தம்புள்ளை பள்ளிவாசல் இனவாத சக்திகளால் சேதமாக்கப்பட்டதன் பின்னர், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒருவிதமான பதற்றமும் பாதுகாப்பற்ற தன்மையும் உணரப்பட்டது. இந்தப் பிரச்சினையை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆராய்வது அவசியமானது. அத்துடன் இதில் எமக்குப் பல பாடங்களும் உள்ளன.
சிங்கள மக்களையும், இனவாத சக்திகளையும் நாம் வேறு பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற செய்தியை இது மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறது. குறிப்பாக, பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாகவும் கவனமாகவும் உள்ளனர்.
தீவிரவாத சக்திகளின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு அவர்கள் பலியாகவில்லை என்பது மிகவும் சிலாகித்துச் சொல்லத்தக்கது. அதிலும் குறிப்பாக, தம்புள்ளை அமைந்துள்ள மாத்தளை மாவட்ட எம்.பி.யும் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோன் இதில் நடந்துகொண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது.
சிங்கள வாக்கு வங்கிகளைக் குறிவைப்பதை விடவும், பிரச்சினையின் உண்மைத் தன்மையை துணிவாக அவர் வெளிப்படுத்தி வருகிறார். குறித்த பள்ளிவாசல் புனிதப் பிரதேசத்திற்குள் அமைந்திருக்கவில்லை என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். அவர் காணி அமைச்சராக இருப்பது மேலதிகப் பலமாகும்.
அப்பிரதேச மக்கள் கூட, இந்த இனவாத சக்திகளை எதிர்த்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். பள்ளிவாசலை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டோர் உள்ளூர் மக்கள் அல்ல. அவர்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்பதை எல்லா ஊடகங்களுமே வெளிப்படுத்தின.
இதனால், முஸ்லிம்கள் சிங்கள மக்களை மிகவும் நன்றிக்குரியவர்களாக பார்க்கும் ஒரு மனநிலை வளர்ந்துள்ளது. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு சூழ்நிலையாகும். இவ்வாறான நல்ல இயல்புடைய பெரும்பான்மை மக்களை அனுசரித்து எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய இரட்டைக் கவனம் எமக்கு வேண்டும்.
சிங்கள பேரினவாத சக்திகளை இவர்களிலிருந்து நாம் வேறு பிரித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் எண்ணிக்கையில் சிறுதொகையினரே. சிங்கள சிவில் சமூகத்தினரை தமது இனவாதப் பொறிக்குள் சிக்கவைக்க முழு மூச்சாய் செயற்படும் இந்தத் தீவிரவாதிகளை பலவீனப்படுத்துவதற்கான பொறிமுறைகளே எமக்கு அதிகம் தேவைப்படுகின்றன.
எதிர்ப்பை அமைதி வழியில் வெளிப்படுத்துவதே சிறந்தது. வன்முறையோ கலகங்களோ அழிவையும் இழப்பையுமே தந்துகொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, எமது பொருளாதார இலக்குகள் குறிவைத்துத் தாக்கப்பட்டிருப்பதை கடந்த கால அனுபவங்கள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.
ஆர்ப்பாட்டங்களையும் கண்டன ஊர்வலங்களையும் நடத்துவது தவறல்ல. எனினும், அவை கைமீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. எல்லாவற்றிலும் நமக்கு கூடுதல் கவனம் அவசியம். பொதுத் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலம் எமது மூல உபாய நகர்வை மேலும் கூர்மைப்படுத்தலாம்.
எமது வழக்கமான எதிர்ப்பு வடிவங்கள் சில வரையறைகளுடன் சுருங்கி விடுகிறது. விரிவான கண்ணோட்டத்தில் நாம் சிந்திக்க வேண்டும். குறிப்பாக, சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்வைத் தேடுவதும் எமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதது.
சரியான தகவல்களை ஊடகங்கள் மூலம் முன்வைத்து எல்லோருக்கும் உண்மை நிலையைத் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக, எமக்குள் மட்டும் பேசிக் கொண்டிருக்காது, சிங்கள, ஆங்கில ஊடகங்களில் இதனை நாம் சிறந்த முறையில் முன்வைக்க வேண்டும். சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இம்முறை இவை ஓரளவு நடந்துள்ளன.
தம்புள்ளை விவகாரத்தில் சட்ட நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது சாதகமான ஓர் அம்சமாகும். நாட்டிலுள்ள பெருந்தொகையான பள்ளிவாசல்களின் சட்டபூர்வத் தன்மை குறித்த கேள்விகள் உள்ளன. இதுவரை பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களை உடனடியாக பதிவுசெய்ய வேண்டும். குறிப்பாக, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள்,சட்ட ஏற்பாடுகள் குறித்து அலட்சியம் செய்யுமாயின், அதன் பின்விளைவுகள் பாரதூரமாய் அமையும்.
தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியாவை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு முஸ்லிம்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவிப்பதன் பின்னணியும் இதுதான். இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி,நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களை இடமாற்றவோ அகற்றவோ இது வழியேற்படுத்தி விடும். இதன் காரணமாகவே ஒட்டுமொத்த சமூகமும் இவ்விடயத்தில் மிகவும் உறுதியாக உள்ளது.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் நழுவிச் செல்லும் போக்கையே கைக்கொள்கிறது. ஜனாதிபதியிடமிருந்து இதுவரை ஒரு கண்டன அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எந்தப் பக்கத்தையும் சாராது செயற்படுவோம் என்று தகவல் திணைக்களம் ஒப்புக்கு ஒரு அறிக்கையை விட்டிருக்கிறது -அவ்வளவுதான்.
பொறுப்பு வாய்ந்த ஒரு அரசாங்கம் இவ்வாறு மௌனமாக இருக்க முடியாது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் இதுவரை கைதுசெய்யப்படவுமில்லை. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இந்த பள்ளிவாசலின் சட்டபூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது. இவர்களது கருத்தியலே இதற்குப் பின்னணியாக உள்ளது.
ஹெல உறுமயவையும் சிங்கள இனவாத சக்திகளையும் திருப்திப்படுத்த ஓர் அரசாங்கம் தேவையில்லை. மக்களைத் திருப்திப்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் அச்சத்தையும் பாதுகாப்பற்ற தன்மையையும் உணர்ந்து செயற்படும் கவனம் அரசுக்கு இருக்க வேண்டும்.
இரகசிய நிகழ்ச்சி நிரலோ பக்கச்சார்போ இல்லாமல் இப்படி மௌனம் சாதிக்க முடியாது என்ற கருத்தே பொதுத் தளத்தில் நிலவுகிறது. பிரதமரின் பொய்யான அறிக்கை இந்த கருத்துக்கு மேலும் தூபமிட்டுள்ளது. பந்து இப்போது ஜனாதிபதியின் கையில் தான் உள்ளது. அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நீண்ட நெடுங்காலமாக சிங்கள இனவாத சக்திகளின் முதல் இலக்காக தமிழ் சமூகமே இருந்தது. இப்போது முஸ்லிம் சமூகத்தை நோக்கி அது தனது கொடுங்கரங்களை விரிக்கத் தொடங்கியுள்ளது. இது நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது ஒன்றும் புதிதல்ல. எதிர் காலத்தில் இது மேலும் தீவிரம் பெறப்போகிறது என்பதை இந்த சம்பவம் தெளிவாக முன்னறிவிக்கிறது. ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கும் சில சர்வதேச சக்திகளின் திருவிளையாடல்களும் இதற்குப் பின்னே உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான தகவல் யுத்தம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கென பல இணையத் தளங்கள் உருவவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்கள்,பொய்யான செய்திகள், போலியான வியாக்கியானங்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.
சிங்கள சிவில் சமூகத்தை முஸ்லிம்களுக்கு எதிரான திசையில் திருப்பும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே எமக்கு ஒரு செய்தியையே திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது. அதுதான், சிங்கள இனவாத சக்திகளின் குறி இப்போது நம்மை நோக்கித் திரும்பியிருக்கிறது என்பது.
சிங்கள மக்களையும், சிங்கள இனவாத சக்திகளையும் வேறு பிரித்து நோக்கி, கவனமாக அணுகும் பக்குவமும் முதிர்ச்சியும் வேலைத் திட்டமுமே இப்போது நமக்குத் தேவை. இதனை அறிவுபூர்வமாக எதிர்கொள்வதற்காக எம்மைத் தயார்படுத்துவோம்.
Thanks: சிராஜ் மஷ்ஹூர் - Meelparvai
No comments:
Post a Comment