Tuesday, January 24, 2012

மர்கசின் சிபாரிசுடன் வந்தால் விஸா




இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்க பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் மார்க்க பிரசாரகர்களை இரு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தமை தொடர்பாக இன்று திங்கட்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேராவுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை நடத்துவதற்கு இலங்கை வரும் தப்லீக் ஜமாஅத் இயக்கத்தவர்கள், கிராண்ட்பாஸிலுள்ள அதன் தலைமையகமான மர்கசின் சிபாரிசுடன் வந்தால் விஸா வழங்குவது என இணக்கம் காணப்பட்டதாக முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி தெரிவித்துள்ளார் என்று தமிழ் மிரர் தெரிவித்துள்ளது .
எனினும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இரு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்ட 161 பேர் தொடர்பில் அந்த தகவலில் தெரிவிக்கப்படவில்லை. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள், புத்தசாசன விவகார அமைச்சின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய விவகார திணைக்கள் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி, அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி, மற்றும் அதன் பிரமுகர்கள், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், மற்றும் தப்லீக் ஜமாஅத் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர் .
தப்லீக் ஜமாஅத் அமைப்பு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்றமையினால் குறித்த அமைப்பின் சிபாரிசுடன் வருபவர்களுக்கு விஸா வழங்கப்படும் எனவும் போதனைகளை நடத்துவதற்கு இலங்கை வரும் தப்லீக் ஜமாஅத் இயக்கத்தவர்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மற்றும் கால எல்லை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி தெரிவித்துள்ளார்.
சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ளதை போன்று குறித்த அமைப்பினர் எந்தவித தீய செயல்களிலும் ஈடுபடவில்லை என கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்ததாக பணிப்பாளர் நவவி மேலும் குறிப்பிட்துள்ளார் 

No comments:

Post a Comment