நாம் அல்லாஹ்வின் அடியார்கள். அடிமைகள். அவனது பிரதிநிதிகள். இதில் எந்த வேற்றுமைகளும் இல்லை. நாம் ஆதமின் பிள்ளைகள். நாம் முஸ்லிம்கள். நாம் பிறப்பால் சகோதரர்கள். நபி முஹம்மத் ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்தினர்கள். எம்மில் பிரிவுகள் இல்லை. ஆனால் இன்றைய நாட்களில் எப்படியெல்லாம் நாம் பிரிந்துள்ளோம். நாம் எப்படியெல்லாம் பிரிக்கப்பட்டுள்ளோம்.
குப்பாரிய பூட்சூவா வர்க்கவியல் எம் சமூகத்தில் ஹாஜியார் என்ற பெயரில் உள்ளவாங்கப்பட்டுள்ளது. குப்பாரிய அரசியல் முறைமைகள் ஜனநாயகம் என்ற பெயரில் உள்வாங்கப்பட்டுள்ளது. குப்பாரிய கலாச்சார குப்பைகள் நாகரீகம் என்ற பெயரில் உள்வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறான பல விதமான உள்வாங்கள்களால் நாம் சீரழிக்ப்பட்டுள்ளோம். பல்வேறுபட்ட வகையில் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளோம். சிதறடிக்கப்பட்டுள்ளோம்.
தமிழ் பேசும் முஸ்லிம்களாகிய நாம் எப்படியெல்லாம் பிரிக்கப்பட்டுள்ளோம். இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கபூர் என நாம் சிதறியுள்ளோம். எம்மை பிரித்து நிற்பது யாரோ சில மதுக்கோப்பைகளுடன் வரைந்த சில கோடுகள். அது தானே உலக வரைபடம். துப்பாக்கிமுனையினால் வரையப்பட்ட எல்லைகள். அது தானே நாடுகள். ஆனால் நாம் இறைவனின் அடிமைகள் என்ற விதத்தில் ஒரு கூட்டத்தினர். முஸ்லிம்கள் என்ற விதத்தில் ஒரு கூட்டத்தினர். தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்ற விதத்திலும் ஒரு கூட்டத்தினர். ஆனால் பிரிக்கப்பட்டுள்ளோம். இணையவே முடியாதவாறு பிரிக்கப்பட்டுள்ளோம்.
சில ஆங்கிலேய தலைமைகள், சில திராவிட தலைமைகள், சில சீன தலைமைகள், சில சிங்கள தலைமைகள் எம்மை இறைவன் கூறிய சகோதரத்துவத்திற்கும் அப்பால் சென்று எம்மை பிரிந்து வைத்துள்ளன. இந்த பிரச்சனை தமிழ் பேசும் எமக்கு மட்டுமல்ல. உலகம் முழுதும் உள்ள முஸ்லிம் உம்மாவிற்கே ஒரு சாபக்கேடாக அமைந்துள்ளது.
நோர்வேயில் 70 பேரை சுட்டு தள்ளிவிட்டு “புதிய சிலுவை யுத்தம்” ஆரம்பம் என கொக்கரிக்கும் கொலைகாரனின் சத்தங்கள் அடங்கும் நிமிடங்களில் இதை நாம் எழுதுகிறோம். ஆயுத ரீதியிலான முஸ்லிம்கள் மீதான போர் மட்டுமே ஆரம்பமாகவில்லை. ஏனைய அனைத்து விடயங்களிலும் இன்று ஐரோப்பாவில் முஸ்லிம்கள் மீதான அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இது தான் உண்மை. இந்தியா முதல் எங்கு பார்த்தாலும் இது தான் எம் நிலை. நாம் ஆழமாகவும் அவசரமாகவும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அரசியல் வர்ணங்கள், சித்தாந்த வர்ணங்கள், கொள்கை வர்ணங்கள் என பல வர்ணங்கள் எம்மீது பூசப்பட்டு பூசப்பட்டு நாம் இன்று கறுப்பு வர்ணமாகி போய் விட்டோம். அந்த கறுப்பில் இஸ்லாத்தின் வர்ணம் மறைக்கப்பட்டுள்ளது.. வரலாறுகளை நாம் மறந்து விட்டோம். இஸ்லாமிய வரலாற்று தடங்கள் தெரியாத மனிதர்களாக நாம் மாறி நிற்கிறோம். அதிகபட்டசம் அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பிலும், உஸாமாவின் மரணத்திலும் இருந்தே எமக்கு வரலாறுகள் ஞாபகம் வருகின்றன. நாம் என்ன பொருளாதார விலங்குகளா? இரைப்பைக்காகவும், இந்திரியத்திற்காகவும் இயங்கும் சடவாத இயங்கியல் விதியில் பின்னப்பட்ட இயந்திரங்களா நாம்?.
முஸ்லிம் உம்மாவின் வேதனை புரியாத மனிதர்களாக நம் டிஷ் அன்டனாவில் புள்ளிகள் வருவது பற்றி ஆழமாக கவலைப்படுகிறோம். சரி சற்று முஸ்லிம் உம்மாவின் பிரச்சனைகளை ஆராய முற்படும் சகோதரர்கள் காஸாவுடன் அதனை மட்டுப்படுத்தி கொள்கிறார்கள். மக்காவில் சொப்பிங் கொம்பிளக்ஸில் தீ பிடித்தது பற்றி வருந்தும் எம் மீடியாக்கள் இந்தோனேசிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றி கவலை கொள்வதில்லை. பர்மிய முஸ்லிம்கள் பற்றி சிந்திப்பதில்லை. இப்படி சொல்ல எத்தனையோ உண்டு.
முஸ்லிம் சமுதாய ஒற்றுமை என்பது இன்று அவசரமாக தேவைப்படும் ஒரு விடயம். அந்த சமுதாய ஒற்றுமை என்பது குர்ஆன் சுன்னா சொல்லும் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். இறுதியாக ஒன்றை சொல்கிறேன்.
No comments:
Post a Comment