Friday, August 31, 2012

சோனக தெருவில் நான் - “சொல்வதை தவிர வழியில்லை”



து ஒரு ரமழானின் மாலை. மஹ்ரிபின் நேரம் கடந்தாயிற்று. கவ் போய் படத்தில் மெதுவாக நடந்து வரும் கிளின்ஈஸ்ட்வூட் போல் நானும் நடந்து கொண்டிருந்தேன். அவர்வாயில் இருக்கும் ஹவானா சுருட்டுக்கு பதிலாக என் காதில் நொக்கியா போன். அடிப்படையில் நானும் ஒரு அந்நியன் போலவே நான் பிறந்த தெருக்களில் நடந்தேன். எல்லாமே அந்நியப்பட்டு போனது போல வெறுமைமிக்க நிலை. அருகில் ஒரு தேனீர் கடை. அதில் நோன்பு மாசம் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் “வேணாம் மச்சான் வேணாம்....” என்ற கானா பாடல் ஒரு வித உற்சாகமூட்டுவதாக கலகலத்தது. அதன் கிரக்கத்தில் சில முஸ்லிம் இளைஞர்கள்.  வீதியிலிருந்த அந்த தேனீர் கடையினுள் நுழைந்தேன். கிளின்ஈஸ்ட்வூட்டை கொலை வெறியுடன் பார்க்கும் கொள்ளைகாரர்கள் போல் என்னையும் சிலர் வெறித்தார்கள்.

நோனா மார்க் டின்பாலில் ஒரு டீ ஓடர் செய்தேன். சுற்று முற்றும் பார்த்தேன். யார் முகமும் சிரிப்பதாக இல்லை. புலிகள் எம்மிடமிருந்து எம் சொத்துக்களையும், செல்வங்களையுமே பறித்தார்கள். புன்னகைகளையும், இதயங்களையும் அல்லவே. அப்படியானால் இவர்கள் ஏன் சிரிக்கவில்லை. ஏன் பதில் ஸலாம் சொல்லவில்லை. புரியவில்லை எனக்கு. டீ குடித்ததற்கு பணம் கொடுக்க முற்பட்ட போது உரிமையாளர் கேட்டார் “ஹாஜி.... கோல்ட் லீஃப்”?. ரமழான் மாதத்தில் அதுவும் நான் கேட்காத ஒன்றை அவர் தர முயல்கிறார். வேண்டாம் என்றேன். “அவர் பென்சன் தான் பத்துவார்” என்ற குரல் நான் வெளியேறிய பின்னர் நக்கலாக ஒலித்தது.

எதிர்புறத்தில் இருவர் போதையில் இருந்தனர். வைட் சுகரா இல்லை ப்றவுன் சுகரா என்று தெரியவில்லை. கண்கள் மேலே செல்ல செல்ல அவர்கள் அந்தரத்தில் பயணம் செய்தார்கள். இன்னும் நம் சமூகத்தை பிடித்து ஆட்டிய போதை பழக்கம் போகவில்லை. அது நம் சமூகத்திற்கு எப்போது அறிமுகம் ஆனது?. இதுவும் சதக்கதுல் ஜாரியாவா? என்று ஒரு முல்லாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது.

சில வேளைகளில் முல்லாக்கள் கூட அதனை ஆம் என்று சொல்லிவிடலாம். நேற்றைய தினம் பெரியகடையில் ஒரு முல்லாவை கண்டேன். அவர் பரக்கத்திற்காக தமிழர் ஒருவரின் கடையில் பாத்திஹா ஓதி விட்டு முஸ்லிம் ஒருவரின் கடையின் படி ஏறுகிறார் பாதிஹா ஓத. வியாபார முல்லாக்கள், அரசியல் முல்லாக்கள் என பல ரகத்தினர் உள்ளனர்.

என் உள்ளம் காலச்சக்கரத்தின் வேகத்தில் 23 வருடங்கள் ரிவேர்ஸ் கியர் போட்டது.
 செம்மார் தெருபள்ளிவாசலில் சாலிஹீன் மௌலவி பித்ஆவை பற்றி அனல் பறக்க பேசுகிறார். பெரிய முஹீதீன் பள்ளியில் அப்துல் காதர் மௌலவி நண்டு ஹலால் எனும் பத்வாவை பயானாகவும், நோட்டீஸாகவும் வெளியிடுகிறார். பரகஹதெனியாவின் “சுன்னாவை பேணி நடப்போம்” என்ற நபி வழி தொழுகை பற்றிய சிறிய புத்தகம் சோனக தெருவில் விற்கப்படுகிறது. தர்ஜிமாவை வாசியுங்கள். அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள் என்று அன்றைய மௌலவி சுப்யானின் அன்றைய ஆணித்தரமான குரல். அது சோனக தெரு கண்ட வசந்த காலம். சத்தியத்தை சத்தியமாக சொன்ன நாட்கள் அவை. அன்று டொல்களிற்கு இடமில்லை. பவுன்ஸ்களிற்கும், யூரோக்களிற்கும் இடமில்லை. அராபிய ஒட்டகங்கள் கால் பதிக்காத யாழ் சோனக பூமியது.

மாஷாஅல்லாஹ். இலங்கையில் ஒரு சில இடங்களில் மட்டும் ஒலிக்க முற்பட்ட தவ்ஹீத்திய குரல்கள் அப்போதே யாழ்ப்பாணத்தில் பரவலாக ஒலித்தது. ஜமாதுல் முஸ்லிமீன் அமைப்பின் அமீர் மௌலவி நதீரை சந்தித்து வந்ந யாழ் இளைஞர்கள் என சோனக தெரு வேகமாக எழுச்சி கண்ட நாட்கள் அது. நபி வழியில் தக்பீர் கட்டிய இளைஞர்கள். தர்ஜிமாவை வாங்க அலைந்த நம்மவர்கள், அவர்களை தடுக்க முற்பட்ட தஜ்ஜாலிய சக்திகள் என சோனக தெரு சத்திய சோதனைக்காக புடம் போட தயாரான நாட்கள்.

மீண்டும் 2012 ஆகஸ்ட். இன்று நம் சமூகத்தில் எத்தனை இஸ்லாமிய சிந்தனைகள். எஸ்.எல்.டீ.ஜே.கள், ஏ.சீ.டீ.ஜே.கள், ஜம்மியாவின் சகோதர்கள், பீ.ஜே.பக்தர்கள், ஜமாத் ஏ இஸ்லாமியின் சரியான கொள்கைகளை சரியாக விளங்கியவர்கள், இஹ்வானிகள், டீ.ஏ.கள், உஸ்தான் மன்சூரின் சித்தாந்தங்களில் மயங்கி இயங்கும் இளையவர்கள், கிலாபா கனவில் செயற்படும் ஹிஸ்புகள், புல் ஸலபிகள், ஹாப் ஸலபிகள், நியோ ஸலபிகள், அல் ஹிதாயாக்கள், அவ்லாக்கியின் அன்பர்கள், மர வேர்களை கவ்வாமல் அதே வேளை எதிலும் சேராமல் இயங்கும் இஸ்லாமிஸ்ட்கள், இஸ்லாமிக் பொலிடிகள் மைன்ட்செட் உள்ள மனிதர்கள், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இயங்கும் தப்லீக் ஜமாத்தினர் என எத்தனையோ ரகமான மக்களை கொண்ட ஒரு பெரிய குடும்பமே யாழ் முஸ்லிம்கள். 

ஆனால் இத்தனை திணிசுகளான இஸ்லாமிய சிந்தனை கொண்ட மனிதர்கள் இருந்தும் கூட யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தை சீர்திருத்த முடியவில்லை. யாழ்ப்பாணம் சோனக தெருவின் கறுப்பு வரிகள் அழிக்கப்படவில்லை. சமூகங்களின் யுத்தத்தின் பின்னரான அனைத்து அவலங்களும் நிறைந்து காணப்படும் சமூகம் யாழ் முஸ்லிம்கள். அரசியல் அநாதைகளாக்கப்பட்டவர்கள். அரச நிர்வாக இயந்திரங்களால் புறந்தள்ளப்பட்டவர்கள். கொடிய அகதி வாழ்வின் பின்விளைவான பாத்திர படைப்புகள் இவர்கள்.

இந்த இஸ்லாமிய சிந்தனைகள் கொண்ட நம் சகோதரர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விரவியுள்ளனர். ஆனால் மாற்றங்கள் மட்டும் மாறாமல் அப்படியே அதே இடத்தில் உள்ளது. அந்த வகைளில் பார்க்கும் போது ஜமா அதே தப்லீக்கின் செயற்பாடு மட்டுமே சொல்லத்தக்க வகையில் உள்ளது. அவர்கள் யாழ் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்கள் தஃவாவை செய்கின்றனர். அவர்கள் எந்த இஸ்லாத்தை சொல்கிறார்கள் என்பது கேள்விக்குரிய விடயமானாலும், அவர்களது செயற்பாட்டிற்கு நிகராக நான் மேற்சொன்ன எந்த இஸ்லாமிய இயக்கங்களும் நிற்க போவதில்லை.

நாம் எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?. இந்த மில்லியன் டொலர் கேள்விக்கான சரியான பதில் யாராலும் வழங்கப்படவில்லை. சோனக தெரு எனும் வார்த்தைகளின் உயிர்ப்பு இன்னும் சில தசாப்தங்களில் இல்லாமல் போய்விடுமோ என்று எண்ணும் அளவிற்கு சோனக தெரு மெல்ல தன்னை இழந்து வருகிறது. இருக்கும் யாழ்ப்பாண சோனகர்கள் மத்தியில் உள்ள ஒரே ஒரு பொதுவான விடயம் “தமக்குள் முரண்படுவது”. 

நிறுவனங்கள் வருகின்றன. தோப்பு போட்டவர்கள் வருகிறார்கள். தாடி வைத்தவர்கள் வருகிறார்கள். வீடியோ எடுக்கிறார்கள். கிழக்கு மேற்கு என கைகளை ஆட்டி கதைக்கிறார்கள். வேனில் ஏறி செல்கிறார்கள். நாளை ஹஜ் வரும். கூடவே குர்பானும் வரும். மாடுகள் வரும். குளத்தடியில் வைத்து அறுப்பார்கள். அறுக்க முன்பும், அறுத்த பின்பும் அரபியிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பனர்களின் பின் நின்று போட்டோ எடுப்பார்கள். யாழ்பாணத்தின் சிறந்த ஸ்டுடியோவை தேடிசென்று போட்டோ கிராபரை வரவழைத்து ஸ்டில்ஸ் எடுப்பார்கள். பேர்சனலாக தங்கள் முகத்தை சற்று குளோசப் ஏங்கிளில் எடுக்குமாறு ரகசியமாக காதில் ஓதுவார்கள். போட்டோ கிராபரும் தலையை ஆட்டுவார். அறுக்கப்படும் மாடுகள் போல.

அறுத்த மாட்டை சொப்பிங் பேக்கில் போட்டு, சமூகத்தை வரிசையாக நிறுத்தி பங்கிடுவார்கள். மிகுதி இறைச்சியில் பெருநாள் சாப்பாடு போட்டு, ஆமிக்கும் கொடுத்து மகிழ்வார்கள். நல்ல விஷயம். ஆனால் இதில் எந்த இடத்தில் சமூகம் புணரமைக்கப்படுகிறது என்பது எனக்கு விளங்கவில்லை. கடந்த முறை ஒரு நண்பர் வழங்கப்பட்ட இறைச்சி பார்சை எனக்கு ஸ்கைபில் காண்பித்தார். அதில் அந்த இறைச்சியை போட்டிருந்த சொப்பிங் பேக்கில் கூட நாங்கள் தான் கொடுத்தோம் எனும் விளம்பரம் செய்ய்பட்டிருந்தது. அதாவது செல்ப் அட்வர்டைஸிங். குர்பானிக்கான நேம் அன்ட் லொகோ. அரபிகளிடம் அடுத்த முறை தங்களை புக்கிங் செய்து கொள்ளும் பிஸ்னஸ் டெக்னிக். எந்த சுவரில் தலையை முட்டுவது என்று தெரியவில்லை. முட்டினாலும் என்னை யூதன், சுவற்றில் தலையை முட்டி வழிபடுகிறான் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

நாளைய ஹஜ்ஜின் குர்பானியில் நான் வன்னியின் காட்டு மாடு கொடுத்தேன், நான் நாம்பன் கொடுத்தேன், நான் ஜேர்ஸி கொடுத்தேன், நான் அவுஸ்ரேலியன் கவ் கொடுத்தேன் என சொப்பிங் பேக்கில் ஸ்டார் மாக்கினுள் பிரிண்ட் போட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. நாளை இதே மாடுகள் நாலு காலில் எழுந்து நின்று, எந்த காலை எவன் சூப் வைத்து குடித்தான் என ஷாஹித்களாக இவர்களிற்கு சாட்சி சொல்லப்போகின்றன மறுமையில்.

யாழ்ப்பாண முஸ்லிம்களை மையமாக வைத்து ஒரு பெரிய படம் காட்டப்படுகிறது. பல இன்வெஸ்ட்மென்கள் செய்யப்படுகின்றன. இங்லிசில், பிரெஞ்சில், டொச்சில், அரபியில் என பல பட பிரிண்ட்கள் எடுக்கப்படுகின்றன. அவை அந்தந்த தேச யாழ் முஸ்லிம் ஒன்று கூடல்களில் ஸ்லைட் சோக்களாக காட்டப்படுகின்றன. பவர்பொயின்டில் அழகாக சோனக தெருவின் வர்ணங்கள் மாற்றப்படுகின்றன. ஆனால் அதன் உண்மையான நிறம் பற்றி பேசவோ, வரையவோ யாரும் இல்லை. 

நான் திரும்பி பார்க்கிறேன். பழைய ஹம்பர் சைக்கிளில் எனக்கு அறிமுகமானவர் வந்து தோளை தொட்டார். அவர் கேட்டார், “தம்பி அந்த டீக்கடைக்கு போனீர்களா” என்று. ஆம் என்றேன். உங்களை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறார்கள். “தவ்காரன் வந்து விட்டான், அவனை போட்டு பிடிக்க வேண்டும்” என்று.....  எனக்கு இப்போது புரிகிறது. ரெஸ்டோரெண்டில் கிளின்ட் ஈஸ்ட்வுட்டை வெறித்தனமாக பார்த்த கொள்ளையர்கள்  போல இவர்கள் ஏன் பார்த்தார்கள் என்று. சிலரிற்கு நான் புலி. சிலரிற்கு நான் அல்-காய்தா, இவர்களிற்கு நான் தவ். அவ்வளவு தான் மேட்டர். பொய்களின் புணைவுகளில் மிதக்கும் சாக்கடை வார்த்தைகள் இவை.

அல் குர்ஆன், சுன்னாவை யாழ் சோனக தெருவில் நிலை நிறுத்த நாம் முயலும் இன்றைய பொழுதுகளில் நமக்க வழங்கப்படும் பட்டங்கள் இவை. அந்த புனித பணியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அது அதன் இலக்கை அடைந்தே தீரும்.

என்னிலும் சிறந்தவர்கள், என்னிலும் தகைமையும், புலமையும் மிக்கவர்கள், என்னிலும் பன்மடங்கு செயற்திறன் உடையவர்கள் எம் சமூகத்தில் பலர் உருவாகியுள்ளார்கள். அவர்களின் காலடித் தடங்கள் சோனக தெருவை முத்தமிடும் போது என்ன பட்டத்தை வழங்கப்போகிறார்கள்?. கொஞ்சம் மிச்சம் வைத்து கொள்ளட்டும்.

பழைய சோனக தெருவின் காட்சிகளை கொண்டு வந்து நிறுத்தி, உணர்வுகளை உசுப்பேத்தி, கண்களை கசியவைத்து, பழைய கனவுகளை அசைபோட வைத்து பணம் கறக்கும் மந்திரம் தெரிந்தவனல்ல நான். உண்மையான சோனகதெருவின் படிமங்களை எடுத்துரைப்பவன். பவுடர் பூசிய, உதட்டில் சாயம் பூசிய சமுதாயத்தின் முகங்களின் பின்னாலுள்ள சமூகத்தின் அவலட்சண முகங்களை போகஸ் செய்பவன்.

கிளிண்ட்ஈஸ்ட்வூட்டின் குதிரை அரிசோனாவின் பாலை புளுதியில் மெல்ல மறைவது போல, நான் ஏறிய பளூன் பஸ்ஸும் மெல்ல யாழ்ப்பாணத்தை விட்டு நகர்கிறது. பின் கண்ணாடியால் திரும்பி பார்க்கிறேன், எனது சமூகம் அம்மணமாக அப்படியே நிற்கிறது. ஆனால் தான் ஆடைகள் தரித்த பொய்யான சந்தோஷத்தில்.......

 Abu Maslama

No comments:

Post a Comment