Wednesday, March 28, 2012

கனவுகளை சுமக்கும் சோனவர் - சோனக தெருவின் ரகசியங்கள்



யாழ் சோனக தெருவில் காணிகள் விலை போகும் நிலை பூரணமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை. காணி உரிமையாளரும், இடைத்தரகரும் இடத்தை வாங்கும் அந்நிய மதத்தினரை சூட்சமமான முறையில் தொடர்பு கொண்டு நிலங்களின் விலை தொடர்பான பேரம் பேசலில் பரவலாக ஈடுபடுகின்றனர். மெல்ல மெல்ல சோனக தெரு மாற்றம் பெறுகிறது. வெளிப்படாத சிலுவைகளும், வெளிப்படாத லிங்கங்களும் அதனுள் மறைந்து கிடக்கின்றன. மெத்தனமான மீள்குடியேற்றம் என்பது யாழ்ப்பாண முஸ்லிம்களை அவர்களது பூர்வீக இடங்களில் இருந்து வருங்காலங்களில் பெருமளவு இல்லாமல் பண்ணிவிடத்தக்கது. நாம் இன்னும் பழைய யாழ்ப்பாண கற்பனைகளை சுமந்தவர்களாக வாழ்கிறோம். செயற்படுகிறோம். அந்த கனவுகளை ஒரு நாளில் காண்பதற்கும் முயல்கிறோம். நடந்து முடிந்த ஒன்று கூடல் அதன் ஒரு வடிவமே.

உலகம் மாறிவிட்டது. அது ஒரு கிராமமாக தன்னை சரி செய்து கொண்டுள்ளது. அன்று சைக்கிள் மிதித்த நாம் இன்று ஹீரோ ஹொண்டா ஓடுகிறோம். புதுப்பள்ளி சந்தியில் புலிகளின் அறிவித்தல் பலகையில் செய்தி படித்த காலம் மாறி லப்டொப்பில் இணையங்களை வேட்டையாடுகிறோம். எம் வாழ்க்கை, நடை, உடை, பாவனை என எல்லாமே மாறி விட்டது. ஏன் நம் மனைவியும், குழந்தைகளும் கூட தெற்கிலங்கையின் வாழ்வியல் போக்கிலோ அல்லது ஐரோப்பிய நாகரீகத்திலோ சரணடைந்து விட்டனர். எல்லாம் மாறினாலும் நம் யாழ்ப்பாண கனவுகள் மட்டும் மாறவில்லை. அது அந்த பழைய சோனக தெருவை மையமாக வைத்து வடிவம் கொண்டுள்ளது.

யாழ்ப்பாண சோனகதெருவில் முஸ்லிம்களின் மீள் வருகை தொடர்பான சவால்கள் பற்பல. தனி ஒரு மனிதனாலோ அல்லது ஒரு குழுவினாலோ இவை யனைத்தையும் முகம் கொடுக்க முடியாத நிலை. சிலர் சிலதை செய்ய முடியும். மற்றையதை ஏனையவர்கள் செய்ய வேண்டும். நம் சமூகத்தின் நலனிற்காக தமது விலைமதிக்க முடியாத நேரங்களை செலவு செய்து அயராது உழைக்கும் மனிதர்களிடம் நேரடியாக அனுகி வினவினால் பிரச்சனைகளின் பாதாளங்கள் துல்லியமாக விளங்கும்.

“இனி சோனக தெரு சரிவராது. பிள்ளைகள் தான் வருமா? அல்லது குடியிருக்குமா?. அங்கு என்ன தான் இருக்கிறது. கொழும்பில் எவ்வளவு செய்யலாம். எவ்வளவு உழைக்கலாம். முடிந்து போய் விட்டது. இடைக்கிடை வந்து போகலாம் அவ்வளவு தான். காலம் வரும் போது இருக்கிற வீட்டையும் நல்ல ஒரு விலைக்கு விற்க வேண்டும். சோனக தெரு கெட்டு விட்டது. கீழ்தரமான பழக்க வழக்கங்கள். ஒரு நாளும் சரிவராது.”


“சோனக தெரு மாதிரி வருமா?. பேசாமல் பிள்ளைகளின் கருமங்களை முடித்து விட்டு மனைவியுடன் யாழ்ப்பாணத்தில் போய் குடியிருக்க வேண்டும். உழைப்பது நிம்மதியாக இருக்க. அந்த நிம்மதி யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. இப்போதே செட்டில் ஆகலாம் சில பிரச்சனைகளை முடிக்க வேண்டியுள்ளது. கையில் காசு வந்தால் ஒரு வீட்டை சோனக தெருவில் வாங்கி போட வேண்டும். என்ன தான் இருந்தாலும் சோனக தெருவானிற்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. யாழ்பாபணம் தான் வாழ சரி.”


எம்மிடையே மாறுபட்ட இரு கருத்துக்கள். அதை சுமந்தவர்களாக நாம் வாழ்கிறோம். நான் அவனில்லை எனும் பாணியில் இருக்கிறது எமது உள்ளமும் நடத்தைகளும். இரண்டையும் நாம் தான் சொல்கிறோம். இரண்டையும் நாம் தான் நம்புகிறோம். இந்த மனோ நிலை சரியானதாக இல்லை. தெளிவான பார்வை, துல்லியமான தகவல்கள், திடமான முடிவு என்பன நமக்கு தேவை.

யாழ் சோனக தெரு தொடர்பில் நாம் தெளிவான தீர்மானங்களை மட்டுமே எடுக்கிறோம். அங்கு நிலவும் பிரச்சனைகள், வரவிருக்கும் ஆபத்துக்கள் பற்றி ஆராய்ச்சி, பகுப்பாய்வுகளை நாம் செய்வதில்லை. சமகால சூழ்நிலைகளை மையப்படுத்தி எடுக்கும் முடிவுகளால் எதிர்கால வரவிருக்கும் பிரச்சனைகளை சரியாக கணிக்க முடியாது போய்விடுகிறது. இதற்கு சில காரணங்கள் இருந்தாலும் பழைய யாழ்ப்பாண கனவை சுமந்தவர்களாக நாம் இருப்பதும் ஒரு காரணியாகும்.

நாளைய முஸ்லிம்கள் மீள்குடியேறும் யாழ்பாண சோனக தெரு நவீனத்துவம் பொருந்தியதாக எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய திட்டங்கள் எம்மிடம் இல்லை. சூழ் நிலை கைதிகளாக இருந்து கொண்டு முடிவுகள் எடுப்பதனால் அந்த சூழு் நிலைகள் மாறும் போது இந்த முடிவுகள் தோற்றுப்போய் விடுகின்றன.

எம்மிடம் இரு தெரிவுகளே உள்ளன.

ஒன்று எமது பிரதேசத்தை மறப்பது. வரலாற்றில் சமூக, அரசியல், இராணுவ, பொருளாதார, மார்க்க காரணங்களிற்காக இனங்கள் மற்றும் இனக்குழுக்கள் தங்கள் பூர்வீகங்களை துறந்து இன்னொரு இடத்தை தேர்ந்து தம்மை முற்றாக மாற்றிக்கொள்வது. இவ்வாறான நிகழ்வுகள், சேர்பியாவின் தென்கிழக்கு பகுதி, கொசோவாவின் எல்லைகள், குரேசியாவின் மலைப்பகுதி, ரஷ்ய சைபீரிய பாலைவனத்தையண்டிய பகுதி என முஸ்லிம்களால் பல இடங்கள் கைவிடப்பட்டுள்ளன. எதிர்கால சந்ததியின் நலன்களிற்காக இந்த வரலாற்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான உலமா விளக்கங்கள் பல உள்ளன. இவை பற்றியும் எம்மிடம் தெளிவுகள் இருத்தல் அவசியம். 

மற்றையது எமது மண்ணை கட்டியெழுப்புவது. ஒரு நவீன பிரதேசமாக மாற்றுவது. இஸ்லாமிய அடிப்படைகளை தாங்கி நிற்கும் சமூகமாக மாறுவது. இலங்கையில் இதுவரை இல்லாத முன்மாதிரி இஸ்லாமிய கிராமம் பற்றிய சிந்தனைகள் பற்றியது அது. பழைய கனவுகளை உதறிய நிலையில் சம கால வாழ்வியல் ஒழுங்குகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறான ஒரு சமூக, அரசியல் ஒழுங்கை அறிவு, ஆராய்ச்சி என்பவற்றின் அடிப்படையில் எம் வாழ்வை உருவாக்குவது. இது சற்று சிரமமான வேலை. இதில் தரமும் தகுதியிமுள்ளவர்கள் தாமாக முன்வந்து செயற்படல் வேண்டும்..

நாம் இதில் ஒன்றை ஒரு முகமாக தேர்ந்து முடிவெடுத்தல் அவசியம். அழிவுகளிற்கும், பிரச்சனைகளிற்கும் மத்தியிலான சோனக தெருவின் அடைதல்கள் என்ன? என்பது பற்றிய சரியான பார்வை எம்மிடம் வரல் அவசியம்.. அல்லது இந்த இழப்புக்களையும் தாண்டிய சோன தெருவின் இருப்பின் அடிப்படைகள் என்ன என்பது பற்றிய தெளிவு அவசியம். இதில் ஒன்றினை நாம் விரைவாக அமைப்பு ரீதியாக சிந்தித்து செய்தல் காலத்தின் தேவையாகும்.

அபூ அப்துல்லாஹ்.

No comments:

Post a Comment