Friday, May 25, 2012

சமூகத்தீமைகளுக்கு எதிரான மக்கள் பிரகடனம்




by: Azmin Aiyoob     யாழ் முஸ்லிம்களாகிய நாம் இத்தால் சகலருக்கும் அறியத்தருவதாவது,..
எமது தேசத்தில் கடந்த 3 தசாப்தங்களாக நிலவிய யுத்தம் தற்போது நிறைவடைந்து அமைதியான சூழல் உருவாகிக்கொண்டிருக்கின்றது. இந்த யுத்தமற்ற அமைதியான சூழலைப்பயன்படுத்தி எமது தேசத்தின் இனத்துவங்களிடையே நல்லிணக்கமும், பரஸ்பர புரிந்துணர்வும், கௌரவமான வாழ்வும் உருவாக்கப்படவேண்டும்.

 இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில்; தாமும் எல்லா மக்களைப்போன்றும் சரிசமமாக மதிக்கப்படுகின்ற, வளங்களைப் பகிர்ந்துகொள்கின்ற, வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்கின்ற ஒரு நல்ல சூழ்நிலைக்காக தொடர்ந்தும் முயற்சிகளில் ஈடுபட்டுக்க்கொண்டிருக்கின்றார்கள்
இந்தவேளையில் பல்லின சமூகங்கள் வாழ்ந்த, வாழ்கின்ற யாழ்ப்பாணம் போன்ற சிறுபான்மைகள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பூமியில் அண்மைக்காலமாக சமூகவிரோத செயல்கள் வகைதொகையின்றிப் பெருகியுள்ளமை எம்மை மிகுந்த வருத்தமடையச் செய்கின்றது.

நீண்டகாலம் யுத்தமொன்றை சந்தித்த சமூகங்கள், நீண்டகால இடப்பெயர்வை சந்தித்த சமூகங்கள் இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகுவது மரபு, என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, இருப்பினும் அத்தகைய தீமைகளுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வடைந்து அவற்றை இல்லாதொழிக்க முன்வரவேண்டும், இது ஒரு சமூகக் கடைமையாகும்.

அந்தவகையில் யாழ் மண் பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகளை இதுவரை சந்தித்துள்ளது, இன்னும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற வாய்ப்பும் இருக்கின்றது, எனினும் இந்த மண்ணின் மைந்தர்களாகிய நாம் இவற்றுக்கு எதிராக செயற்பட்டு எமது மண்ணின் கௌரவத்தைக் காப்பாற்ற திடசங்கற்பம் பூணுகின்றோம்

19-05-2012 அன்று யாழ் மாவட்டத்தின் காரைநகர்ப் பகுதியில் மாற்றுத்திறன்கொண்ட யுவதியொருவரின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறவு குறித்த்த செய்தியை செவியுற்ற நாம் மிகுந்த மனவேதனையடைகின்றோம், இதன் நிமித்தம் அத்தகைய ஈனச்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உச்ச அளவிலான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுவதை நாம் வலியுறுத்துகின்றோம்.

எதிர்வரும் காலங்களில் யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் இத்தகைய சமூகவிரோத செயற்பாடுகள் இடம்பெறாவண்ணம் தடைசெய்வதற்குரிய சமூகப்பொறிமுறையாக யாழ் முஸ்லிம் சிவில் பாதுகாப்பு கவுன்ஸில் என்னும் அமைப்பை யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் கீழ் நிறுவி அதனை ஒரு வினைத்திறம் மிக்க பொறிமுறையாகவும் அறிமுகம் செய்கின்றோம்.

இவ்வண்ணம்
யாழ் முஸ்லிம்கள்

மேற்படி பிரகடனம் குறித்த ஈனச்செயலைக் கேள்வியுற்று ஆத்திரமும் கவலையுமடைந்த யாழ் முஸ்லிம் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடி எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் வரையப்பட்டாதாகும்.

No comments:

Post a Comment