Tuesday, March 20, 2012

அழுத்தங்களின் பின்னணியே மன்மோகன் சிங்கின் முடிவிற்கு காரணம் - இலங்கை

இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை கவுன்சிலின் தீர்மானத்தை ஆதரிக்கத் தயார் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பதன் பின்னணியில் இருந்த அழுத்தங்களை இலங்கையால் புரிந்துகொள்ள முடியும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

மன்மோகன் சிங்கின் அறிவிப்பை இலங்கை அரசு எப்படி பார்க்கிறது என்பது குறித்து பீபீசி செய்தி சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை அரசின் சார்பில் தம்மால் பேச முடியாது என்று ரஜீவ விஜேசிங்க தெளிவுபடுத்தினார். 

அதேசமயம், எந்த அழுத்தங்களின் அடிப்படையில் மன்மோகன் சிங்கின் அறிக்கை வந்துள்ளது என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் கூறினார். 

“இந்த பிரச்சினையின் பின்னணியில் இருக்கும் அனைத்து விஷயங்களையும், ஐநா மன்றத்தில் உறுப்பினர்கள் விவாதிக்கும் போது விளங்கிக் கொள்வார்கள் என நான் நம்புகிறேன்”, என அவர் கூறியுள்ளார். 

இலங்கை அரசைப் போலவே, இலங்கையிலுள்ள அனைத்து குடிமக்களின் நலன்களிளும் இந்தியாவுக்கும் அக்கறை உள்ளதாக தாம் கருதுவதாகவும், அதை மனதில் வைத்துப்பார்க்கையில், ஐநா மன்றத்தின் இந்த குறிப்பிட்டத் தீர்மானம் இலங்கை குடிமக்களின் ஆக்கபூர்வமான முன்னேற்றத்துக்கு வழி வகுக்கப்போவதில்லை என்று தாம் கருதுவதாகவும் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

மேலும், இலங்கை குடிமக்களுக்கு முன்னேற்றங்கள் ஏற்படக்கூடாது என்று நினைக்கும் சக்திகளே இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டிய ரஜீவ, அத்தகைய சக்திகளை வெற்றிபெற விடக் கூடாது என்று கூறியுள்ளார். 

அந்த அடிப்படையில் பார்க்கும்போது இலங்கையில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் ஏற்படக் கூடாது என்கிற நிலைப்பாடு உள்ளவர்களுடன் இந்தியா ஒத்துப் போகாது என்றே தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

“இப்படியான தீர்மானங்களின் மூலம் ஐநா சபையின் செயல்பாட்டில் மாற்றங்கள் வந்துவிடும் என்றும் நாங்கள் கவலைப்படுகிறோம். எனவே இப்படியான தீர்மானங்கள் தொடர்பிலான கொள்கைகள் குறித்தும் எமக்கு கவலைகள் உள்ளன. இதேமாதிரியான கருத்துக்களையே இந்தியாவும் அண்மையில் வெளிப்படையாக விடுத்திருந்த அறிக்கைகளில் கூறியிருந்ததையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும்”, என்றார் ரஜீவ விஜேசிங்க. 

அதேசமயம், இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை தாம் ஆதரிக்க மாட்டோம் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டுவந்த இந்திய அரசு, தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்றே தாங்கள் கருதியதாக தெரிவித்தார். 

“இலங்கை மக்கள் அனைவரின் நலன்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா கூறுவதை நாங்களும் விரும்புகிறோம். இந்தத் தீர்மானத்தில் மூலம் அது நடைபெறும் என்று இந்தியாவில் சிலர் ஆழமாக நம்புகிறார்கள். எனவே இந்த தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் அது நடைபெறுமானால் ஆதை நாங்கள் வரவேற்கிறோம் என்றுதான் இந்தியா கூறுகிறது. எனினும் இந்தியா முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கைகளுடன் சேர்த்தே மன்மோகன் சிங்கின் நிலைப்பாட்டை நாம் பார்க்க வேண்டும்”, என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த பின்னணியில், இலங்கை என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறதோ, அதை இந்தத் தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்தால் சிறப்பாக செய்ய முடியும் என்றே தாம் கருதுவதாகவும், எனவே, ஐநா மன்றத்தில் இந்த தீர்மானம் மீதான விவாதங்கள் எப்படி போகப் போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். 
Thanks - Adedaruna

No comments:

Post a Comment