Saturday, May 26, 2012

'அமைச்சருக்கு எதிரான மன்னார் கத்தோலிக்கர்களின் கண்டனக் கூட்டத்துக்கு அனுமதி'



இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மன்னார் ஆயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படும் சில கருத்துக்களுக்கு எதிராக மன்னார் கத்தோலிக்கர்களினால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு மன்னார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இத்தகைய கூட்டம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை உள்ளடக்கியது என்றும் அதனால் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று கூறி, அதனைத் தடுக்குமாறு மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்கள்.
அந்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களாக 5 கத்தோலிக்க மதகுருமார் அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்கள்.
இதனை இன்று விசாரித்த மன்னார் நீதிபதி யூட்சன் அவர்கள், கூட்ட ஏற்பாட்டாளர்களால், இந்தக் கூட்டம் தமது அடிப்படை உரிமையை உள்ளடக்கியது என்று கூறப்பட்ட வாதத்தை ஏற்று, அதனை மன்னார் தேவாலயத்தில் நடத்தவும், கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றவும் அனுமதி வழங்கியுள்ளார்.
இருந்தபோதிலும், அங்கு ஊர்வலம் ஏதும் நடத்தப்படக் கூடாது என்று அவர் உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன் அத்தகைய கூட்டத்துக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருப்பதாக கத்தோலிக்க மதகுருமார் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணியாக அண்டன் புனிதநாயகம் பிபிசியிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment