தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடந்தால் சர்வதேசம் தலையிடும் ஐ.தே.க. எம்.பி.
தமிழ் மக்கள் மீது தாக்குதல் அல்லது அடக்கு முறை பிரயோகிக்கப்படுமானால் சர்வதேச நாடுகள் இலங்கையில் நேரடியாக தலையீட்டை மேற்கொள்ளும் என ஐ.தே.க. கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பாக மட்டுமல்ல 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்ந்தே நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மேலும் தெரிவிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமைச்சர் சம்பிக்க ரணவக்க முழுமையாக வாசிக்கவில்லையென்றே நினைக்கிறேன்.
பிரபாகரன் பயங்கரவாதம், இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பாக மட்டும் இவ் ஆணைக்குழு ஆராயவில்லை. மாறாக யுத்தத்திற்குள் மறைந்து கொண்டு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் கடத்தல், ஊடகவியலாளர்கள் கொலை ,அரசியல்வாதிகளின் கொலைகள், கடத்தல்கள், 17 ஆவது திருத்தம் நீக்கம், சுயாதீன ஆணைக்குழுக்கள், ஜனநாயகம் போன்ற விடயங்கள் தொடர்பில் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இறுதிக் கட்ட யுத்தம் வரையான கால கட்டத்தை ஆராய்ந்தே அறிக்கையையும் பரிந்துரைகளையும் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் சம்பிக தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் அடிப்படைவாதம் இவ் அறிக்கைக்கு தவறான அர்த்தத்தை கற்பித்து சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வை ஊக்குவித்து இனக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
அவ்வாறான நிலையேற்பட்டு தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமானால் இலங்கை மீது சர்வதேச நாடுகள் நேரடியாக தலையிடும் ஆபத்து உருவாகும்.
எனவே இனக்கலவரத்தை தோற்றுவிக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆரம்பக் கட்டத்திலேயே “ஆப்பு’ வைக்க வேண்டுமென்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.
ஜெனிவா முடிந்தவுடன் கூட்டமைப்பை தடை செய்து சம்பந்தன் உட்பட சகலரையும் கைது செய்ய வேண்டும்… தேசப்பற்றுள்ள தேசிய தலைவர் குணதாச அமரசேகர
ஜெனிவா பிரச்சினை முடிந்த கையோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்து சம்பந்தன் தலைமையிலான அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய இராணுவம் தொடர்பில் உள்நாட்டில் விசாரணைகளை நடத்தலாம் .வெளிநாட்டு தலையீடு அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமென அரச தரப்பினர் ஜெனிவாவில் உறுதிமொழி வழங்கியுள்ளது தொடர்பாக கேட்ட போதே டாக்டர் குணதாச அமரசேகர இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில் :
ஜெனிவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக காய்களை நகர்த்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கப் பிரதிநிதியுடன் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வைத்துக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
தனி இராஜ்ஜியத்தின் அரசியல் தலைவரென்ற ரீதியில் சம்பந்தனின் செயற்பாடு அமைந்துள்ளது. இது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். அத்தோடு நாட்டுக்கு எதிரான தேசத்துரோகச் செயலாகும்.
எனவே ஜெனிவாவில் எமக்கு சார்பாகவோ, எதிராகவோ நிலைமைகள் உருவாகலாம். அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். பின்னர் யுத்த காலத்தில் கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய உதவிகள் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் நாட்டுக்கு எதிரான தேசத் துரோகச் செயற்பாடுகள் தொடர் கதையாகி விடும்.
நல்லிணக்க ஆணைக்குழு
அரசாங்கம் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
இவ் ஆணைக்குழு தனது வரையறையை மீறி அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்தியுள்ளது. இதனை ஏற்க முடியாது.அதேவேளை இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் இதில் வெளிநாடுகளின் தலையீடுகள், கண்காணிப்புக்கள் இருக்கலாகாது.
இலங்கையில் ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ஐவரைக் கொண்ட சுயாதீனக் குழுவை அமைத்து சாட்சியங்களைப் பெற்று இராணுவத்தினர் விசாரணை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு குற்றவாளி யார் நிரபராதி யாரென்று தீர்மானிக்க வேண்டும்.
ஏனைய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலேயே தீர்மானங்கள் எடுக்க வேண்டும். அதில் தலையிடும் உரிமை நல்லிணக்க ஆணைக்குழுவிற்குக் கிடையாது என்றும் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
No comments:
Post a Comment