Thursday, March 22, 2012

இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 4668 பேர் பதிவு செய்துள்ளனர்


makkaஇவ்வருடம் முதற் தடவையாக  ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுமென அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி அண்மையில் அமைச்சின் அலுவலகத்தில் ஹஜ் விடயங்களைத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், இம்முறை ஹஜ் கோட்டா 2800 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால் பதிவு செய்துள்ள எல்லோருக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகமே. 2008 ஆம் ஆண்டு 5000ஹாஜிகளும் 2009 ஆம் ஆண்டு 5800 ஹாஜிகளும், 2010 ஆம் ஆண்டு 5800 ஹாஜிகளும், 2011ஆம் ஆண்டு 4000 ஹாஜிகள் ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

ஆனால், இவ்வருட ஹஜ் கோட்டா மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்பவர்களை இம்மாதம் (மார்ச்) 15 ஆம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொண்டோம் அதற்கமைய மார்ச் 15 ஆம் திகதி வரை 4668 பேர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரையுமே அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இவ்வாறு பதிவு செய்தவர்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தில் பதிவு செய்த ஒழுங்கு முறைப்படி பதிவிலக்கமும் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பதிவு செய்தவர்கள் எமக்கு வழங்கப்பட்ட கோட்டா அடிப்படையில் ஹஜ்ஜை மேற்கொள்ளமுடியுமெனத் தெரிவித்தார்.
பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை சிலர் போலியாக தயாரித்து அனுப்பி வைத்ததால் ஏமாற்று நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக பதிவு செய்தவர்களுக்கு மீளளிக்கப்படக்கூடிய 25ஆயிரம் ரூபாவை வங்கியில் செலுத்துமாறு வேண்டினோம். இது பதிவுக்கட்டணம் அல்ல. கோட்டா பகிர்ந்தவுடன் இவர்களது பெயர்பட்டியலோடு முகவர் நிலையங்களுக்கோ அல்லது விண்ணப்பத்தாரிகளுக்கோ மீள ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார். மரணித்த தங்களது தாய்,தகப்பன்சகோதரர்கள் போன்றவர்களுக்காக கடமையை நிறைவேற்றுவதற்கான விண்ணப்பங்களும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. போதியளவு கோட்டாக்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் இவ்விண்ணப்பங்கள் கருத்திற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.

அதேநேரம் இதுவரை எந்தவொரு முகவர் நிலையமும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இதுவரை பதியப்படவில்லை. இவ்வருட ஹஜ் முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக இன்று 20 ஆம் திகதி தனது தலைமையில் தூதுக்குழு ஒன்று மக்கா செல்லவுள்ளதாகவும் அங்கு ஹஜ்ஜூக்கு பொறுப்பான அமைச்சரையும் அதற்கு பொறுப்பாக இருக்கின்ற தலைவர்களையும் சந்தித்து இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது ஒரு புனித கடமையாக இருப்பதால் சுய இலாபம் கருதி தேவையற்ற கருத்துக்களை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்துவது கடமையை அகௌரவப்படுத்துவதற்கு சமம் என தான் கருதுவதால் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலமாக முன்வைத்தால் அதனை எமது திட்டமிடலின்போது கருத்தில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முஸ்லிம் சமய பண்பாட்டவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவியும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
meelparvai

No comments:

Post a Comment