இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை ஆதரித்து இந்தியா வரலாறு காணாத துரோகத் தனத்தை செய்துவிட்டது. இதனை இலங்கை ஒருபோதும் மன்னிக்காது. அதேபோன்று இதற்கான விளைவுகளை இந்தியா மிக விரைவில் சந்திக்கும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்
நல்ல நண்பனை இழந்த இந்தியாவுடன் ஏனைய நாடுகளும் நட்பை வைத்துக் கொள்ள விரும்பாது. இதுவரை காலமும் இந்தியாவுடன் காணப்பட்ட அரசியல், இராஜ தந்திரம் பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உட்பட சகல துறைகளிலுமான அந்நியோன்ய உறவுமுறைகள் இடை நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைத்துள்ள பிரேரணையை ஆதரித்து இந்தியா பெரும் தவறிழைத்து விட்டது. இலங்கைக்கு மாத்திரமல்ல ஏனைய வலய நாடுகளுக்கு மாத்திரம் அல்ல ஏனைய வலய நாடுகளுக்கு எதிராகவும் தான் இந்தியா தனது துரோகத்தனத்தை செய்துவிட்டுள்ளது. மேற்குலக நாடுகளின் தலையீடுகளுக்கு தேவையான சூழலை இந்தியா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் ஆபத்தை இந்தியாவும் விரைவில் உணரும்.
எவ்வாறாயினும் இலங்கை இந்தியாவை பெரிதும் நம்பியிருந்தது. அதேபோன்று ஏனைய நாடுகளை விட இந்தியாவுடனேயே இலங்கை அந்நியோன்னியமான நட்பை பாதுகாத்து வந்தது. இந்த புனிதமான நட்பை இந்தியா தூசித்து விட்டது. இதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது.
புலிகளை அழித்ததன் பயனை இந்தியாவும் தான் அனுபவிக்கின்றது. இல்லையென்றால் புலிகளின் குழுக்கள் இந்தியாவிலும் ஊடுருவி ராஜீவ் காந்தியைப்போன்று தற்போதைய தலைவர்கள் பலரையும் கொன்றொழித்திருப்பார்கள். ஆனால் கெட்டித்தனமாக நடந்து கொண்டு இந்தியா தனது நண்பனை வெள்ளையர்களுக்குக் காட்டிக் கொடுத்துள்ளது எனக் கூறினார்
இந்தியாவின் முட்டாள்தனம் மாபெரும் காட்டிக்கொடுப்பு… தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர
இந்தியாவின் முட்டாள் தனத்திற்கு எல்லையே இல்லை. இனி ஒரு நிமிடமேனும் பொறுக்காது இந்தியாவை இலங்கையிலிருந்து அடியோடு தூசு தட்ட வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
இந்தியாவை நம்ப வேண்டாம் என்று அழுது புலம்பினோம். ஆனால் அரசாங்கம் கேட்கவில்லை. நாங்கள் கூறியவை செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே காணப்பட்டது. ஆனால் தற்போது தான் அரசாங்கம் விழித்துக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக குணதாச அமரசேகர தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கை அரசாங்கத்தை பல முறை வலியுறுத்தி வந்தோம். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு நாம் கூறியதை கணக்கிலெடுக்கவில்லை. இந்தியா இதுவரை காலமும் இரட்டை வேடத்தையே போட்டது. இலங்கை தொடர்பில் பாரிய காட்டிக் கொடுப்பொன்றை இந்தியா செய்து விட்டுள்ளது. அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிப்பது என்பது இலங்கையை இந்தியா காட்டிக் கொடுத்து விட்டது என்றே அர்த்தம்.
ஒரு வகையில் இந்தியா தனது முட்டாள் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டது. ஒரு தடவை புலிகளுக்கு பால் ஊட்டி வளர்த்து ரஜீவ்காந்தியை பலி கொடுத்தது. தற்போது அமெரிக்காவிற்கு ஆதரவு வழங்கி பேராபத்திற்குள் விழுந்துள்ளது எனக் கூறினார்.
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியாவே யோசனை வழங்கியது… விக்கிரமபாகு கருணாரத்ன
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணையை கொண்டு வருவதற்கான யோசனையை அமெரிக்காவிற்கு இந்தியாவே வழங்கியது என்று இடது சாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
தமிழ் நாட்டின் எதிர்ப்பலைகளால் இந்தியா இலங்கையை ஆதரிக்கும் போக்கில் தளர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கைக்கு எதிரான பிரேரணை அமெரிக்காவின் தேவைக்காகக் கொண்டு வரப்பட்டதொன்றல்ல. இந்தியாவின் வழிகாட்டலுக்கமையவே இப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றதேயொழிய தமிழ் மக்களுக்கு பெரிதாக எதுவும் வழங்கப்படவில்லை.
அதேவேளை இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் கோட்பாட்டையே இந்தியா கடைப்பிடிக்கவிருந்தது. ஆனால் தமிழ் நாட்டின் கடுமையான அரசியல் அழுத்தங்களால் மன்மோகன்சிங் அரசாங்கம் தடுமாறிப் போய் இப் பிரேரணைக்கு சில திருத்தங்களுடன் ஆதரவு வழங்கத் தயாரென தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்நிலைப்பாட்டை வரவேற்கின்றோம். இன்று ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான கடும் போக்கு அதிகரித்துள்ளது. எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கட்டாயம் அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.
தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்
அரசாங்கத்திலுள்ள சம்பிக்கவாலோ, விமல்வீரசன்சவாலோ தமிழ் மக்கள் மீது கை வைக்க முடியாது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். அத்தோடு இவர்களது அடிப்படைவாதத்திற்கு தென்பகுதி சிங்களவர்கள் ஒத்துழைப்பை வழங்கமாட்டார்கள். ஏனெனில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் சிங்கள மக்கள் பாரிய நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றனர். தாம் மேற்கொள்ளும் போராட்டங்களில் சிங்கள மக்களின் பங்களிப்பு இதனை பறை சாற்றியது என்றார்.
Thanks- Adiradi
No comments:
Post a Comment