Tuesday, March 20, 2012

அமெரிக்காவின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் யாரின் நலனுக்காக?


விடயத்துக்குள் வருவதற்கு முன்னர்.....
1990 களில் தென்னிலங்கையில் யாராவது ஒரு தமிழர் அல்லது முஸ்லிம் பொது இடத்தில் தமிழ் வார்த்தையைப்
பேசினாலே, அவர் சிங்களவர்களால் வெறுப்புடன் முறைத்துப் பார்க்கப்பட்டார்.
இன்றைய நாட்களில் தென்னிலங்கைச் சிங்களவர்களோ தமிழரை அல்லது முஸ்லீமைக் கண்டால் திக்கித்
திக்கி தமிழ் பேசி மகிழ்கின்றனர். இலங்கை நிறையவே மாறிவிட்டது.
தமிழர்களே இல்லாத ஊர்களிலெல்லாம் தமிழிலே பெயப்பலகைகள் காணப்படுகின்றன,
எழுத்துப் பிழைகளுடன்....
விடயத்துக்கு வருவோம்.
இலங்கையில் போர் முடிவடைந்து 3 வருடங்களாகிவிட்டன.
மக்கள் அனுபவித்த அச்சங்களும், துயரங்களும், கெடுபிடிகளும்,சோதனைகளும், சோதனைச் சாவடிகளும் நீங்கி,
இயல்பு வாழ்க்கை திரும்பி மக்கள், மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு நிலையில்,
அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்ற
கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது.

தமிழக மக்களில் அதிகமானவர்களும், புலம் பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களில் குறிப்பிடத்
தக்க எண்ணிக்கையினரும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப் படுவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இலங்கையில் வாழும் சாதாரண இலங்கைத் தமிழர்கள் மத்தியில் குறித்த தீர்மானம் தொடர்பில் குறிப்பிடத்தக்க எவ்வித
எதிர்பார்ப்புகளும் இல்லை. புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் மட்டும், இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி, புலிகள் இயக்கத்தின் தோல்விக்காக
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பழிவாங்கலாம் என தப்புக் கணக்குப் போடுகின்றனர்.

குறித்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுவிட்டால், இலங்கைக்கு ஐ.நா படைகள் வரும்,அமெரிக்க படைகள் வரும், மகிந்த ராஜபக்ஷ
கைது செய்யப்படுவார், இலங்கை இராணுவம் நிராயுதபாணி ஆக்கப்படும், தமீழீழம் உதயமாகும், மறைந்திருக்கும் பிரபாகரன் வெளியில் வந்து தமிழீழத்தை பொறுப்பேற்பார் என்றெல்லாம் தீர்மானத்தை, அதன் நோக்கமே புரியாமல் அது நிறைவேற்றப் படுவதை
விரும்புகின்றவர்களில் ஒரு சாரார் நினைக்கின்றனர். இது வெறும் கற்பனையே தவிர வேறில்லை.

அமெரிக்கா குறித்த தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றத் துடிப்பதன் நோக்கம் என்ன?
அமெரிக்கா மனித உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு, ஆகவேதான் அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது என்று சொன்னால்
ஜிம்மி காட்டார் மட்டுமல்ல, பில் கிளிண்டனும், ஜோர்ஜ் புஷ்ஷும் கூட நம்ப மாட்டார்கள். சர்வதேச அளவிலான அமெரிக்காவின் மனித உரிமை மீறல்
செயல்பாடுகளும், முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களும் தகவல்களும் எல்லோரும் அறிந்த ஒன்று.

இன்று உலகில் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் ஆகியவற்றில் முன்னணி வகிப்பது அல் கைதா தீவிரவாத அமைப்பு அல்ல, மாறாக அமெரிக்காவும் அதன்
கூட்டளிக்களும்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் 16 சாதாரண அப்பாவி பொது மக்களை சுட்டுக் கொன்ற
அமெரிக்க சிப்பாயை அமெரிக்கா எப்படி அந்நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றியது என்பது நாம் அனைவரும் அறிந்தது. இவ்விடயத்தில் எதோ
சில கண்துடைப்புகள் காத்திருக்கின்றன என்பதை இப்பொழுதே சொல்லிவிடலாம்.

அதேபோல கடந்த நாட்களில் இஸ்ரவேல் நடத்திய தாக்குதலில் கருகிச்சிதைந்த அப்பாவி பாலஸ்தீனியர்களின் சடலங்களை ஊடகங்களில்
தாராளமாகவே கண்டோம். ஈராக்கில் நடக்கின்ற அக்கிரமங்கள் நமக்கு அன்றாட தகவல்கள். அமெரிக்காவுக்கு உண்மையிலேயே
மனித உரிமை தொடர்பில் அக்கறை இருக்குமென்றிருந்தால், 3 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த இலங்கை யுத்தம் தொடர்பான
விடயங்களை கிளறிக்கொண்டிருப்பதனை விட, இஸ்ரவேல், ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, பர்மா,சோமாலியா விவகாரங்களில் அவசரமாக செயல்படுவதற்கு
எவ்வளவோ இருக்கின்றது.

அமெரிக்கா தமிழ் மக்கள் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக மேற்படி தீர்மானத்தை நிறைவேற்ற முயன்றுள்ளதா என அலசுவதே
அவசியமற்றது. ஏனெனில்  இலங்கையின்பழைய இரத்தம் தேய்ந்த வரலாற்று நிகழ்வுகள் நம்முன்னே வெள்ளிடை மலையாக உள்ளன.
மேற்படியான ஒரு  தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு, இலங்கையின் போர் வரலாற்றில் நிறயவே சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் அவ்வாறா
சந்தர்ப்பங்களில் யாருமே இவாறான தீர்மானங்கள் பற்றி பேசிக் கூட இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
இலங்கைத் தீவெங்கும் இரத்தம் வடிந்த நாட்களில், ''இலங்கையின் உள்நாட்டு விவகாரம், இலங்கை இறைமையுள்ள நாடு'' என்று சொல்லி
இரத்தக் களறியையும் குண்டுவெடிப்புகளையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தன அமெரிக்காவும் கூட்டாளிகளும்.

1983 ஆம் ஆண்டு ஆடியில்இனக்கலவரம் வெடித்து, நாடுமுழுவதும்  தமிழர்களுக்கு எதிரான  வன்முறைகள்
கட்டவிழ்த்து விடப்பட்ட பொழுது, அப்பொழுதைய ஜனாதிபதி
ஜே ஆர் ஜெயவர்த்தன அவர்கள் பொலிசாருக்கு விடுமுறை வழங்கி, வன்முறை கட்டுப்படுத்தப்படுவதை திட்டமிட்டே தாமதித்தார்.
அப்பொழுதே இவ்வாறான ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தால், எவ்வளவோ விடயங்கள் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.
ஆனால் யாருமே முன்வரவில்லை. ஏனெனில் அது அமெரிக்காவுக்கு தேவையான ஒன்றாக இருந்தது.

இலங்கையில் யுத்தமும், உயிரிழப்புகளும் 1983  ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்து விட்டன.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்றது 2005 ஆம் ஆண்டு இறுதியிலாகும்.
அனால் இன்று இலங்கையரல்லாத மக்கள் இலங்கையில் நடைபெற்ற
அனைத்து யுத்த நிகளுகளுக்கும் மகிந்த ராஜபஷவே பொறுப்பு என்பது போல நம்ப வைக்கப் பட்டுள்ளனர்.

சில பேர்  நம்பிக்கொண்டிருப்பது போல அல்லது நம்ப வைக்கப்பட்டுள்ளது போல
 மகிந்த ராஜபக்ஷவுக்கும்,இலங்கை இராணுவத்துக்கும் தமிழர்களைக் கொல்லவேண்டும்  என்றொரு
எண்ணம் இருந்திருக்குமானால், அதனை முள்ளிவாய்க்காலில்  போய்த்தான் செய்ய வேண்டுமா,
வெள்ளவத்தயிலேயே செய்திருக்கலாமே?

மகிந்த ராஜபஷ ஜனாதிபதியாக பதவியேற்று முன்றரை வருடத்திலேயே, முப்பது வருட யுத்தத்ததை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார். ஆனால் இன்று இலங்கை யுத்தம் பற்றியும், மனித உரிமை பற்றியும்
அலட்டிக் கொல்பவர்கலேல்லாம், முப்பது வருடமுமே மஹிந்த ராஜபக்ஷதான் ஜனாதிபதியாக இருந்து
போல முழுக் குற்றச் சாட்டுக்களையும் அவர் தலையில் போட முயல்வது,அவர்  யுத்தத்தத்தை முடித்துவிட்டாரே
என்ற ஆதங்கத்திலாகும்.

உண்மையைச் சொன்னால், அமெரிக்காவுக்கு தமிழர்கள் மீதோ, மனித உரிமைகள் மீதோ எந்த அக்கறையும் இல்லை.
பின்னர் ஏன் தீர்மானத்தை நிறைவேற்ற இவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பானதே.
இலங்கையில் இவர்களுக்கு தேவை யுத்தம்,வன்முறை, குண்டுவெடிப்பு...
அதில் தமிழனும் சிங்களவனும் முஸ்லீமும் சாக வேண்டும்...

இவர்களும், இவர்களின் கூட்டாளிகளும், இரு தரப்புக்கும் ஆயுதம் விற்க வேண்டும், அதேபோல
இலங்கை, இந்தியா போன்ற  நாடுகள் பொருளாதார, அறிவியல் துறையில் முன்னேறக் கூடாது என்ற
மேலாதிக்க சிந்தனையே தவிர வேறில்லை.
.
மகிந்த ராஜபஷ யுத்தத்தை இவ்வளவு இலகுவில் முடித்துவிடுவார் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.
அதனால் தான், கடைசி நேரத்தில், யுத்தத்தை மீண்டும் ஒரு காலத்தில் தொடர்வதற்கு ஏதுவாக பிரபாகரனையும், புலித் தலைமையையும்
காப்பாற்றுவதற்காக  அமெரிக்க கடற்படைக் கப்பலை அனுப்ப முன்வந்தார்கள், ஆனால்
அது நடப்பதற்கு முன்னதாகவே, எல்லாம் முடிந்துவிட்டிருந்தன.

தனது ஆப்கானிஸ்தான், ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு திரட்டுமுகமாக அமெரிக்கா ஆடிய ஒரு நாடகத்தில்,
புலிகளை பயங்கரவாத அமைப்பென்று பட்டியலிட்டு அமெரிக்காவில் தடை செய்ததுவிட்டு,
யுத்தம் முடியப் போகின்றதே என்ற ஏக்கத்தில், தனது தடையும் பொருட்படுத்தாது அமெரிக்கா புலிகளின் தலைவர்களை
காப்பாற்ற கப்பல் அனுப்ப முன்வந்தது. ஆனால்,லிபிய ஜனாதிபதி கடாபி விடயத்தில் அமெரிக்கா கப்பல் அல்ல,
கார் ஒன்றைக்  கூட அனுப்ப முன்வந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தை தொடர ஆளில்லை என்பதை உணர்ந்து இலங்கை அரசோடு நண்பனாகி, நாட்டின் வளங்களை எல்லாம் சுரண்ட
அமெரிக்கா போட்ட திட்டங்கள், அரசாங்கத்தின் சீன, இந்திய நட்புகள் காரணமாக
சாத்தியமாகவில்லை. திருகோணமலைத் துறைமுகமோ, பேசாலையின் எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சி பணிகளோ கூட
அமெரிக்காவுக்கு கிடைக்கவில்லை.


மேலும் இலங்கையில் நிலைமை நிறையவே மாறிக்கொண்டு போகின்றமையும், ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுள்ளது போல
 மக்கள் மனங்களில் இன, மத , மொழி வேறுபாடுகள் குறைந்து நட்பு உருவாவதும்  இவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
இனிமேலும் பொறுக்க முடியாது, எப்படியாவது குட்டையைக் குழப்ப வேண்டும், மீண்டும் பகைமையை வளர்க்க வேண்டும் என்று
இப்பொழுது களத்தில் குதித்துவிட்டனர். இப்பொழுது இவர்கள் நீண்டகால அடிப்படையில், மீண்டுமொரு போருக்கான
விதைகளை விதைப்பதில் முனைப்பு காட்டுவார்கள்.

அமெரிக்கா தனது திட்டத்தில் ஆரம்ப கட்ட வெற்றியை  ஓரளவுக்கு பெற்று விட்டது என்றே கூற வேண்டும்.
அதன் வெளிப்பாடாக பழைய படுகொலை வீடியோக்களும், புகைப்படங்களும் தூசி தட்டி எடுக்கப்பட்டு, ஊடகங்களில்
ஊர்வலம் போக வைக்கப் பட்டுள்ளன. இது மக்கள் மனங்களில் விரிசலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அமெரிக்கா எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

அடுத்ததாக வடக்கு கிழக்கில் ராணுவத்தை குறைக்க வேண்டும், அல்லது அகற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார்கள்.
பின்னர் அமெரிக்க  உளவு நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டில் உள்ள புலி ஆதரவாளர்களையும், முன்னால் போராளிகளையும்
உசுப்பேற்றி மீண்டும் ஒரு யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு திட்டம் போடுவார்கள். கொரியா, வியட்நாம், ஜெர்மனி என்று
பிரித்து வைத்து மொத வைத்து சுகம் காண்பது அமெரிகக சதிகளில் ஒன்று. இலங்கையை அவ்வளவு இலகுவில் விட்டு விடுவார்கள்
தோன்றவில்லை.

இலங்கை விடயத்தில் மட்டும்தான் இப்படி என்று நினைத்துவிடக் கூடாது.
நாளை காஷ்மீர் பிரச்சினை முற்றுமுழுதாக தீர்ந்து, இந்தியா பாகிஸ்தான் என்பன
மிக நெருக்கமான நட்பு நாடுகளாக மாறி விட்டன என்று ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டால்,
இதே அமெரிக்கா காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், ஏன் குஜராத்
கலவரங்கள் தொடர்பாகவும் கூட ஐ. நா.மனித உரிமை பேரவையில், இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக
தீர்மானங்களைக் கொண்டுவர தயங்காது.

மக்களுக்கு வெளிச்சம் தேவை,
திருடனுக்கோ இருட்டுத் தேவை என்பார்கள்.
அதே போலத்தான்,இலங்கை  மக்களுக்கு அமைதி தேவை,
அமெரிக்காவுக்கோ யுத்தம் தேவை.

-சுவைர் மீரான்
.

No comments:

Post a Comment