சிறுதுளி பெருவள்ளம் என்பதற்கு இணங்க பல காரணங்கள் காட்டி உருவப்படுவதைப் பார்க்கலாம். எமக்கும் வியாபரிக்கும் வங்கிக்கும் இடையிலான இந்த கடன் சேவைக்கு வட்டி பெறப்படுவதும் அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்த கடனட்டை சேவை Visa, Master, American Express  போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுவதும் இந்தக் கிரடிட் காட் பயன்பாடு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்ற உறுதியான மார்க்கத் தீர்ப்பை எமக்குச் சொல்கிறது. அல்லாஹ் நம்மனைவரையும் இந்த சுரண்டல் முறைப் பொருளாதராத்திலிருந்து காப்பானாக.

No comments:

Post a Comment