Sunday, September 09, 2012

அழியாத கோலங்கள் - Moor Street Dreams..



மைதியான வீதிகள். அங்குமிங்கும் சைக்கிளில் திரியும் பல சாதியினர். நிம்மதியாக படுத்து கிடக்கும் நாய்கள், உற்று பார்க்கும் மாடுகள், புதர் மண்டி போயுள்ள வீடுகள். மல்டி கலர்களில் தீந்தை பூசப்பட்ட பள்ளிவாசல்கள், காலையில் சுப்ரபாதம் இசைக்கும் தமிழர் வீடுகள். மாலையிலும் கண்டசஷ்டி கவசம் பாடும் அதே வீடுகள். எங்கோ ஒரு மூலையில் கத்தோலிக்க கீதமிசைக்கும் மெல்லிய சத்தம். கிட்டு மாமாவின் வாகன ஓட்டத்தை நினைவு படுத்தும் சீறிச்செல்லும் டாட்டா படி வேன்கள், அதன் பின்பக்கத்தில்  சாய்ந்தவாறு சிகரட் புகைக்கும் மனிதர்கள், மனைவியை ஹீரோ ஹொண்டாவில் ஏற்றியவாறு எம்மை ஸ்கேன் செய்யும் பொட்டு வைத்த மத்திய வர்க்க தமிழர்கள். வன்னியில் இழந்த காலுடன் முச்சக்கர சைக்கிளில் பொலிதீனால் மூடிய வடையை விற்கும் அந்த வயோதிபர்.........
இதையெல்லாம் நாம் நிற்கும் யாழ் சோனக தெருவில் காணலாம். சில நிமிடங்களிலேயே வாழ்வின் வெறுமை தெளிவாக தெரியும். தனித்து விடப்பட்ட பிரமை மனதை வியாபிக்கும். உடனே நம் மூளை சில வரிகளை எழுத தொடங்கும். “யாழ்ப்பாணம் அவ்வளவுதான்”. “இனி சரியே வராது”. “குப்பாரின் இராஜ்ஜியம் தான் நடக்கிறது”. “பிள்ளை குட்டிகளுடன் வாழ்வதை நினைத்து பார்க்கவே முடியாது”, “மீள் குடியேற்றம் என்பது முடியாத விடயம்”, “பேசாமல் சோனக தெருவை மறக்க வேண்டியது தான்”.  இப்படி எத்தனையோ தீர்மானங்கள் ஒரு கணப்பொழுதுகளில் மனதில் நிறைவேற்றப்படும். இதற்கு புலம் பெயர்ந்தவன், பெயராதவன் என்ற எந்த விதிவிலக்கும் இல்லை.


ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருபது வருடங்கள் என்பது பெரிய பங்கு. இந்த பங்கினை முழு சமூகமும் பங்கு வைத்துள்ளது யாழ்ப்பாணத்தில். புலிப்பயங்கரவாதத்தின் பின் விளைவால் இந்த சமூகம் அந்த இரண்டு தசாப்தங்களை இழந்துள்ளது. சிறுவர், இளையவர், நடும வயதினர், முதியவர் என பல தரப்பினரும் இதில் காவு கொள்ளப்பட்டுள்ளனர். இன்று பயங்கரவாதம் செயலளவில் அழிக்கப்பட்டு, பாதைகள் திறக்கப்பட்டு, சோனக தெருவிற்கான மின்சாரம் வழங்கப்பட்டு, பாதைகள் துப்பரவு செய்யபட்டும் அங்கு சென்று வசிப்பதென்பது நடக்காத காரியமாக மாறியுள்ளது. இலங்கையின் அனைத்து பிரதேச மக்களும் தத்தமது காணிகளில் குடியிருக்க முற்பட்டுள்ள நிலையில் சோனகதெரு மட்டும் முரண்பட்டு நிற்கிறது.

சோனக தெருவின் மாய வர்ணங்களை அனுபவித்து அதில் லயித்து போன எம் மூத்த தலைமுறையினர் அவற்றை கடந்த இருபது வருடங்களாக அசைபோட்ட நினைப்பிலேயே மரணித்து போயினர். மரணித்து கொண்டும் இருக்கின்றனர்.

சோனக தெருவை தாக்கிய கொள்ளை நோய், வெள்ளக்கடற்கரையில் தர்ஹா கட்டியது, ஏ40 யில் மனோகரா போனது, வண்டிலை வாளால் வெட்டியது, கற்குள கலவரங்கள், கோணாந்தோட்ட சமரின் தோல்வி, அரியம், அரசு, பொன்னையா போன்ற தளபதிகளிற்கு எதிரான சண்டைகள், குளத்தடி கிரனைட் வீச்சு, ஜலீல் மாஸ்டரின் தியாக மரணம், குர்ஆனை வீதியில் வீசி கும்பலாக எரித்தது, மறந்து போன ஜுனைதீன், காணாமல் போன மீராமையன், சுப்பையாவின் சலுன், செல்லத்துரையின் வண்ணான் குந்து, ரவ்ப் காக்காவின் அரசியல் வகுப்புக்கள், பால்கார அன்னம்மா அக்கா, மீன்கார தங்கப்பவுன், சிங்கர் டீச்சர், மூக்குபோனி ஹனிபாவின் மானிறச்சி, வதுத் காக்காவின் எதரை பழம், கந்தசாமியின் போலி, முடிதிருத்தும் வல்லிபுரம், பதுருசமானின் ஜுஸ், மம்மமீரான் ரஸீனின் ஐந்துலட்சம் குளிசை,  என அவர்கள் அசைபோடும் விஷயங்கள் ஏராளம். தங்கள் கனவு தேசத்தை காணாமலே அவர்கள் காலமாகி போய்விட்டார்கள்.

தெற்கிலங்கையில் நாம் இன்றும் இரண்டாம் தர மனிதர்களாகவே வாழ்கிறோம். ஒரு சிறிய சச்சரவில் கூட நியாயம் நம் பக்கம் இருந்தாலும் அநியாயாம் செய்தவறே நியாயவாதியாக மக்களால் புரியப்படுவார். “வந்தான் வரத்தான்” என்ற சொல்லோ அல்லது “பனங்கொட்டை” என்ற ஓர் ஒற்றை சொல்லோ எங்கள் எல்லா நியாயங்களையும் அடித்து சென்று விடும். வீதியில் நிமிர்ந்து கம்பீரமாக நடக்க முடியாத ஒரு ஜட வாழ்க்கை. பணமிருந்தும், பதவியிருந்தும் நாம் ஏதோ ஒரு விதத்தில் தாழ்ந்து தான் செல்கிறோம். இந்த ஆன்ம வலியை சுமந்தவாறே எம் முன்னோர் பலர் மண்ணில் புதைந்து போய் விட்டனர்.

இந்த நிலை இங்கு மட்டுமல்ல ஐரோப்பிய தேசங்களில் உள்ள நம்மவரிற்கும் இதே நிலை தான். வெள்ளையனிற்கு இவர்கள் இழி ஜாதிகள். அவனிற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத வாழ்க்கை. சொல்லப்போனால் இவர்கள் அங்கு மூன்றாம் தரப்பினர். தமிழர்களிற்கும் இவர்கள் “சும்மா” தான். ஜெக்கட்களும், ஜேர்கின்களும், நைகீ பூட்ஸ்களும் இவர்களை எம்முன் பிரமாண்டமாக காட்டினாலும் அவர்களின் யதார்த்த வாழ்க்க அவலமானது. 

வாழ்க்கையை ரெஸ்டோரண்ட் ஓனரிற்கும், சுப்பர் மார்க்கட் முதலாளிக்கும், பெட்றோல் செட் மனேஜரிற்கும் பங்கு வைத்து விட்டு மிகுதி வாழ்க்கையில் இரவா பகலா என நிச்சயிக்க முடியாத நிலையில் குடும்பம் நடத்தும் இவர்கள் நிலை பரிதாபமானது. நினைத்தவாறு வாழ முடியாமல் உழலும் ஸிப்ட் முறை இயந்திரங்கள் இவர்கள்.

இலங்கை வாழ் யாழ் முஸ்லிம்களானாலும், புலம்பெயர் தேசம் வாழ் யாழ் முஸ்லிம்கள் ஆனாலும் இவர்களின் இளைய சமூதாயம் இதற்கு விதி விலக்காக விளங்க வேண்டும் என்பது காலத்தின் தேவை. இவர்களின் உள்ளத்தில் தவ்ஹீதிய கொள்கைகள் உரமாக விதைக்கப்படல் வேண்டும். ஆனால் நம் துர்அதிர்ஷ்டம் இலங்கை வாழ் யாழ் முஸ்லிம்களாகட்டும், புலம் பெயர் நம்மவரின் இளைய தலைமுறையாகட்டும். முதாலாளித்து பூட்சூவா சிந்தனை கொண்ட தலைமுறையாக உருவெடுத்தள்ளனர். செல்வங்களை அறுவடை செய்து மனிதங்களை தொலைத்த புதிய தலைமுறையை எண்ணுகையில் மாற்றங்களின் அவசியமும் அவசரமும் புரிகிறது. 

சுவிங்கம் சப்பியவாறு, சன்கிளாசை நெற்றியில் உயர்த்திவிட்டு, ஹன்டிகெம்மில் சோனக தெருவை வீடியோ பண்ணும் எம்மவர்களை நாம் பெருமிதமாக புருவம் உயர்த்தி பார்க்கிறோம். சாப்பாட்டிற்கு அழைக்கிறோம். இவர்களின் வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைக்கவில்லையே என ஏங்குகிறோம். மேலைத்தேய நாடுகளில் நம் சமூகத்திற்காக தினமும் உழைப்பவர்கள் எத்தனை பேர்? தியாயகம் செய்ய துணைபுரிபவர்கள் எத்தனை பேர்?. விரல் விட்டு எண்ணிவிடலாம் இவர்களை. அப்துல் வதுத் மௌலவிக்கும், அகார் மௌலவிக்கும், யூசுப் முப்திக்கும், கூடும் கூட்டம் எம் சமூகம் தொடர்பான ஆக்கபூர்வமான தொடரான சந்திப்புக்களை செய்வதில் மட்டும் எப்போதும் பின்னிற்கிறது. 

இலங்கைக்கு வந்து மீண்டும் அங்கிருந்து உம்ராவிற்கும், ஹஜ்ஜிற்கும் சென்றால் செய்த பாவங்கள் அழிந்து விட்ட நிம்மதி. ஸ்கொலர்ஷிப்பிற்கு காசு கொடுத்தால் ஸதகதுல் ஜாரியாவின் நிம்மதி, மாடு அறுக்க காசு அனுப்பினால் சமூகத்திற்கு செய்ய வேண்டியதை செய்து விட்ட நிம்மதி. இதையொத்த நிலையே லோக்கல் சொசைட்டியிலும் காணப்படுகிறது. ஒரு சமூகம் தன்னை இழக்கிறது. ஒரு தனி மனிதன் தன் சமூகத்தை இழக்கின்றான். ஆக மொத்தத்தில் யாழ் சோனகதெரு முஸ்லிம்கள் என்பவர்களின் முகவரி, மை பேனையால் எழுதப்பட்ட பொவுன்டின் முகவரியாக மெல்ல களையதுவங்கியுள்ளது. 

இன்னும் ஓரிரு தலைமுறைகள் மட்டும் போதும் நம்மை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போக. இந்த நிலை அகழ ஒரே வழி இஸ்லாம். சரியான அகீதாவில் இஸ்லாத்தை புரிந்த ஒரு தலைமுறை எம் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும், எல்லா நாடுகளிலும் உருவானால் அது ஒரு போதும் தன் முன்னைய யாழ் பரம்பரையை மறக்காது. அவர்கள் செய்யாத பல நல்ல விடயங்களை இந்த இளைய சமுதாயம் செய்யும். அதற்கான பாதையை நாம் இப்போதே வெட்டுத்தல் வேண்டும்.

இல்லையென்றால்.....

“இஸ்ரேலில் யூதர்கள், பாலஸ்தீனர்கள் தவிர மூன்றாவது தேசிய இனம் ஒன்றுள்ளது. பெதூயின் என்றழைக்கப் படும் நாடோடி சமுதாயம். இவர்கள் அரபுப் பழங்குடியின மக்கள். பெதூயின் பழங்குடியின மக்கள், தெற்கு இஸ்ரேலில் உள்ள நாகேவ் பாலவைனப் பிரதேசத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். நாகேவ் மட்டுமல்ல, அருகில் உள்ள எகிப்தின் சினாய் பாலைவனமும் பெதூயின் மக்களின் வாழிடமாகும்”. இந்த நிலை யாழ்ப்பாண சோனக தலைமுறைக்கும் உருவாகும். ஒரு நாடோடி கூட்டமாக பல சமூதாயங்களின் களப்பிற்கு உட்டபட்ட தங்கள் சுயத்தை இழந்த மனிதர்களாக. அதை கற்பனை பண்ணி பார்க்க முடிந்தால் தீர்மானியுங்கள் என்ன செய்ய வேண்டும் என்று......

No comments:

Post a Comment