Friday, May 25, 2012

காரை நகர் விவகாரமும் முஸ்லிம் ஊடகங்களும்..



யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக பல தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ளன. இதில் முஸ்லிம் ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் என இரு புறத்திலிருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர் தமிழ் பெண் என்ற வகையில் தமிழர் தரப்பு ஊடகங்களில் ஒரு கோபம் மிகைத்து நிற்பதை எம்மால் உணர முடிகிறது. இனரீதியான பாதிப்பின் உணர்வுகள், புரிந்து கொள்ள தக்கவையே.

முஸ்லிம் ஊடகங்கள் மேற்படி செய்தியை வெளியிட்ட விதம் தொடர்பாக நாம் சில வார்த்தைகளை பேச விரும்புகிறோம். யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லிம்களால் யாழ்ப்பாணத்தில் வைத்து எந்த ஒரு ஊடகமும் செயற்படுத்தப்படுவதில்லை என்பது உறுதி. இதை எழுதும் வரையும் எமக்கு தெரிந்த வரையும்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பாக பேச வல்ல ஊடகங்கள் பல யாழ்ப்பாணத்திற்கு வெளியேயும், வேறு தேசங்களிலும் செயற்படுகின்றன. இவர்கள் செய்திகளை வெளியிடும் போது ஓரிரு தகவல்களை அடிப்படையாக வைத்து வேகமாக செய்தி வெளியிடுகின்றனர். குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களின் உணர்வலைகளை இவர்கள் கருத்தில் கொள்ளவதில்லை. வெளியிடும் செய்தியினால் விளையும் எதிர்கால தாக்கங்கள் பற்றியும் இவர்கள் சிந்திப்பதில்லை. இவர்களிற்கு வேண்டும் சூடான செய்திகள். அதை துரிதமாக வெளியிடுவது. எல்லோரிலும் தாங்கள் முதன்மையானவர்கள் என காட்ட முற்படுவது. கிளற்ச்சிகரமான, கவற்ச்சிகரமான வார்த்தைகளை தலைப்புக்களாக இட்டு நிரப்புவதால் அதிக வாசகர்களை உள்வாங்க முற்படுவது. 

இவ்வாறான தகவல் பரிமாற்றம் என்பது முழு சமூகத்தையும் பாதிக்கும் விடயமாக எதிர்காலங்களில் மாறி விட வாய்ப்புக்கள் அதிகம். தீய இனவாத சக்திகளிற்கு இது ஒரு வரப்பிரசாதமாக மாறிவிடும். எதிர்காலங்களில் இன முரண்பாடுகள் தொடர்பான செய்திகளை வெளியிடும் முன்பு யாழ்ப்பான முஸ்லிம்களை வழி நடாத்தும் அமைப்புக்களின் குறித்த விடயம் தொடர்பான அணுகுமுறை, அவர்களது நகர்வுகள் போன்றன உள்வாங்கப்பட்டு அதற்கு எந்த பங்கமும் வராத வகையில் எமது வெளிப்பாடுகள் அமைதல் அவசியம். 

அதனை கையாள பல இலகுவான வழிகள் இருந்தும், அதற்கு முன்னதாக அவசரப்பட்டு சில செய்திகளை காரமான தலைப்புகளாக வெளியிடுவது உகந்ததாக எமக்கு படவில்லை. “எறிந்த குண்டுகள் ஒரு முறை தான் வெடிக்கும். வீசிய வார்த்தைகள் விடாமல் வெடிக்கும்”. இதனை நாம் ஏன் உணர மறுக்கிறோம்.

காரை நகர் விவகாரம் இன்று பிரதேசவாத அரசியலால் உள்வாங்கப்பட்டு அது தனது குறுந்தேசியவாத சிந்தனைகளிற்கு அமைய தீர்வுகளை முன்வைக்கிறது. எமக்கு தமிழ் ஊடகங்களிற்கு புத்தி சொல்ல வேண்டிய தேவையில்லை. முஸ்லிம் ஊடகங்கள் தங்கள் அடையாளத்தை சரியாக முன்வைக்க வேண்டும். இஸ்லாம் சொல்லும் அழகிய முன்மாதிரியில் அமைந்த ஊடகவியலையே நாம் கைக்கொள்ள வேண்டும். 

நாம் கட்டுரை வரைய அதற்கு “பிற்குறிப்பு” என்ற பெயரில் பலரும் தாம் சார் அரசியல் கருத்துக்களை இனவைாத மைகொண்டு எழுத அதனை நாம் பிரசுரிப்பது நிலைமைகளை சிக்கலாக்குமேயல்லாது தீர்வுகளை ஒரு போதும் பெற்றுத்தராது. “ஊடக தர்மத்தின்” அடிப்படையிலேயே பின் ஊட்டங்களை அனுமதித்தாக நாம் நினைக்கலாம் ஆனால் “ஊடக தர்மத்திலும் பார்க்க மானிட நேயம் முக்கியமானது. முரண்பாட்டு அரசியல் களங்களில் நாம் எதையும் சாதிக்க முடியாது.

காரைநகர் பிரதேச சபை எடுத்த தீர்மானம் பற்றி நாம் இங்கு பேசவில்லை. காரைநகரிலிருந்து காலிக்கு வந்து வெற்றிலையும், புகையிலையும் விற்கும் சுதந்திரமும் இந்த நாட்டில் தான் உள்ளது என்பதை நாம் சற்று நிணைவுபடுத்த விரும்புகிறோம்.

நடந்து முடிந்தது கொடுமையான குற்றம். அதற்கான அதிகபட்ச தண்டைனையை பெற்றுக்கொடுப்பதில் நாம் சிரத்தை கொள்வோம். “கற்பழிப்பிற்கும் காமத்திற்கும் இனரீதியான அரசியல் சாயம் பூசுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்”. குற்றம் என்பது குற்றம் நிகழ்ந்த சூழ்நிலை, குற்றம் செய்ததற்கான காரணம் போன்றவற்றை வைத்தே தீர்மானிக்கப்படல் வேண்டும். நாம் பிரச்சனைகளை நேர்மையாகவும், நடுநிலையாகவும், மனித நேயத்துடனும் கையாள, உள்வாங்க பழகிக்கொள்ளல் வேண்டும். இதுவே சமுதாயங்களின் வலுவான பிணைப்பிற்கு வழிகோலும். நன்றி.

No comments:

Post a Comment