Sunday, September 09, 2012

யாழ் தர்ஹா வழிபாடு - "மீண்டும் இணைவைப்பாரளர்கள்"



ண்ணை வீதியில் திரும்பியவுடன் சில்லென்ற காற்று முகத்தில் படும். பின்னர் அந்த காற்று திறந்து விட்ட சட்டை பட்டன் வழியாக தவழ்ந்து நெஞ்சின் முடிகளில் கிளுகிளுப்பூட்டும். ஆங்கிலத்தில் சொல்லும் “Refresh” எனும் வார்த்தையின் முழு அர்த்தம் அந்த பண்ணை வீதியில் மட்டும் கிடைக்கும் பாக்கியம் எல்லோரிற்கும் கிடைப்பதில்லை. இரு புரமும் கலப்பு கடல், அதில் துள்ளி விளையாடும் கீலி மீன்கள். நடுவே நெடிய பாதை. உரசி செல்லும் மினி பஸ். இடைக்கிடை தென்படும் பேர்கூஸன் ட்ரக்டர். மோட்டார் சைக்கிளிலும், புஸ் பைக்கிளும் செல்லும் காய்ந்த கறுத்த தீவான்கள்....
பிள்ளையார் கோவிலடி திருப்பத்துடன் சிட்டிவேசன் மாறுகிறது. வெள்ளை மணல் குன்றுகள். சாதாலை வாசம், நுரைக்கும் வெள்ளை கடல் அலைகள். முதலில் டவ்டி போரா பாய் ஷியாக்களின் வணக்கஸ்தலம், பின்னர் மஸ்தான் குருபாபாவின் வணக்கஸ்தலம் அதையும் தாண்டி வந்தால் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை பள்ளிவாசல் எனும் தர்ஹா.

இந்த பிள்ளையார் கோவிலிற்கும், ஷியாக்களின் தலத்திற்கும், முன்னாள் கஞ்சா மஸ்தான் குருபாபாவின் இறையில்லத்திற்கும், நம்மவர் வழிபடும் அவ்லியாவின் சமாதிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. எல்லாமே ஒன்றுதான். அப்படியென்றால் வழிபடும் பக்தர்களான இவர்கள் எல்லோரும் எதனை ஷஹாதத் கலிமாவாக நம்புகின்றனர். 

“யாழ்ப்பாணம் வெள்ளை கடற்கரை பள்ளிவாசலில் கொடியேற்றம்” என்ற தலைப்பில் முன்னதாக ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. சற்று அவதானித்து பார்த்தால் “யாழ்ப்பாணம் வெள்ளை கடற்கரை தர்ஹாவில் கொடியேற்றம்” என்பது எமக்கு புலப்படும். தர்ஹாவுடன் சேர்த்து பள்ளிவாசல் கட்டப்பட்டு அதில் தொழுகையும், ஜும்மாக்களும் நடை பெறுகின்றன. பேருவளை ஹெச்சிமலை பள்ளிவாசலலை ஒத்தசாயலில் இடப்பக்கம் பள்ளிவாசலும், வலப்பக்கம் தர்ஹாவும் வெள்ளைகடற்கரையில் அமைந்துள்ளன.

கொடியேற்றி, தமாம் செய்து, கொடியிறக்கி, நெய்சோறு சமைத்து அதை பிலாவில் உண்பதை வாடிக்கையாக செய்து வந்த கூட்டத்தின் அடுத்த தலைமுறை இப்போது இந்த அநாச்சாரத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளது.

இதமான காற்று, பதமான கடல்நீர், நிசப்பதமான சூழல் என அந்த பிரதேசம் இதற்கு எல்லாவிதத்திலும் ஏற்ற ஒரு இடம் என்பது உண்மை. இதற்கு மட்டுமல்ல, இன்னும் பலவற்றிற்கும் ஏற்ற இடமாக அது மாற்றப்படலாம். பனைமரத்தடியில் பரராஜசிங்கத்தின் சுருட்டை இளசுகள் குடித்து பார்க்கலாம். கொஞ்சம் தள்ளி போய் சாட்டியில் வைத்து கள்ளு குடிக்கலாம். பனங்கள்ளு. லிமிடட் எடிசன்.

மனிதனை மனிதன் வழிபடும் தர்ஹா கலாச்சாரம் யாழ்ப்பாண முஸ்லிம்களால் முன்னெடுக்கப்படுவது கவலைக்குரியது. ஒரு சிலரே இன்று இதில் முனைப்பாக இருந்தாலும் வருங்காலங்களில் இது பல்கி பெருக நிறைய வாய்ப்புள்ளன. யாழ்ப்பாணம் பார்க்க வரும் தெற்கிலங்கை முஸ்லிம்களிற்கு, குறிப்பாக ஹுப்புல் அவ்லியா எனும் அவ்லியா வணங்கிகளிற்கு இப்போது இன்னொரு ஜெருஸலெம் வெள்ளக்கடற்கரை. நீண்ட நெடிய பயணம் செய்து அவ்வலியாவின் அருள்களை பெறும் ஒரு வித உளவியல் பேதமைக்கு அவர்கள் அடிமையகாப் போகிறார்கள்.

நாம் மாறவில்லை. 23 வருடங்கள் கழிந்தும் அதே அநாச்சாரம் அதே வடிவில் கொண்டாடப்படுகிறது. இந்த அநாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த எமது முன்னவர்கள் மறைந்து போய் விட்டார்கள். அவர்களின் வாரிசுகள் டயோட்டாக்களில் வந்து அதற்கு மீளுயிர் அளித்துள்ளனர். யவ்முல் கியாமாவில் விளங்கும் எல்லா கொடியேற்றங்களின் அர்த்தங்களும்...

No comments:

Post a Comment